ஆல்பர்ட் அர்மெனக்யன். ஆர்மேனிய இனப்படுகொலை நடந்து ஒரு நூற்றாண்டின் பின் பிறந்த இந்த 12வயதுச் சிறுவன், பிரான்ஸ் தொலைக்காட்சியின் பாடல் போட்டி நிகழ்ச்சியான ' தி வாய்ஸ் கிட்ஸ் பிரான்ஸ் 2025' நிகழ்ச்சியில் ஆர்மேனிய நாட்டுப்புற பாடலான "டிலே யமன்" பாடலைப் பாடியபோது, நடுவர்களின் கவனம் பெற்றான்.
ஆல்பர்ட் அர்மெனக்யன் தனது பயிற்சியாளர் பேட்ரிக் ஃபியோரியுடன் "டிலே யமன்" பாடலைப் பாடிய போது உலகின் பல பாகங்களிலும் அது ஒலிக்கத் தொடங்கியது. இணையத்தின் வழி உலகத்தின் கவனம் பெற்றது அவன் குரல் மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த ஆர்மேனிய இனப்படுகொலைகளும் தான்.
"டிலே யமன்" பாடல், இரு காதலர்களின் பிரிவுச்சோகத்தினூடு ஒரு இனத்தின் துயர்பாடும் பாடல். அதனை ஆர்மீனியக் கலாச்சார இசைதரும் ஆர்மீனிய வம்சாவளியைச் சேர்ந்த மார்செய்லைஸ் லெவோன் டுடுக்கில் குழலொலியின் பின்னணியோடு வருகையில் ஆர்மீனிய இனப்படுகொலையின் துயரம் நினைவுகொள்ளப்பட்டது.
&
ஆர்மேனிய இனப்படுகொலை (Armenian Genocide) என்பது இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதலாவது மிகப்பெரும் இனப்படுகொலை. ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்களை வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்த துயரம் அது. 15 இலட்சம் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது.ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கைது செய்தனர். அதன் பின்னர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.
அந்தப் பயணத்தின் போது, அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.இப்படுகொலைகளில் இருந்து தப்பி, புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்தவர்களால் மீள உருவானது ஆர்மீனியா.ஆனாலும், ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை தொடர்ந்து மறுத்து வருகிறது.
அண்மைக் காலத்தில் சுமார் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் நடந்த இனப் படுகொலைகளில் ஆர்மீனிய இனப் படுகொலையே, முதல் இனப் படுகொலை என போப் ஆண்டவர் பிரான்சிசு தெரிவித்திருந்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 29 அக்டோபர் 2019ல் ஆர்மீனிய மக்களைக் கொன்றது இனப்படுகொலையே என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் தொடர்ந்து துருக்கியை வலியுறுத்தி வருகின்றன .
இந்நிலையில் ஆல்பர்ட் அர்மெனக்யன் பாடிய "டிலே யமன்" பாடல், ஆர்மேனிய இனப்படுகொலைகளை உலகில் பேசுபொருளாக்கியுள்ளது.ஜூனியர் யூரோவிஷன் 2025 இல் ஆர்மீனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த ஆல்பர்ட் அர்மெனக்யன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர்மேனியப் படுகொலைகள் குறித்த "டிலே யமன்" பாடல் போன்றதுதான், ஈழப்போராட்டகளத்தில் பாடப்பெற்ற " தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும் - நம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் " டல். ஆனால் அதனை விடவும் துயர் தரும் பாடல் " அழகான அந்தப் பனை மரம்". ஆனால் நமது பிள்ளைகள் மீண்டும் மீண்டும் " விடைகொடு எங்கள் நாடே.." பாடலை மட்டுமே பாட வைக்கப்படுகிறார்கள். ஆனால் அது நம் களத்தின் பாடல் அல்ல...
-4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
