நோபல் பரிசு வென்ற 23 வயதான மலாலா யூசுப்சாய் பிரபல ஆங்கில சஞ்சிகையான "வோக்" இல் இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நவ நாகரீக உலகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் Vogue சஞ்சிகை; இவ்வுலகில் 'முகச்சாயம்' பூசி சாதிக்கும் பெண்களையும் உள்ளடக்க தவருவது இல்லை. ஆங்கில சஞ்சிகையான "வோக்" இதுநாள்வரைவில் பெண் பிரபலங்களின் தன்னம்பிக்கை மிளிரும் "வெளிப்படையான" புகைப்படங்களையே அட்டைப்படத்திற்கு பயன்படுத்தியிருக்கிறது.
ஆனால் இஸ்லாமிய பெண் மலாலா யூசுப்சாய் தன் கலாச்சாரம் மாறா ஆடையில் தன்னம்பிக்கை சற்றும் குறையாமல் தரும் தோற்றத்தைக்கூட வோக் சஞ்சிகை தன் அட்டைப்படத்தில் பதித்து அசத்தியிருக்கிறது எனலாம்.
இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியாகும் வோக் இதழுக்காக தனது நேர்காணலை அளித்திருக்கும் மலாலா; அட்டைப்படத்தில் சிவப்பு நிற உடையில் உறுதியின் அடையாளமாக திகழ்ந்திருப்பது அனைவரது வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
பாகிஸ்தானில் பெண் கல்வி குறித்த தன் பிராச்சார போராட்டத்திற்காக 14 வயதில் தலிபான் போராளிகளால் தலையில் சுடப்பட்டார். அதன் பின் குடும்பத்தாரால் காப்பாற்றப்பட்டு இங்கிலாந்து ஆக்ஸ்வோட் பல்கலைகழக பட்டதாரியாக 22 வயதில் கடந்தாண்டு வெளியானார்.
எல்லோரையும் போல 'மெக்டொனால்' உணவும்; நண்பர்களுடன் 'போக்கர்' விளையாடுவதும் பிடிக்கும் என திறந்த மனதோடு மலாலா நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
"நான் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் நான் இதற்கு முன்பு இவ்வாறு இருந்ததில்லை; என் வயது ஒத்த நபர்களுடன் ஒருபோதும் இருந்ததில்லை. " என தன்னைப்பற்றி அதில் விவரித்து செல்கிறார்.
'வோக்" சஞ்சிகையின் அட்டைப்பட புகைப்படம் குறித்து அவர் தெரிவிக்கையில் "இந்த ஆடை நான் ஒடுக்கப்பட்டவளுக்கான அறிகுறி அல்ல".
"எனது தலைக்கவச துணி பஷ்டூன் இனத்தைச் சேர்ந்த சுன்னி முஸ்லீமாக எனது வேர்களைக் குறிக்கிறது; முஸ்லீம் பெண்கள், பஷ்டூன் பெண்கள் அல்லது பாக்கிஸ்தானிய பெண்கள் ஆகிய நாங்கள் எங்கள் பாரம்பரிய உடையைப் பின்பற்றும்போது, நாங்கள் ''ஒடுக்கப்பட்டவர்களாகவோ, குரலற்றவர்களாகவோ அல்லது ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்வதாகவோ'' கருதப்படுகிறோம்; ஆனால் நான் சொல்ல விரும்புவது, உங்கள் கலாச்சாரத்திலே; உங்கள் குரலையும், சமத்துவத்தை கொண்டிருக்க முடியும் என விளக்கியுள்ளார்.
அத்தோடு தனது டுவீட்டர் பக்கத்தில் சஞ்சிகையின் புகைப்படத்துடன் ஒரு ஆழமான பதிவையும் பதிவிட்டுள்ளார் : <ஒரு இளம் பெண், ஒரே பார்வை அல்லது நோக்கமாக இருக்கும்போது அவளுடைய இதயத்தில் சுமக்கும் சக்தியை நான் அறிவேன் - மேலும் இந்த அட்டையைப் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் அவளால் உலகை மாற்ற முடியும் என்பதை அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி> என அப்பதிவு இருப்பது குறிப்பிடதக்கது.
Source : bbc&Vogue
- 4தமிழ்மீடியாவிற்காக: ஹரினி