free website hit counter

உலகின் மிகப்பெரிய சிற்பப் பூங்கா ( Frognerparken )

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிர்வாணம் என்றால் என்ன ? புகழ்பெற்ற சோவியத் மத அறிஞரான தொர்கினோவ் (Evgeny Alekseevich Torchinov), நிர்வாணம் என்பது அனுபவ அறிவு மற்றும் அதை விவரிக்கும் மொழியின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலை என புத்தரின் தத்துவார்த்த சிந்தனைகளின் வழி மொழிந்தார்.

நிர்வாணம் என்பது விடுதலையின் நிலை. துன்பத்திலிருந்து விடுபட்டு, மனிதன் தனது ஆன்மீகத் தேடலின் முடிவில் அவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடும்போது எட்டப்படும் நிலை. இந்துக் கோவில்களில் காணப்படும் நிர்வாணச் சிலைகளின் பின்னாலான தத்துவார்த்தங்களும் இதன் வழிப்பட்டதே என்கிறார்கள் ஆன்மீக அறிஞர்கள்.

அவர்கள் மேலும் கூறுகையில், ஆன்மீக அறிவொளி மூலம் நிர்வாண நிலை அடையப்படும்போது, சம்சாரம் சுழற்சி அல்லது சராசரியான வாழ்க்கைச் சுழற்சி மற்றும் இறப்பு முடிவடைந்து அனைத்து கர்ம வினைகளும் முடிவடைய முக்தி நிலைகிடைக்கின்றது. நிர்வாணம் அனைத்து மன செயல்பாடுகளும் இழந்து நிற்கும் ஒரு நிலையைச் சுட்டுகிறது, இது ஒரு முழுமையான ஆன்மீக விடுதலையை தருகிறது என்கிறார்கள்.

நிர்வாணம் குறித்த எண்ணத் தெளிவுடனேயே நோர்வேயின் பிரபலமான சிற்பி குஸ்டாவ் விஜ்லாண்ட், ஒஸ்லோ நகரின் ஒருபுறத்தில் அமைந்துள்ள ஃபிராக்னர் பூங்காவின் ( Frognerparken), சிற்பங்களை வடிவமைத்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.

இந்தப் பூங்காவில் உள்ள சிற்பங்களை வடிவமைத்த சிற்பியின் பெயரால், "Vigeland Park" அல்லது "Vigeland Sculpture Park" என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அது சுற்றுலாப் பயணிகளிள் சுட்டி அழைத்ததால் வந்தது என்றும் கூறுகின்றார்கள். இந்தப் பூங்காவிற்கும் தமிழர்கள் வைத்திருக்கும் பெயர் "தூஷணப் பார்க்". இந்தப் பூங்காவில் உள்ள சிற்பங்களின் நிர்வாண நிலை வடிவமைப்புக்களால் இவ்வாறான பெயரை நம்மவர்கள் சூட்டினார்கள் எனச் சொல்லப்படுகிறது.

80 ஏக்கர் (320,000 சதுரமீற்றர் ) பரப்பளவைக் கொண்டுள்ள ஃபிராக்னர் பூங்காவின் சிற்பப் பகுதியில் 212 வெண்கல மற்றும் கிரானைட் சிற்பங்கள் உள்ளன. இவை அனைத்தும் வடிவமைத்த சிற்பி குஸ்டாவ் விஜிலேண்டால். 1869 ஏப்பிரல் 11ந் திகதி பிறந்த அவரது இயற்பெயர் அடோல்ஃப் குஸ்டாவ் தோர்சன். 1943ம் ஆண்டு தனது 73வது வயதில் மறைநதார்.

1940 ஆம் ஆண்டு பொதுமக்களின் பார்வைக்கு இப்பூங்காவின் முதற்பகுதி திறக்கப்பட்டது. பூங்காவின் மிகவும் பிரபலமான சிலைகளில் ஒன்று ஆங்ரி பாய் (சின்னடாகென்) சினங்கொண்ட சின்னப் பையன்.

பூங்காவில் உள்ள பெரும்பாலான சிலைகள் கிரானைட்டால் செய்யப்பட்டவை. "வாழ்க்கை வட்டம்" எனும் கருப்பொருளைக் குறிக்கும் வகையிலான மனித உருவங்களை சித்தரிக்கும், மோனோலித் பீடபூமி என்பது ஃபிராக்னர் பூங்காவின் வடக்கே உள்ள ஒரு சதுக்கம்.

லத்தீன் மொழி வார்த்தையான மோனோலிதஸ் என்பதிலிருந்து உருவானது மோனோலித் (மோனோலிதோஸ்). ஒன்று அல்லது ஒற்றை கல் என்பது இதன் பொருளாகும். விஜிலேண்ட் இந்தப் பூங்காவில் உருவாக்கிய சிற்பங்கள் யாவும், ஒற்றைக் கல்லில் உருவானவை. இயற்கை மனித வடிவமைப்பினையும், மனித வாழ்நிலைகளையும், பிரமாண்டான சலவைகற்களில் ஒற்றைக்கல் சிற்பமாக உருவாக்கியுள்ளார். பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

மனித வாழ்வியலின் பல்வேறு அம்சங்களை, பருவநிலைகளை, குழுநிலைகளை, உணர்வுநிலைகளை, பிரமாண்டமான சிற்பங்களாகக் காணமுடிவது இந்தப் பூங்காவின் சிறப்பம்சம். இந்தியாவின் கோவில்களிலும், அரண்மனை மண்டபங்களிலும் நிறைந்திருக்கும் அற்புதமான பெருஞ் சிற்பங்களைக் காணும்போது ஏற்படும் ஆச்சரியம், இங்குள்ள சிற்பங்களைக் காண்கையில் எழுந்திடுவது இயல்பு. அதனாற்தான் ஒஸ்லோ நகரின் மிகப்பெரிய பூங்கா என்பதையும் தாண்டி, உலகின் மிகப்பெரிய சிற்பப் பூங்கா எனவும் பெருமை பெறுகிறது. நோர்வேயில் ஃபிராக்னர் பார்க் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும், ஒவ்வொரு ஆண்டும் 1 முதல் 2 மில்லியன் பார்வையாளர்கள் இதனைப் பார்வையிட வருகிறார்கள். சுற்றுலாப் பிரியர்கள், கலைஆர்வலர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று நோர்வேயின் ஃபிராக்னர் ( Frognerparken) பூங்கா.

-4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula