கோடை வெய்யிலில் உலர்ந்திருக்கும் மண்மீது, மழைத்தூறல் விழுந்ததும் எழும் மண் வாசம் அறிந்திராத இளந்தலைமுறையினர், நாம் வாழும் சம காலச் சமூகத்தில் அதிகரித்துள்ளார்கள்.
மண் அளைந்து விளையாடும், மழலைப் பட்டாளங்களின் கைகளிலெல்லாம், வீடியோ கேம்ஸ். இயற்கையைத் தொட்டுணர்ந்து நேசிக்கின்ற வாய்ப்புக்களைத் தொலைத்து விட்ட இளைய தலைமுறையிடம் எப்படி வரமுடியும் இயற்கை மீதான விருப்பம் ?.
எங்கள் கல்வி முறைகளும், தளங்களும், கட்டிடக்காடுகளிலும், ஸ்மார்ட் வகுப்புக்களிலும் பெருமை கொள்ளத் தொடங்கிவிட்டது. தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் சார்ந்த அறிவியல் என்பது தவறல்ல. ஆனால் அதனைப் புரிய வைக்கும் பருவம் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டாமா ?. முன்னொரு காலத்தில் முடியாண்ட மன்னர்கள் பிள்ளைகள் கூட, இயற்கையோடினைந்த குருகுலங்களில் பயின்றார்கள் என்பதை நம் வரலாற்றுகளில் படித்திருக்கின்றோம்.
புலனங்களில் விளையாடும் குழந்தைகள் பற்றி நாம் கவலைப்படுகையில், விளையாட்டு மைதானத்தில் விளையாடும் குழந்தைகள், இயற்கையில் விளையாடும், திறந்த, முடிவற்ற மற்றும் கட்டமைக்கப்படாத கற்பனை விளையாட்டைத் தவறவிடுகிறார்கள் என விளக்குகிறார் டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் கல்விப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜேனட் டைமென்ட் .
இயற்கை விளையாட்டு என்றால் என்ன ?
“இயற்கை விளையாட்டு என்பது, வழக்கமான தயாரிக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களுக்கு மாறாக, மரக்கட்டைகள், பாறைகள் மற்றும் நீர் போன்ற இயற்கை கூறுகளுடன், வெளிப்புற அமைப்புகளில் கட்டமைக்கப்படாத விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட குழந்தைகளுக்கு வாய்ப்பு வழங்குவதாகும்” என்று டாக்டர் டைமென்ட் விளக்குகின்றார்.
குழந்தைகள் இயற்கை அம்சங்களைப் பயன்படுத்தி தங்கள் சொந்த விளையாட்டை உருவாக்கும் போது அதை அனுமதிபதில் சாத்தியமான தடைகள் இருப்பதையும், அது அவர்கள் பெற்றோர்கள் மூலமாகவே ஏற்படுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
இயற்கை விளையாட்டுகளில் குழந்தைகள் அதிகமாக காயமடையக்கூடும் என்ற அச்சத்தைச் சுற்றியே நிறைய தடைகள் உள்ளன, எடுத்துக்காட்டாக தேனீக்கள், மரக்கட்டைகளிலிருந்து விழுதல், பாறைகளில் இருந்து விழுதல் அல்லது கால் தடுமாறுதல், என்பனவையே பெற்றோர்களின் கவலையாக உள்ளது. ஆனால் இயற்கை விளையாட்டுகளில் ஏற்படும் சிறிய காயங்களை விட, இயற்கை விளையாட்டுகளை அனுமதிக்காததன் அபாயங்கள் உண்மையில் அதிகம் என்பதே உண்மை என்பதைப் பலரும் வலியுறுத்துகின்றார்கள்.
பெற்றோரின் கலாச்சார விருப்பினால், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் புதரில் சுதந்திரமாக விளையாடுவதை விரும்புவதில்லை. இதற்குப் பதிலாக தங்கள் குழந்தைகள் நடனம் அல்லது நீச்சல் அல்லது பியானோ போன்ற மிகவும் கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றார். இதன் விளைவாக, இயற்கையில் கட்டமைக்கப்படாத, சுதந்திரமாக விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்து விடுகிறது.
இயற்கை விளையாட்டில். முதல் கிடைப்பது உடல் நலன்களாகும். இயற்கை விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள், தங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் வழிகளில் நகர்கிறார்கள். அவர்கள் பாறைகளைத் தூக்குகிறார்கள், பொருட்களின் மீது ஏறுகிறார்கள், இயற்கை தடங்கள் வழியாக ஓடுகிறார்கள். இதன் மூலம் இளம் குழந்தைகள் பல சமூகத் திறன்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
மேம்பட்ட சமூகமயமாக்கல், சிக்கல் தீர்க்கும் திறன், கவனம் செலுத்துதல், சுய கட்டுப்பாடு, படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கை , மன அழுத்த நீக்கம், சலிப்பு என்பவற்றை இயற்கை விளையாட்டில் குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள்.
இதேபோல் இயற்கை விளையாட்டுகளில் குழந்தைகள் நடவு செய்து, அவற்றைப் பராமரிப்பவர்களாக இருப்பதன் மூலம், வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றியும், விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். இறுதியாக, இயற்கை விளையாட்டின் மூலம் ஏற்படும் உணர்ச்சி மற்றும் மன நல நன்மைகள் நீண்ட காலத்திற்கு உதவியாக இருக்குமென்று டாக்டர் டைமென்ட் கூறுகிறார்.
மேற்குலக ஆய்வுகளின் வெளிப்பாடாக சமகாலத்தில் இயற்கை சார்ந்த கல்வி முயற்சிகளை குழந்தைகளுக்காக உருவாக்குவதில் அக்கறி கொள்கின்றார்கள்.மேலேயுள்ள படத்தில் தெரிவது ஏதோ இராணுவம் தங்கும் பந்தல் அல்ல. சுவிற்சர்லாந்தில் Bad Ragaz ஒரு இயற்கைச் சூழலில் அமைந்துள்ள பாலர் வகுப்பு. இங்கே தங்கள் சிறு பிள்ளைகளைச் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள் போட்டியிடுகின்றார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்கையைச் சிறு பராயத்திலேயே தங்கள் பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்கான விருப்பம் அது. சில பாடசாலைகளில் கோடை காலங்களில் பிள்ளைகள் மண் விளையாடுவதற்கான இடங்களையும் செய்து வைத்திருக்கின்றார்கள்.
நமது குழந்தைகளை இயற்கையில் அதிகமாக விளையாட வைப்பது எப்படி?
சர்வதேச அளவில் அதிகமான இளம் குழந்தைகளுக்கு இயற்கையான விளையாட்டை வழங்குவதற்கான இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. பாடத்திட்டம் மற்றும் கல்வி ஆவணங்கள் மூலம் வெளிப்புற விளையாட்டின் மதிப்பை அங்கீகரிப்பது மட்டுமன்றி, குடும்பங்களைப் பொறுத்தவரை, இயற்கையான வெளிப்புற இடங்களில் குடும்ப நேரத்தை செலவழிப்பதும், ஊக்குவிப்பதும் திட்டமிடுவதும் முக்கியமானது.
குழந்தைகளின் வாழ்க்கையில் அதிக வெளிப்புற விளையாட்டை பெருக்கும் வழிமுறையில், குடும்பங்களினால் சாத்தியமாகக் கூடிய சில வேலைகளில், தோட்டத்தில் களையெடுத்தல், துடைத்தல் மற்றும் தண்ணீர் ஊற்றுதல் போன்ற வெளிப்புற வேலைகளில் அவர்களை உதவச் சொல்வது, சைக்கிள் பயணங்கள், பூங்காக்கள் வழியாக நடைப்பயணப் பாதைகளில் நடந்து செல்வதை ஒரு வழக்கமான செயலாக ஆக்குங்கள் என்கின்றார் பேராசிரியர் ஜேனட் டைமென்ட் .
மண்ணுடனும், நீருடனும், பிராணிகளுடனுமான சிறு பிள்ளைகளின் நெருக்கம், இயற்கை மீதான நேசிப்பையும், உயிர்களின் மீதான விருப்பினையும் பிள்ளைகளுக்குத் தருவதுடன் நிறைந்த மன அமைதியினைத் தருவதுக்குமான நல்ல அடிப்படையுமாகும் என்கின்றன இன்றைய ஆய்வின் தரவுகள். ஆனால் எம் முன்னோர்கள் அதனையே தம் சந்ததிக்குத் தந்தார்கள். அதையே நாமும் நமது சந்ததிக்குக் கொடுப்பதுதானே முறையாகும்.
-மலைநாடான்