free website hit counter

நெடுங்காலம் கொண்டாடுவோம் நெடுமுடியை !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருது பெற்றவர் மலையாள திரைக்கலைஞரும் இசைக் கலைஞருமான நெடுமுடி வேணு. அவரது மறைவில் மலையாளத் திரையுலகம் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

தமிழில் கமலஹாசனின் 'இந்தியன்', விக்ரம் நடித்த 'அந்நியன்' படங்களில் நடித்ததுடன் ‘மோக முள்’ படத்தில் நடித்தற்காக அவரை ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். கடைசியாக தமிழில் 'பொய் சொல்லப் போறோம்' ஜி.வி.பிரகாஷ் நடித்த 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட பல படங்களில்தனது முத்திரையைப் பதித்தார்.

இவருக்கு இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நெடுமுடி வேணு, அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்திருந்தார். நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று காலை தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரின் இறப்புக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “500 படங்களில் நடிகர் என்பதோடு, திரைக்கதாசிரியர், இயக்குநர் எனவும் பரிமளித்தவர் நெடுமுடி வேணு. தேசிய, மாநில விருதுகளை வென்றவர். 50 வருட சினிமா ஈடுபாட்டை நிறைவு செய்து மறைந்திருக்கிறார், அஞ்சலிகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் தமிழ் வசன கர்த்தாவான பிருந்தாசாரதி, உரை வீச்சு ஒன்றை அஞ்சலியாக நெடுமுடி வேணுவுக்கு அர்ப்பணித்துள்ளார். அந்தப் பதிவில்...

நெஞ்சில் நிறைந்த கலைஞன் நெடுமுடி வேணு மண்ணில் இருந்து மறைந்து விட்டார். ஆனால் நம் மனதில் இருந்து ஒருபோதும் மறைய மாட்டார் . மனித உணர்வுகளின் உயிர் வடிவம் இலக்கியம் என்றால் அதன் மெய் வடிவம் நடிப்புக் கலை. உயிரும் மெய்யும் சேர்ந்தால் அது நாடகம். அந்த உயிர்மெய்க் கலையின் உன்னதக் கலைஞன் நெடுமுடி. மெய் பேசும் மெய் அவரது உடல். உலகத் தரமான உயர்ந்த நடிப்பு அவருடையது.

'தேன்மாவின் கொம்பத்து' என்றொரு படம்... அன்பு, நட்பு காதல், மோதல் விரோதம், குரோதம் சில்மிஷம், பெருமிதம் காழ்ப்புணர்ச்சி, கழிவிரக்கம் என எத்தனை பாவம் அந்த முகத்தில்? நீரின் தண்மை தழலின் வெம்மை நிழலின் குளிர்ச்சி மலரின் மலர்ச்சி என அன்றாடம் நம் மனம் உணரும் உணர்வுகளுக்கு திரையில் ஓவியமாய் உருவம் கொடுக்கிறான் கலைஞன். அதில் துல்லியமும் நுட்பமும் அறிந்தவன் மகா கலைஞன். அதில் ஒருவர் நெடுமுடி வேணு. மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை மழை நீரைச் சேகரிப்பதைப் போல் சேகரிக்கிறது திரைக் கலை. அதில் கணிசமான பங்கைத் தந்த காத்திரக் கலைஞன் நெடுமுடி வேணு.

பரதத்தை... பெருந்தச்சனை... ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவை... நெடுமுடியை மறந்துவிட்டு நினைக்க முடியுமா? கலையால் வாழத் தொடங்கி கலைக்கு வாழ்வைக் கொடுத்து கலையாகவே வாழ்வை மாற்றும் கலையை அறிந்தவன் கலைஞன். காலன் அவனை இறக்க வைத்தாலும் காலம் அவனை இறக்கி வைப்பதில்லை. அது தலையில் வைத்துக் கொண்டாடும். மலையளவு பங்களிப்பு அளித்த மகாகலைஞன் நெடுமுடியை நெடுங்காலம் கொண்டாடுவோம் நாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula