வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பது நம் கலாச்சார மரபு. இந்த வாழ்தலின் விழைதலில் வரும் தவறுகளால், பிறவியைப் பெருந்துன்பமாகக் கான்பது நம் சமயமரபு.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது, நம் எல்லாவிதமான கர்மாக்களுக்கும் நாமே காரணம் என்பதன் தூய சிந்தனை. இவ்வாறான நம் கர்மாகளின் செயல் விளைவை கன்ம வினைகள் என்பது நம் சித்தாந்தம்.
இந்தக் கன்மவினைகளின் விளைவுகளை அழித்து நம்மை பிறவியெனும் பெருங்கடலை நீந்தி, பிறப்பற்ற பேரின்பத்தை ஆன்மாக்களுக்கு அருளுபவர் நம் சிவனார் என்பதே நம் சமயத்தின் மெய் ஞான நம்பிக்கை.
இந்த நம்பிக்கையை விஞ்ஞானத்தின்படி நாம் எவ்வாறு புரிந்து கொள்வது ?
ஏதுமற்ற ஓரிடத்தைச் சூன்ய வெளி என்கின்றோம். சூன்யப் பெருவெளியான பிரபஞ்சத்திலிருந்து இருந்து தோன்றியது நாம் வாழும் இப் பூவுலகும் மற்றும் அனைத்தும். இவை அனைத்தும் மீண்டும் பிரபஞ்சப் பெருவெளியில் அடக்கமாகி மறைந்துவிடும் என்கிறது விஞ்ஞானம். அந்த மறைத்தலை தருகின்ற சூன்யப் பெருஞ் சக்தி, இப்பிரபஞ்சத்தின் எல்லாவற்றையும் மறைத்து விடும் பேரிருள். பிறப்பிற்கும் முன்னதான கருவறை வாழ்வில் நம்மைச் சூழவும் காண்பது பேரிருள். நம் வாழ்வின் முடிவிலும் அந்தப் பேரிருளை நம்மை ஆட்கொண்டுவிடும்.
அந்த இருளாக, இருளுக்குள் ஒளியாக இருக்கும் தன்மையை நாம் இறையாக, சிவனாகக் கொண்டாடுகின்றோம். இதை உணர்த்தவே இருள் மிகுந்த இராத்தியில் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாக நம் சிவனைப் போற்றித் துதிக்கின்றோம். தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! அனைவருக்கும் சிவனருள் கிடைக்கப் பிரார்த்தித்திக்கின்றோம். சிவனைச் சிந்தித்திருப்போம் !
சிவனைச் சிந்தித்திருக்கும் வகையில், எமது வரிகளிலும், இசைக் கோப்பிலும் உருவான சிவன் பாடல்கள் சிலவற்றின் இணைப்பினை கீழே கருத்துப் பகுதியில் தருகின்றோம். கேட்டு இன்புற்றுச் சிவனைச் சிந்தித்திருக்க வாழ்த்துக்கள் !