சமூக வலைதளங்களில் ‘தி பேமிலி மேன் 2’ படத்துக்கு எதிரான பதிவுகள் அதிகரித்த வண்ணம் இருக்க, அதற்கு சமந்தாவின் எதிர்வினை இன்னும் தமிழ் ரசிகர்களை வெறுப்பேற்றியிருக்கிறது.
டிகே இயக்கத்தில், மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா நடித்து, ஹிந்தியில் உருவான, 'தி பேமிலி மேன் - 2' இணையத் தொடரின் டிரைலர் வெளியான நாள் முதல் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதில், ராஜி என்ற தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் ஈழ விடுதலைப் பெண் போராளியாக சமந்தா நடித்துள்ளார்.
இத்தொடரின் கதை ‘விடுதலைப் புலி’ ஒருவரை, ஐஎஸ் கொன்றுவிடுகிறது. இந்த கொலைக்கு, இந்திய அரசு தான் காரணம் என புலிகளின் தலைவரை நம்ப வைக்கிறது. அதற்கு பழிவாங்க வேண்டும் என்று நினைக்கும் புலிகளின் தலைவரை வைத்தே தாக்குதலுக்கு திட்டமிடுகிறது. தான் பயன்படுத்தப்படுகிறோம் என்பது தெரியாமல், அந்த தலைவர், இயக்கத்தை விட்டு வெளியேறி, தனது படைத் தளபதிகளை வைத்து விஷயத்தை நடத்தப் பார்க்கிறார். இந்த தாக்குதலை, ஃபேமிலி மேனான, மனோஜ் தடுத்து நிறுத்துவது தான் கதை. இதில் புலிப்படையச் சேர்ந்த மனித வெடிகுண்டு போன்ற வேடத்தில் நடித்திருப்பவர் சமந்தா.. இவருக்கு தான் பயன்படுத்தப்படுகிறோம் என்பது தெரியாதது போலவும் பாகிஸ்தான் அடிப்படைவாதிகளுடன் தொடர்பு உள்ளது போலவும் காட்டியுள்ளனர்.
குறிப்பாக, பலக் காட்சிகளில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தொடங்கி, நாம் தமிழர் கட்சி சீமா, வைகோ, திருமா உட்பட பல தமிழ் அமைப்புகள் இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்துவந்தனர். அமேசான் ப்ரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு கடிதமும் சீமான் கடிதமும் எழுதியுள்ளார். ஆனால் தமிழினத்துக்கு எதிரானதாக எடுக்கப்பட்ட இந்த, 'தி பேமிலி மேன் - 2' இணையத் தொடர் பல எதிர்ப்புகளை மீறி 'அமேசான் ப்ரைம்' ஓ.டி.டி., தளத்தில் வெளியாகியிருப்பது உலகத் தமிழர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் இத்தொடரையும், அமேசான் ஓடிடி தளத்தையும் விமர்சித்து பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக #FamilyMan2against_Tamils, #BoycottAmazon, #Raji, #LTTE போன்ற ஹேஸ்டேக்கில் பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
இதற்கிடையிலே இத்தொடரில் ராஜி வேடத்தில் நடித்துள்ள சமந்தா இந்த எதிர்ப்பை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “எங்கெங்கிருந்தோ வரும் விமர்சனங்களையும், பின்னூட்டங்களையும் படிக்கும்போது என் இதயத்தில் மகிழ்ச்சி நிறைகிறது. ராஜி என்றுமே விசேஷமான கதாபாத்திரமாக இருக்கும். ராஜ் & டிகே இந்த ரோலில் நடிக்க என்னை அணுகியபோது, இதில் நடிப்பதற்கு உணர்வுபூர்வமாக, சமநிலையுடன் தயாராக வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. அவர்களே ஈழத் தமிழர்களின் ஆவணப் படங்களை க்ரியேட்டிவ் அணியினர் என்னிடம் பகிர்ந்தனர். அதில் ஈழப் போரில் பெண்களைப் பற்றிய கதைகளும் இருந்தன. நான் அந்த ஆவணப்படங்களைப் பார்த்தபோது, நீண்டகாலமாக ஈழத் தமிழர்கள் அனுபவித்த பிரச்சினைகளையும், சொல்ல முடியாத துயரங்களையும் அனுபவித்தது தெரிந்து எனக்குத் திகைப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. ஆனா அந்த டாக்குமெண்டரி படங்களுக்கு சில ஆயிரம் பார்வைகளே இருந்ததை நான் கவனித்தேன்.
அப்போதுதான், ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் அவர்களின் உயிரை இழந்தபோது உலகம் எப்படி அந்தப் பக்கமே தன் கவனத்தைத் திருப்பவில்லை என்பது எனக்கு உறைத்தது. இன்னும் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தையும், வீடுகளையும் இழந்தனர். இந்த உள்நாட்டுப் போரின் காயங்களை மனதில், எண்ணத்தில் தாங்கி, கணக்கிலடங்காத இன்னும் பலர் தூர தேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இதையெல்லாம் உணர்ந்தே ராஜியின் கதை கற்பனை என்றாலும், அது நியாயமற்ற முறையில் நடந்த போரில் உயிரிழந்தவர்களுக்கும், போரின் வலியோடு, அந்த நினைவுகளோடு வாழ்பவர்களுக்கும் ஓர் அஞ்சலி. ராஜியின் கதாபாத்திரம் சமநிலையுடன், நுணுக்கத்துடன், உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். முன்னெப்போதையும்விட, வெறுப்பு, ஒடுக்குமுறை, பேராசை ஆகியவற்றை மனிதர்களாகிய நாம் ஒன்றிணைந்து எதிர்க்கும் ராஜியின் கதை தெளிவான, மிகத் தேவையான ஒரு நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதில் நாம் தவறினால் இன்னும் கணக்கிலடங்காத பலர் அவர்களின் அடையாளத்தை, சுதந்திரத்தை, சுயமாக முடிவெடுக்கும் உரிமையை இழப்பார்கள்” என்று கூவியிருக்கிறார்.
- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை