அன்மைக் காலத்தில் வெளியான சில திரைப்படங்கள் பல்வேறு வகையில் பலரது கவனங்களையும், விமர்சனங்களையும், பெற்றுள்ளன. அவ்வாறான மூன்று படங்கள் குறித்த எமது பார்வையும், சிறு குறிப்புக்களும்.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.
அசோக மித்திரனின் விமோசனம், ஜெயமோகனின் தேவகி சித்தியின் நாட்குறிப்பு, ஆதவனின் ஓட்டம், ஆகிய மூன்று சிறுகதைகள், திரையோவியமாகியுள்ளன. சிறுகதைகளின் சுயம் களையாமல், திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் வசந்த் எஸ் சாய். அதற்குப் பலம் சேர்த்துள்ளது ஏகாம்பரம், வைடு ஆங்கிள் இரவிசங்கர் ஆகியோரின் ஒளித் தொகுப்பும், இளையராஜாவின் இசையும்.
மூன்று கதைகளுக்குமான நாயகிகளின் தேர்வு கன கச்சிதம். கதையோடு வாழ்ந்து நிற்கின்ற பெண்களாக, காளீஸ்வரி சீனிவாசன், பார்வதி மேனன், லட்சுமி பிரியா சந்திரமெளலி தெரிகின்றார்கள்.
123 நிமிடங்கள் திரையில் விரையும் காட்சிகளில், நமது பெண்களின் அன்றாடச் சோகங்களும், துயரங்களும் அடர்ந்து விரிகின்றன. பார்த்து கொண்டு வருகையில் ஏதோ ஒரு இடத்தில் கதையின் மாந்தர்களாகப் பார்வையாளரை நெருக்கச் செய்யும் இயல்பான, இறுக்கமான கதைகள்.
பல திரைப்படங்களில் பங்கு கொண்ட இத் திரைப்படம் தமிழில் முக்கியமான ஒரு இடத்தை தனதாக்கிக் கொள்கிறது. தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
ரைட்டர்
தமிழக காவல்துறையின் சேவையிலுள்ள காவலர்களது மனநிலையையும், பிரச்சனைகளையும், பேசியவாறே அரசியற் சமூகநீதி சொல்லும் பிராங்க்ளின் ஜாக்கோப் ன் திரைக்கதை. இயக்கமும் அவரே. '96' படப் புகழ் கோவிந் வசந்தாவின் இசை.
அதிகாரம் எவ்வாறு மக்களை எவ்வாறு பலிகொள்கிறதோ, அதேபோல் காவலர்களையும் மிரட்டுகிறது என்பதைச் சொல்லும் கதை. தானே எழுதிய வரிகளுக்கு ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்வு பலியாகிறதே எனும் பரிதவிப்பில் இருக்கும் காவலரின் கரங்களாலேயே அவனது உயிருக்கும் முடிவுரை எழுதும் அதிகார வர்க்கமும், அதனால் எழும் மனப் போராட்டங்களுடனான காவலர் வாழ்வும் காட்சிகளினூடே கதையாக விரிகிறது.
கதையோட்டத்தின் நதி மூலமாக இருக்கும் பெண் காவலரின் மறைவும், அதன் பின்னாலுள்ள மர்மங்களும், அதிகார மமதைகளும், சராசரி மனதிர்கள் மீது தயவு தாட்சன்யமின்றிப் பின்னப்படும் வழக்குகளும், அதற்கான காட்சிச் சோடனைகளும், பார்ப்பவருக்கே மன உளைச்சல் தரக் கூடியவை எனில், பங்கேற்கும் காவலர்களுகளுக்கு எவ்வாறான அவஸ்தை நிலையை ஏற்படுத்தும் என்ற உண்மை நிலையை உணரவைக்கும் படம். இயக்குனர் சமுத்திரக்கனியும், திலீபனும், சுப்பிரமணிய சிவாவும், அந்த அவஸ்தை நிலையை மெய்நிலையாகத் திரையில் காட்சிப்படுத்துகின்றார்கள். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
ஷியாம் சிங்கா ராய்.
இணையத்தில் பலரும் சிலாகிப்பதையிட்டுப் பார்த்த படம். ஜனக சத்யதேவ் ன் கதையை, திரைக்கதையாக்கம் செய்து இயக்கி இருப்பவர் ராகுல் சாங்கிருத்யான். வரலாற்றுத் தகவலை உள்ளடக்கிய புனைவு சித்திரமாகவும், மறுஜென்மக் கதையாகவும், தெலுங்கு மொழிப் படமாக உருவாகி, தமிழ் மொழி உச்சரிப்பு சேர்க்கப்ட்டிருக்கும் படம்.
திரைப்பட ஆக்கத்திலும், அழகியலிலும், மிகத் தரமாக வந்திருக்கும் படத்திற்கு, சானு ஜோன் வர்கீஜின் ஒளிப்பதிவும், மிக்கி ஜே மேயரின் இசையும், சிறப்புச் சேர்கிறது என்றால், ஆறு கோடி ரூபா செலவில் கலை இயக்குனர் அவினாஷ் கொல்லாவால் கட்டிய காளி கோயிலும், கல்கத்தாவின் தெருக்களும், படத்திற்கு பிரமாண்டத்தையும், சரித்திரப் பின்னணியையும் தருகிறது.
திரைக்கதையில் பல இடங்களில் பெரும் ஒட்டைகள் வெளிப்படையாகத் தெரிகின்ற, கம்யூனிசம், புரட்சி, போராட்டம் என்பன தூவப்பட்ட ஒரு காதல் கதை. அந்தக் கதைக்கு நடிப்பால் நியாயம் சேர்த்திருக்கிறார்கள் நானியும், சாய் பல்லவியும். தனது நாட்டியத் திறமையை நன்கு வெளிப்படுத்தியிருக்கும் சாய் பல்லவிக்கு துணையாக இருக்கிறது சிறந்த நடன அமைப்பும், காட்சிப்படுத்தலும்.
அழகியலுடன் கூடிய திரையாக்கத்தால் கவனம் பெறும் படம் ஷியாம் சிங்கா ராய்.
இந்த மூன்று திரைப்படங்களிலும் பெண்களின் வாழ்வியல் பேசப்படுகின்றது என்பது ஒரு பொதுவான ஒற்றுமை.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்