free website hit counter

பாலு மகேந்திரா மறுபடி பிறந்தார் கிளிநொச்சியில்...!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாலு மகேந்திரா மாபெரும் திரை ஆளுமை. இலங்கையின் கிழக்கு மாகாண அமிர்தகழி கிராமத்தில் பிறந்தவர். மிகப்பெரும் திரையாளுமையாக, அறியப்பட்டதும், வாழ்ந்து மறைந்ததும், தமிழகத்தில். ஆனால் அவரது திரைத்துறைசார் எண்ணங்களும், விருப்பங்களும், அவரை நேசிக்கும் வெவ்வேறு உள்ளங்களில் முளைவிட, இலங்கையின் வடபுலத்தே, கிளிநொச்சியில் மறுபடி பிறந்தார் எனச் சொல்லி மகிழ்வுறும் வகையில், கடந்த சில ஆண்டுகளில் கருவாகி, ஒராண்டுக்கு முன்னதாக "பாலு மகேந்திரா நூலகம்" எனப் பெயர் தாங்கி உருவாகி நிற்கின்றது, திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம்.

சென்ற (26.09.2021) ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய நேரம், பிற்பகல் 2.30 மணிமுதல், மாலை 5.30 மணிவரை இந்நிலையத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்வுகள் இணையவழியில் சிறப்புற நிகழ்ந்தன. நாமும் இணையவழியில் இணைந்திருந்து நிகழ்வுகளைக் கண்ணுற்றுச் செவிமடுத்திருந்தோம். இத்தாலியில் இருந்து சுவிற்சர்லாந்து வரும் மூன்று மணிநேர வாகனப் பயணம் ஒன்றினூடே இந் நிகழ்வில் நாம் இணைந்திருந்த போது, நாம்மோடு பாலு மகேந்திராவும் வாகனப் பயணத்தில் இணைந்திருப்பது போன்ற எண்ணப் பிரமையை, பிரமிப்பை, ஏற்படுத்தியிருந்தது அந் நிகழ்வு என்றால் அது மிகையல்ல.

நிகழ்வுகளைத் தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர் எஸ்.கே.ராஜன், தன் கம்பீரக் குரலால் தொகுத்தளிக்க, பங்கேற்பாளர்கள் பாலு மகேந்திரா எனும் திரையாளுமையின் எண்ணச் சித்திரத்துக்கு உயிரூட்டினார்கள். ஆளுமை மிக்க கலைஞன் ஒரு நாளும் அழிந்து போவதில்லை என்பதை மெய்ப்பிப்பது போல், பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலைய உறுப்பினர்களின் ஒரு வருடச் செயற்பாட்டுக் குறிப்புக்கள் உற்சாகத்தை உயிர்ப்பித்தன. ஆச்சரியத்தை அகலப் பரப்பின. தேடலின் விசாலத்தை விளம்பின. சேகரிப்புக்களில் பாலு மகேந்திராவை, எதிர்காலத் தலைமுறைக்கான சொத்தாகச் சேமித்திருந்தை, அழகாக அடுக்கிக் காட்சிப்படுத்தினார்கள்.

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்புடனான திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம் என இயங்கும் ‘பாலு மகேந்திரா நூலகம்’ , கடந்த ஒராண்டு காலத்துள், உலகில் பிரசித்தி பெற்ற திரைப்படக் கல்லூரிகள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள எண்நூற்றுக்கும் (800 ) அதிகமான திரைப்பட நூல்கள், இருநூற்றுக்கும் (200) அதிகமான ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்கள் மற்றும் பன்னீராயிரத்துக்கும் (12883) அதிகமான மூலவடிவங்களில் காணப்படும் (Original) உலகத் திரைப்பட DVD மற்றும் Blu-ray இறுவட்டுக்கள், 231 மணித்தியாலங்களைக் கொண்ட கற்கைக் காணொளிகள் என இந்நூலகம் கிளிநொச்சியில், பேருந்து தரிப்பிடச் சந்தி, கூட்டுறவு மண்டப முதலாம் மாடியில் எழுந்தியங்கி வருகிறது.

இந்த நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றை ஆர்வமுள்ள அனைவரும் முற்பதிவு செய்து, அலுவலக நேரத்தில் அவற்றை இலவசமாகப் பயன்படுத்த முடியும். அதேநேரம், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களும் எமது நூலகச் செயற்பாடுகளை இலகுவில் அனுபவிக்கும் பொருட்டு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒருகட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறைக்கு 1400 எண்மின் காணொளி வட்டுகளை (DVD) கையளித்துள்ளார்கள், இவை தவிர ஒருவருட முழுநேர இலவசத் திரைப்படக் கற்கை நெறியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த முயற்சிகள் யாவும் ஈழத்துத் தமிழ்திரைத்துறைக்கான பலமான அஸ்திவாரமாகும். 75 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றினைக் கொண்டமைந்த ஈழத்துத் தமிழ்திரையுலகத்தின் முயற்சிகள் பெருமளவில் வெற்றிபெறவில்லை. ஆயினும் அதே கால அளவிலான வரலாற்றினைக் கொண்டமைந்த சிங்களத்திரையுலகம், உலகத் திரைப்படவிழாக்கள் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அடிப்படையான காரணங்களில் முக்கியமானது ஆரோக்கியமான சினிமா ரசனை. சிறந்த சினிமாக்களை உருவாக்கும் படைப்பாளிகளை மட்டுமல்லாது, சிறந்த பார்வையாளர்களையும் உருவாக்கும் வகையில், எதிர்காலச் செயற்திட்டங்களை வடிவமைத்து உருவாகும் ' பாலு மகேந்திரா நூலகம் ' ஈழத்துத் தமிழ் திரைத்துறை மீதான நம்பிக்கையைத் தருகிறது.

பாலு மகேந்திரா நூலகத்தின் சேவைகள் திரைப்படப் பட்டறைகள் , முதுநிலைப் பயிற்சிகள், திரைப்படத் திரையிடல், திரை இரசனை இயக்கங்கள், திரைத்துறைக் கண்காட்சிகள், திரைப்பட முகாம்கள், கணினி மற்றும் இணைய வசதி, சந்திப்பறைகள், OTT தளங்களில் இலவசமாகத் திரைப்படங்களைப் பார்வையிடுவதற்கான அனுமதி, திரைப்படங்களுக்கான துணைத்தலைப்புகள், ஒலி நூல்கள், சிறுவர் சினிமா, என விரிந்து கொண்டே செல்கின்றன.

இதன் ஒராண்டு நிறைவினையொட்டி நடாத்தப்பெற்ற சிறுகதைப் போட்டியில், 328 எழுத்தாளர்கள், தமது 443 படைப்புக்களுடன் கலந்து கொண்டார்கள். இதிலே தெரிவு செய்யப்பெற்ற கதைகளில் முதல் மூன்று இடங்களைப்பிடித்துக்கொண்ட கதைகளுடன், மேலும் 10 கதைகளுக்கு ஆறுதல்பரிசுகளும் வழங்கப்பெற்றுள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கற்பனைத்திறன் வெளிப்படும் கலையகமாக, நூலகத்தை வடிவமைத்து, பாலு மகேந்திரா எனும் திரை ஆளுமையின் அடையாளமான தொப்பியையும், கண்ணாடியையும், தங்கள் செயற்திட்டத்தின் இலச்சினையாக வரைந்து, பாலு மகேந்திராவை மறுபடியும் உயிர்ப்பித்திருக்கிறார்கள். அதனாற்தான் சொல்கின்றோம் பாலு மகேந்திரா மறுபடி பிறந்தார் கிளிநொச்சியில்.

இந் நூலகத்தின் இணையத்தள முகவரி : https://www.balumahendralibrary.org

-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula