அடிமைப்பட்டுள்ளமை புரிந்தால் விடுதலை விழிப்பு வரும் எனும் பொருளைப் பேசுகிறது சுகுமாரனின் பெருவலி .
"ஒருவகையில் எல்லாரும் அடிமைகள் தான். ஆட்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ அதிகாரத்துக்கோ அடிமையானவர்கள் தாம். அடிமையாக இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டால் விடுதலை பற்றிய யோசனை வரும். அளவிலாக் கருணையும் நிகரிலாக் கிருபையும் கொண்ட இறைவனை தவிர வேறு யாருக்கும் அடிமையாக இருப்பது ஆனந்தம் தருவதல்ல"
விலை பேசி வாங்கி வந்து அந்தப்புரத்தில் அடைத்து வைத்திருக்கும் அடிமைகளுக்கும், அக்பர் முதல் உங்கள் தந்தையர் வரை பேரரசர்களான பேரரசர்கள் கொண்டு வந்து தள்ளிய வைப்பாட்டிகளுக்கும் அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு இருக்கிறதா? அந்த உணர்வு வருமானால் அன்று அரண்மனை தீக்கிரையாகி விடாதா?...
மனித மனம் என்பது, எத்தனை சுகபோகங்கள் கிடைத்தாலும் மறுக்கப்படும் ஒன்றிற்காகவோ தன்னால் அடைய முடியாத ஒன்றிற்காகவோ தான் அதிகமதிகமாய் ஏங்கி தவிக்கும். சில நேரங்களில் அம்மனங்கள் அதை அடைந்துவிடுகின்றன... பல நேரங்களில் அவை அதை மறந்து விட நிர்ப்பந்திக்கப்படுகின்றன...
இங்கே எழுதப்பட்டிருப்பது மறுக்கப்பட்ட இரு நிகழ்வுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் தான்...
மொகலாய சாம்ராஜ்யாத்தின் சம்பிரதாயப்படி ஷாஜஹானின் மூத்த புதல்வனுக்கே அரசுரிமை என்று தெரிந்தும் இளையவனான அவுரங்கசீப் தனது சகோதரர்களை வைத்தே மூத்த சகோதரன் தாராவின் ஆட்சி பீடத்தை தட்டிப்பறிப்பதற்கான சதித்திட்டங்களை தீட்டி அவனை வெற்றிக்கொண்ட பின், அவனுக்கு உதவிய சகோதரர்களையும் கொன்று ஆட்சியை கைப்பற்றுகின்றான். இங்கே அவுரங்கசீப்பிற்கு மறுக்கப்பட்ட அரியாசணத்தை அவன் சூழ்ச்சியாலும் யுத்தத்தாலும் வென்று ஆட்சிபீடம் ஏறுகிறான்.
பதினான்கு வயதிலேயே தந்தை ஷாஜஹானுக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் நுண்ணறிவும், பாரசீக நூல்களில் புலமையும், சிற்பக்கலை கட்டிடக்க கலை பற்றிய நிபுணத்துவமும், சர்வதிகாரமும் கொண்ட மூத்த புதல்வியான ஜஹனாரா, ரஜபுத்திர இளவரசனை காதலிக்கிறாள். ஆனால் பேரரசர் அக்பர் மொகலாய சாம்ராஜயத்தின் பெண்கள் திருமணம் முடித்தால் அவர்களது கணவர்கள் ஆட்சியை பிடித்து விடக்கூடும் என்று அஞ்சி மொகலாயப் பேரரசின் பெண் வாரிசுகள் திருமணம் முடிப்பதை தடுத்திருந்தார். இந்த பிரகடனம் வம்சாவழியாக தொடர்ந்து ஜஹனாராவின் காதலை கிழித்தெறிந்து அங்கே அவளுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இங்கே இரண்டு மனங்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றை அடைய எத்தனித்தன. ஒரு மனம் சூழ்ச்சியாலும் யுத்தத்தாலும் அதனை அடைகின்றது. இன்னொரு மனம் தலைமுறைகளால் சபிக்கப்பட்ட சட்டத்தால் அடிமையாக்கப்பட்டு அமைதியாக்கப்படுகின்றது. "காரணம் அவள் பெண்".
வாசிக்கவும், யோசிக்கவும் வைக்கும் எழுத்தோவியம் " பெருவலி"
- 4தமிழ்மீடியாவிற்காக: கண்ணம்மா