நாம் ஏன் மற்றவர்களை வாழ்த்த வேண்டும் ? அறிமுகமற்றவர்கள் ஏன் நம்மை ஆசிர்வாதிக்க வேண்டும் ? உண்மையில் முகந்தெரியா மனிதர்களின் வாழ்த்துக்குப் பலன் உண்டா? பயன் உண்டா ? என்பதெல்லாம் இன்று எழுப்பப்படும் கேள்விகள்.
"Good Morning,Good Evening,Happy Birthday,Happy Anniversary,Happy Married Life" என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வாழ்த்துக்கள் எல்லாம் உளப்பூர்வமானவையா? மனப்பூர்வமான வாழ்த்துக்களா? எனும் எண்ணங்களில் நியாயங்கள் இல்லாமலில்லை. அப்படியானால் ஏன் வாழ்த்த வேண்டும் ? அவ்வாறான அறிமுகமற்ற வாழ்த்துக்களின் பயன்பாடு என்ன ?
உலக அளவில் பெரும்பாலான தருணங்களில் ஒருவரை ஒருவர் வாழ்த்துவது என்பது ஒரு சிறந்த பழக்கமாக உள்ளது. குறிப்பாக நமது நாட்டில் வணங்குவதும் வாழ்த்துவதும் சாதி, இனம், மதம், மொழி கடந்து நம்மோடு ஒன்றிக் கலந்த கலாச்சாரமாக, பண்பாடாக தொன்று தொட்டு வந்துள்ளது.
பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்ற சொல்லால் வாழ்த்தப்படுபவர் மட்டுமல்ல, சொல்பவரும் பயன்பெறுவார். வாழ்த்து எனும் சொல்லை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.
"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகின்றார்.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.
வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்து முடிக்கும் போது சொல்லும் வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.
வாழ்த்து என்பது வெறும் சொல் மட்டுமல்ல. அது ஒரு ஜீவகாந்த அலை. இந்த அலைக்கு ஐந்து வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)
ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே இந்த வகையான அலையினை எழுப்பிவிடும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும். சமுத்திரத்தின் மத்தியில் தோன்றும் அலை கரையைத் தொடுவது போல் வாழ்த்துபவரிடம் சென்று மீளும். வாழ்த்தும் போது நாம் அன்பையும் நல்லெண்ணங்களையும் விதைத்தால், நாம் வாழ்த்தியவரிடம் அதனைக் கொண்டு சேர்க்கும் வாழ்த்து அலை, அதனை மீளக் கொண்டு வருகையில் அதனை மேலும் விரிவாக்கி நமக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
இந்த மெய்பொருளை உணர்ந்ததாலேயே அருளாளர்கள், அருட்பெரும் சக்தியான இறைவனுக்கே பல்லாண்டு பாடினார்கள். பெரியாழ்வார் தம் திருமொழியில் முதல் பாசுரமாகப் பாடியிருப்பதே, பெருமானுக்கான பல்லாண்டுதான்.
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு. " என்று பாடிய பெரியாழ்வாரின் பல்லாண்டுப் பாசுரத்தை,
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்? என மணவாள மாமுனிகள் உபதேச ரத்னமாலையில் சிறப்பிக்கின்றார். வேதத்துக்கு ஓம் என்பது முதல் ஒலியாக அமைந்து வேதத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறதோ, அதுபோல் பல்லாண்டு எனும் வாழ்த்து, இந்தத் தமிழ் வேதத்துக்கு தொடக்கம் என்கிறார்கள் அவர்.
`பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே`` என்றது திருமுறையில் சேந்தனாரின் திருப்பல்லாண்டு. காலத்தைக் கடந்து நிற்பவனைக் காலத்தின் வழி வாழ்க என வாழ்த்துதல் பேதைமையானது என நாம் அறிகினும் நமது ஆர்வத்தின் வழி அவ்வாறு வாழ்த்துவோம் எனப் பொருள் கொண்டு வாழ்த்துகின்றார்கள்.
அவுஸ்திரேலியா நியூசிலாந்து இடையே விமானப் போக்குவரத்து தொடக்கம்! : மக்கள் உணர்ச்சி பெருக்கு
வாழ்த்துக் கூறுவதின் நன்மைகள் என்ன ? வாழ்த்துக் கூறுவதனால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம். தொடர்ந்து கூறும் வாழ்த்துக்களால் பகைமையைத் தவிர்க்கலாம். வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறும்போது, நமது பெருந்தன்மை தானே வளர்ச்சியடைகிறது. அது பேரறிவில் பண்பாகப் பதிவாகி அடி மனத்திற்கும் பரவுகையில் வெறுப்புணர்வு தானே மறைந்துவிடும்.
வாழ்த்து அலைகளால் மனிதர்கள் மட்டுமல்ல, மரங்களும் கூட மகிழ்கின்றன, உயிர்கின்றன. என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆக, வாழ்த்து என்பது நமது மனவளத்தின் மகத்தான மந்திரம். இதனை நேர்மறை எண்ணங்களுடன் மற்றவர்க்குச் சொல்லும் போது நாமும் நேர்மறை எண்ணங்களால் வாழ்த்தப்படுகின்றோம். இதில் அறிமுகமற்ற மனிதர்களின் வாழ்த்து அர்தமற்றது என்பதிலும் பார்க்க தூய்மையானது எனலாம். ஆதலால் எப்போதும் மற்றவர்களை வாழ்த்துவோம், அதனால் நாமும் பலன் பெறுவோம்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பதுவும், "வாழ்க வளமுடன்" என்ற வாழ்த்தும் வெறும் வார்த்தைக் கோர்வைகள் அல்ல.