இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.
இத்தாலியின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாகிப் போன இந்த விளம்பரத் தட்டிகளில், ஒரு இத்தாலியர் தனது மறைந்த தாய்க்கு வெளியிட்ட செய்தியொன்று இத்தாலியின் வைரஸ் தொற்றுப் பெருஞ்சோகத்தின் வெளிப்பாடாக அடையாளமாகியுள்ளது.
இத்தாலியின் தலைநகரான ரோம் நகரத்தைச் சுற்றியுள்ள ஏழு மீட்டர் விளம்பர பலகைகளில் "அம்மா, மன்னிக்கவும், உன்னை இன்னும் அடக்கம் செய்ய முடியவில்லை," ( " Scusa Mamma se non riesco ancora a farti tumulare ") எனத் தெரியும் வாசகங்கள், அந்த மனிதரின் தனிப்பட்ட துயரினை மட்டுமல்ல, இத்தாலியின் துயரையும் வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எந்த ஆண்டையும் விட 2020 ஆம் ஆண்டில் இத்தாலியில் அதிகமான மக்கள் இறந்த நிலையில், ஓபெர்டன் ஜுக்கரோலி என்பவரின் தாயார், 2020 மார்ச் 8 ஆம் தேதி, 85 வயதில், மாரடைப்பால் இறந்தார். ஆனால் அவள் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. இதேபோல் ஜனவரி 9 ஆம் தேதி வைரஸ் அல்லாத மற்றொரு நிலையில் இறந்த அவரது அத்தையின் உடலும் இன்னமும் அடக்கம் செய்யப்படவில்லை.அவர்கள் இருவரையும் நினைவு கூரவும், தனது மறைந்த தாய்க்கு அஞ்சலி செலுத்தவும், அடக்கம் செய்யப்படுவதில் உள்ள நெருக்கடிக்கு கவனத்தை ஈர்க்கவும், ரோம் நகரில் ஒன்பது பிரமாண்டத் தட்டிகளில் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
" ரோமின் ப்ரிமா போர்டா கல்லறையில் அடக்கம் செய்யாது, நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் காத்திருக்கின்றன” என்று செய்தியாளர்களிடம் பேசிய ஜுக்கரோலி "ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் பல மாதங்கள் அங்கேயே இருக்கிறார்கள்" எனத் தனது கவலையை வெளிப்படுத்தினார். அவர் தொடர்ந்து பேசுகையில், விளம்பர பலகை நிறுவனத்தின் மூலம், மேலும் 250 சுவரொட்டிகளை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
இத்தாலிய தலைநகரில் கல்லறைகளை நிர்வகிக்கும் சிட்டி ஹால் நிறுவனமான ஏ.எம்.ஏ திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அடக்கம் செய்யும் இடங்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் குறிப்பிட்டனர்.
தொற்றுநோயால் இத்தாலி முழுவதும் மரணங்கள் அதிகரித்துள்ளன. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கொரோனா வைரஸ் தொற்றால் 115,500 க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். நெருக்கடியின் ஆரம்ப கட்டங்களில், வடக்கு நகரமான பெர்கமோ, இறந்தவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியாதபோது உதவிக்கு இராணுவத்தை அழைக்க வேண்டியிருந்தது. பெர்கமோவிலிருந்து பிற நகரங்களுக்கு சவப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் இராணுவ லாரிகளின் படங்கள் இத்தாலியிலும் அதற்கு அப்பாலும் தொற்றுநோயின் கொடுமையை சொல்லும் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.