நாட்டார் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, பெருங்கோவில் வழிபாடு, மூடநம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, என பல்வேறு உரையாடல்களளாத் தோற்றுவித்திருக்கிறது காந்தாரா Chapter 1 திரைப்படம். ஆனால் இந்த விவாதங்களையெல்லாம் கடந்து, நிலம் சார்ந்த மக்களின் இறைநம்பிக்கையை, நாட்டார் இலக்கியத்தன்மையில் திரையில் காட்சிகளாகப் பதிவு செய்கின்றது என்பதே உண்மை.
காந்தாரா முதல் படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனும் எதிர்பார்ப்போடு பார்க்கத் தொடங்கினால், முதற் கதையின் முன்கதையாக விரிகிறது இப்படத்தின் திரைக்கதை.
ஒரு ஆவணப்படத்தின் தன்மையிலோ அல்லது பெரும் தத்ததுவார்த்தப் படைப்பாகவோ வெளிப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விடாது, வெகு இயல்பாகப் பார்வையாளனின் இரசனையை உள்வாங்கிடும் திரைக்கதை. அதற்கு வலுச்சேர்க்கும் காட்சிகள், மற்றும் கலைஞர்கள், அதனைப் பொருத்தமான வண்ணத்தில் அழகாககக் காட்சிப்பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவு, விழிகளால் காணும் காட்சிகளின் உணர்ச்சிகளாக மாற்றிட உதவுகின்ற இசைக் கோப்பு, என ஒன்றினைந்த ஒரு கூட்டுக்கலவையின் வெற்றியாகத் திரையில் தெரிகிறது காந்தாரா Chapter 1 .
நல்ல சக்தி, தீய சக்தி, இவற்றின் ஆளுமைக்குள் உட்படும் மக்கள் சமூகம், அந்தச் சமூகத்தினைக் காத்திடும் நம்பிக்கையின் திரளாகத் தோன்றும் தெய்வங்கள் எனத் துலங்கும் கதையில், எல்லா இடங்களிலும், மனித உணர்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. தெய்வங்களுக்கான வடிவங்களின் தோற்றத்தை இயற்கையின் பரிமாணத்திலிருந்து பிரசவிப்பதாக வெளிப்படுத்துவதும், அதனைப் பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருப்பதும், இயற்கையின் பேராற்றலை உணர்த்தும் அனுபவமாகக் காணலாம்.
ஒரு நல்ல நாவலை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாசித்து உணரும் அனுபவத்தினை படத்தில் வரும் சில காட்சிகள் ஏற்படுத்துகின்றன. இப்படத்தினை மற்றுமொரு முறை ஆழ்ந்து பார்க்க வேண்டும் எனும் ஆவலைச் சில குறியீட்டுக் காட்சிகள் ஏற்படுத்துகின்றன. விஸ்வரூபக் காட்சி போலத் தோன்றும் ஒரு காட்சி, பாய்ந்து வரும் புலியின் வேகத்திலிருந்து முன்வரும் நாயகனின் தோற்றம், கருந்துளைபோலத் தோற்றம் தரும் ஆழம் அறியமுடியாத பெருங்கிணறு, அதலிருந்து தோன்றும் நம்பிக்கையின் வடிவம், சக்தியாகத் தோற்றம் காட்டும் மாயா, அதனை அழிந்திடும் ஆதிசக்தி வடிவமும், மகாகாளியை நினைவுறுத்தும் தாண்டவமும், எனப் பல காட்சிகள் படம் முடிந்தபின்னும் சிந்திக்கத் தூண்டுகின்றன.
கதையின் காட்சிகளில் வரும் பாத்திரப்படைப்புக்களிலிருந்தும், கதைக்கூற்றுக்களிலிருந்தும், ஆதிக்கடவுளாக சிவனும், அவரது சிவகணங்களும் சித்தரிக்கப்படுவதை உணர்ந்து கொண்டாலும், இது எல்லைகள் கடந்த ஒரு படைப்பாகக் கொண்டாடப்படக் கூடியது. நாட்டார் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, பெருங்கோவில் வழிபாடு, எனும் பகுப்புக்களை எல்லாம் 'குலதெய்வம்' எனும் ஒற்றைச் சொல்லுக்குள் ஒன்றுபடுத்திவிடுக்கிறது படத்தின் திரைக்கதை.
இத்திரைப்படத்தினை எழுதி, இயக்கி நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி, கதையில், படத்தில், மட்டுமன்றி நடிப்பிலும் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார். அவருடையதும், அவரது குழுவினதும், அசாரதாரணமான உழைப்பு, திரையில் ஒரு பெரும் கற்பனையாக பிரமாண்டம் காட்டுகிறது. இக்கதையின் மூலக்கரு, அநாதாரவான மக்களின் அசாத்தியமான நம்பிக்கையில், உருவாகும் தெய்வம் எனும் கோட்பாடு, உலகம் முழுவதுக்குமானது. அந்த வகையில் இத்திரைப்படம், மதசமாச்சரியங்கள், சமூகங்கள், நாடுகள் என எல்லா எல்லைகளையும் தாண்டி, மக்கள் படைப்பாகக் கொண்டாடப்படலாம். ஏனெனில் உலகின் எல்லாத் திசைகளிலும், எல்லா மக்களிடத்திலும், எல்லாவற்றுக்கும் மேலான ஒருசக்தியைக் கொண்டாடும் பண்பு இன்றளவும் உண்டு. அது ஒவ்வொரு மக்கள் குழுமத்துக்கும் வேறுபடலாம், வித்தியாசப்படலாம், ஆனால் அந்த நம்பிக்கை ஒன்றே. அதனைத் தமிழில் குலதெய்வம் எனக் கொண்டாடுகின்றோம்.
நாமறிந்தவரையில் கன்னட மகக்களிடத்தில் உள்ள சிவநம்பிக்கை என்பது மிகப்பெரியது. மகாதேவனாகவே சிவனைக் கொண்டாடும் மக்களவர்கள். அவரகள் மத்தியிலிருந்து ரிஷப் ஷெட்டி உருவாக்கியிருக்கும், காந்தாரா Chapter 1 மூடநம்பிக்கையைப் பரப்புகிறதா?. இப்படத்தினைக் காணும் ஒருவர் இறைநம்பிக்கையாளர் எனில் சிறந்த பக்தி அனுபவத்தைத் தரும். நம்பிக்கை அற்றவர் எனில் நல்லவொரு கற்பனாவாத சினிமா அனுபவத்தைத் தரும் என்பதில் மாற்றமில்லை. ஆக மொத்ததில் நம்பிக்கையா? மூடநம்பிக்கையா ? என்பதைக் கடந்து, காந்தாரா Chapter 1 பெருந்திரையில் கண்டு மகிழவேண்டிய சினிமா பேரனுபவம்.
- மலைநாடான்