தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடும் சூரியப் பொங்கல். முன்பொரு காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?
அது கிராமியம் நிறைந்த ஒரு அனுபவம். பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னரே வீட்டின் முன், ஆற்றுநீர் அடித்துக் கரைசேர்த்த வெள்ளைக் குருமணல் வண்டில்களில் ஏற்றி வந்து பறிக்கப்படும்.
வடபகுதியில் முற்றங்களை சாணகத்தால் மெழுகி, கோலம்போட்டு பொங்குமிடத்தை தயார் செய்வார்கள். ஆனால் கிழக்கில் அவ்வாறல்ல. குருமணலினைக் கொண்டு சிறிய மேடையொன்று அமைத்து, அதிலே கோலம் போட்டு, சுற்றிவரத் தோரணம் கட்டி அழகு செய்வார்கள். பொங்கல் பானைகள் பெரும்பாலும் மண்பாணைகளாகவே இருக்கும். மண்பானையில் பொங்கல் செய்வதென்பது, சுவையை மிகுதியாக்கும். ஆயினும் அதிலே பொங்குவது சற்று நுட்பமான காரியம்தான். பொங்கல், படையல் எல்லாம் ஏறக்குறைய வடபகுதிபோலவே இருக்கும்.
காலையில் படையலும் வழிபாடுமாக இருக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் மதியப்பொழுதுகளில் வேறுவகை மனமகிழ்வுக் கொண்டாட்டங்களாக மாறிவிடும். போட்டிகளும், விளையாட்டுக்களும், நடைபெறுமிடங்களில், போதையும் இருக்கும். அன்றைய நாளில் பெரும்பாலும் நடைபெறும் போர்த் தேங்காய் அடித்தல் விளையாட்டு எமக்கு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களோ தெரியாது. மிகுந்த சுவாரசியமானது.
ஒரு கைக்குள் மறைத்துவிடக் கூடிய சிறிய வகைத் தேங்காய் அது. யாழ்ப்பாணப் பக்கம் நாள்தேங்காய் மரமென சில மரத்தினைத் தெரிவு செய்து, அதன் தேங்காய்களை கோவில் தேவைகளுக்கும், மங்கள வைபவங்களும் பாவிப்பார்கள். கிழக்கில் அதுபோல் போர்த் தேங்காய் மரங்களும், தனித்துவமாகத் தெரிவு செய்து பாவிக்கப்படும். இந்தத் தேங்காய்களின் மேலோடாகிய சிரட்டை(கொட்டாங்குச்சி) மிகவும் தடிப்பானது. போர்த்தேங்காய் விளையாட்டில் ஒரே சமயத்தில், இருவர் ஈடுபடுவார்கள். தமிழகத்துக் கிராமங்களில் நடைபெறும் சேவற்சண்டைகளுக்கு இணையான சுவாரசியத்துடன் இவ்விளையாட்டு நடைபெறும். முதலில் ஒருவர் தன்தேங்காயை நிலத்தில் குத்தி நிறுத்துவார். மற்றவர் அதன் மேல் மற்றவர் தன் தேங்காயைக்கொண்டு அடிப்பார். வைத்த தேங்காய் உடையாவிட்டால், முறைமாறி, அடித்த தேங்காய் அடிவாங்கத் தயாராகும். சிலவேளைகளில் சிரடடைகள் வெடித்துச் சிதறுவதனால், போட்டியாளர்களின் முகம் கைகள் மட்டுமல்ல, பார்வையாளர்களது உறுப்புக்களும் ஊறுபடுவதுண்டு. போட்டியில் பணப்பந்தயம் முதல் தண்ணிப்பந்தயம் வரை இருக்கும். பல தேங்காய்களை சிதறடித்த தேங்காயை வைத்திருக்கும் நபர் அன்றைய பொழுதில் கதாநாயகன். ஏனென்றால் அவர் எங்கெங்கு போட்டிக்குச் செல்கின்றாரோ, அங்கெல்லாம் அவர் பின்னே ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கச் செல்லும். அவரும் ராஜமிடுக்குடன் நடந்து செல்வார்.
மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கலாக நடைபெறுவதும் இங்குதான் சிறப்பாக இருக்கும். தைப்பொங்கலின் மறுநாள் காலை முதலே பட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எருதுகளின் கொம்புகள் அழகாகச்சீவப்பட்டு வர்ணம் தீட்டப்படும். பசுக்கள் குளிக்கவார்க்கப்பட்டு, கழுத்தைச் சுற்றி மாலை அலங்காரங்கள் செய்யப்படும். . எருமையினப்பசுக்கள் நீராட்டபடுவதோடு சரி. பெரும்பாலும் நெற்றியில் ஒரு சந்தனப்பொட்டுடன் சமாதானம் கண்டுவிடும். காலையிலேயே பட்டிப்பொங்கல் நடைபெறும்.
பொங்கல் முடித்துப் படைத்த பின் பட்டிகள் திறக்கப்படும் தருணங்களுக்கான ஆயத்தங்கள் சில தினங்களுக்கு முன்னமே சிறுவர்கள் மத்தியில் ஆரம்பமாகிவிடும். நீளமான தடிகளில் கொழுக்கி போன்றதொரு கம்பியை வைத்துக் கட்டி, ஒரு தற்காலிக ஆயுதம் தயார் செய்து மறைத்து வைத்திருப்பார்கள். பட்டிகள் திறந்து பசுக்களும் காளைகளும் திறக்கப்பட்டதும், சிறுவர் குழாம்கள் கவனிப்பது, அக்கால் நடைகளின் கழுத்துக்களைத்தான். அவற்றின் கழுத்தில் கோர்த்துக்கட்டப்பட்டிருக்கும் வடை மாலைகளும், அந்த மாலைகளில் சேர்த்துக்கட்டப்பட்ட பணநோட்டுக்கள் சிலதும் தான் அவர்கள் எதிர்பார்ப்பின் இலக்கு.
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கால்நடையைக் கலைத்தவாறே விரையும். அவற்றின் கழுத்திலே உள்ள மாலைகளைக் குறிவைத்து, தற்காலிக ஆயுதம் நீளும். மாலைகள் அறுக்கபட்ட காளைகளையோ, பசுக்களையோ, பின்னர் யாரும் கலைக்க மாட்டார்கள். ஆனால் சில கால்நடைகள் இலகுவில் அகப்படமாட்டாது. தமிழகத்து ஜல்லிக்கட்டுக்குச் சமமான விறுவிறுப்போடு இந்த விரட்டும் நடக்கும். பெரும்பாலும் இந்த விளையாட்டில் இளைஞர்களும், சிறுவர்களுமே ஈடுபடுவார்கள். அறுத்தெடுக்கப்பட்ட மாலைகளில் உள்ள வடைகள் உடனடி உணவாகும். கிடைத்த பணம் அன்றிரவுச்சினிமாவுக்கு கட்டணமாகும்.