free website hit counter

நாம் ஏன் இணையத்தில் தமிழ் எழுதவேண்டும்..?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இணையத்தில் நாம் தொடர்ந்து தமிழ் மொழியில் எழுதுவது தொடர்பாக இணையத்தில் ஏன் இயங்குகின்றோம்,  தமிழில் ஏன் எழுதுகின்றோம் என முன்னரும் குறிப்பிட்டுள்ளோம்.

அரசியல் ஒரு சாக்கடை எனச்சொல்லி, அறிவார்ந்தவர்கள் அதிலிருந்து விலகிச் செல்வதிலும் பேரபாயமானது, எழுதத் தெரிந்தவர்கள் இணையம் ஒரு குப்பைக்கிடங்கு எனும் மனநிலையில், அதிலிருந்து விலகிச் செல்வது. எல்லோரும் எழுதலாம் எனும் நிலை இணையத்தில் தோன்றியதென்பது எத்துணை நல்லதோ அதேபோல தீமையானதும் தான். இது ஏதோ இணையத்திற்கான வரையறை மட்டுமல்ல, தொழில்நுட்ப  விஞ்ஞானத்தின் வளர்ச்சியில், பல கண்டுபிடிப்புக்களும் சமூகத்திற்குத் தருவது நன்மை, தீமை, எனும் இரு திறனையும்தான். இதில் நன்மையை எவ்விதம் பெருக்குவது என்பதே நல்லோர்களது நோக்காக இருக்க முடியும். 

இணையம் வலுப்பெற்று, செயற்கை நுன்னறிவுத்திறன்  பெருகிவரும் சூழலில், அறிவார்ந்தவர்கள் இணையத்தில் எழுதுவதும், இயங்குவதும்   மிக மிக அவசியமாகிறது.  நம் எழுத்தைத் திருடுகின்றார்கள், நம் எழுத்துக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அரற்றி ஒதுங்குவது ஒழுங்காகாது. 

இணையத்தில் சமூகவலைத்தளங்களின் பயன்பாடு வலுப்பெற்ற போதினில், அவற்றினை ஒருங்கமைக்கும் பெருநிறுவனங்களே நமது தரவுகளை நம்மையும் அறியாமல் எடுக்கத் தொடங்கிவிட்டன. அவை சட்ட ரீதியான சிக்கல்களைத் தோற்றுவித்த போது, நம் எழுத்துக்களை தாம் பிரதி செய்வதற்கான சட்டரீதியான நமது ஒப்புதல்களையும் பெற்றியங்கத் தொடங்கிவிட்டன. நமக்குத் தெரிந்தவழியில் நமது எழுத்துக்களை பிரதிசெய்வதைக் கண்டிக்க முடிகின்ற எமக்கு, நம்மையும் அறியாமல் எமது எழுத்துக்களைக் கையாளும் பெரு நிறுவனங்களை என்ன செய்துவிட முடிகிறது.  அதனாற்தான் எழுத்துப் பிரதியாக மட்டுமே எழுதுவோம் என ஒதுக்கிக்கொள்வதும் முறையாகாது. சமூக வலைத்தளங்களை புறந்தள்ளிச் செல்வதும் பொருந்தாது. 

இணையத்தின் அடுத்தகட்டப் பரிமாணம் செயற்கை நுன்னறிவு.  இதற்கான தரவுகள் இணையத்திலிருந்தே சேகரிக்கப்படுகின்றன. இணையத்தினைக் குப்பைக்கிடங்கு என நாம் ஒதுக்கிச் செல்வோமானால்,  இணையத்தில் பெறப்படும் தரவுகளும் சிறப்பாக இருக்க முடியாது.  மாறாக சரியான கருத்துக்களை நாம் பதிவு செய்து வருவோமானால், குப்பைக்குள் குன்றிமணிபோல, ஆழ்கடலின் முத்துப்போல, நல்ல விடயங்களைத் தேடுவோர்க்கு நிச்சயம் கிடைக்கும். 

இணையத்தில் தமிழ் மொழியில் இயங்குவோரும், எழுதுவோரும் அதிகளவில் தமிழகத்திலிருந்தே செயற்படுகின்றார்கள். அதனால் தமிழர்கள் குறித்த இணையத்தரவுகள் 
பலவும் தமிழகம் சார்ந்தே கிடைக்கிறது.  ஆனால் தமிழகத்திற்கு வெளியேயுள்ள தமிழர்களும் பல்வேறு பரிமானங்களில் வாழ்வியல் உடையவர்கள். அந்த வகையில் ஈழத்தமிழர்களது வாழ்வியல் அடையாளங்கள், நிலத்திலும், புலத்திலும் விரிவாகப் பதிவு செய்யப்பெறவேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து இணையத்தில் இயங்க வேண்டும், எழுத வேண்டும்  என்பதன் தேவை,  அவசியமானது, தவிர்க்க முடியாதது. 

எல்லாம் சரிதான், இவ்வாறியங்குவதால்  நமக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறதல்லவா எனும் கேள்விக்கு பதிலாக கீழ்வரும் எடுகோள்களைப் பார்க்கலாம். 

தற்போது  பிரபலமாகவுள்ள ஒரு செயற்கை நுன்னறிவுச் செயலியில், மலைநாடான் எனும் பெயரினைத் தேடல் செய்யதபோது, பின்வரும் தரவு கிடைத்தது.

மலைநாடான் எனும் புனைபெயரில் அறியப்பட்ட வே. வேங்கடசாமி நாயக்கர் (1860-1928) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் தத்துவவாதி ஆவார். இவர் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகிலுள்ள மலைநாடு என்ற சிற்றூரில் பிறந்தவர். அவரது வாழ்க்கையும் படைப்புகளும் தமிழ்ச் சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தன.

இந்தக் குறிப்பின்படி மலைநாடான் என அறியப்பட்ட வேங்கடசாமி நாயக்கர் இப்போது இல்லை. அவரது காலத்தில் இணையமும் இல்லை. இக்கட்டுரையை எழுதும் மலைநாடானாகிய நானும்  அவரில்லை. இணையம் தோன்றாத போது எழுதிய ஒருவர்பற்றித் தரவு கிடைக்கிறதென்றால், இணையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எம்மைக் குறித்த தரவுகளும் கிடைக்கத்தானே வேண்டும். ஆதலால்  மலைநாடான் எனும் இணைய எழுத்தாளர் குறித்து அறியத்தருக எனக் கேட்டபோது, 

மலைநாடான் என்பது தமிழ் சமூகத்தில் பிரபலமான இணைய எழுத்தாளர் மற்றும் வலைப்பதிவர் ஆவார்.  (மலைநாடான் எனும் பெயரில் எழுதத் தொடங்கிய 2006 ம் ஆண்டு காலப்பகுதியில் வலைப்பதிவுகளின் வழியேதான் நான் அறியப்பட்டிருக்கின்றேன்).  அவர் தனது பதிவுகளின் மூலம் சமூக, அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார விவகாரங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்துக்கொள்வதற்காக பிரபலமானவர். அவர் பெரும்பாலும் "மலைநாடான்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறார். மலைநாடான் தனது நேர்த்தியான எழுத்து மற்றும் தன்னிகரில்லாத கருத்துக்களால் பலராலும் மதிக்கப்படுகிறார்.

 மலைநாடான் தனது வலைப்பதிவுகளில் முக்கியமாக சமூக, அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார கேள்விகளை எழுப்புகிறார்.   சமூகவியல், அரசியல் விமர்சனம், தமிழ் இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் அவருக்கு ஆழ்ந்த ஆர்வம் உள்ளது.

மலைநாடான் தனது வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி சமூகத்தில் ஏற்பட்டுவரும் பிரச்சனைகள், மாற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக எழுதுகிறார். இவரது பதிவுகள் சராசரி மக்களிடம் புகழ் பெற்றவை, ஏனெனில் அவை எளிமையான மற்றும் நேர்மையான நடையில் எழுதப்பட்டுள்ளன. சமூக நீதி, அரசியல், கல்வி, தமிழரின் உரிமைகள், கலாச்சாரம் போன்ற பலவிதமான தலைப்புகளில் எழுதுகிறார்.   இவரது எழுத்து எப்போதும் பிரச்னைகள் மீது தீவிரமான பார்வையைக் கொடுக்கிறது, மேலும் தீர்வுகள் குறித்து விவாதிக்கவும் செய்கிறது. அவரது எழுத்து தெளிவானது மற்றும் எளிமையானது, பலராலும் புரிந்துகொள்ளக்கூடியது. சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் சிந்தனைகளைக் கொண்டு எழுதுவதால், அவரின் பதிவுகள் பரவலாகப் படிக்கப்படுகின்றன.

மலைநாடான் தனது பதிவுகளில் வழக்கமாக வலியுறுத்தும் சில முக்கிய விஷயங்கள்:

    சமூக நீதி: சாதிய வேறுபாடுகள், சமூக அனியாயங்கள் மற்றும் இவைகளுக்கு எதிரான போராட்டங்கள்.
    அரசியல் விமர்சனம்: தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அதிகாரத்தின் நிழற்படிகள்.
    தமிழர் உரிமைகள்: தமிழர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளம் பற்றிய உரிமைகள்.
    கல்வி: கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதன் வளர்ச்சி.

மலைநாடான்  ஒரு விளக்கமான, ஆழ்ந்த சிந்தனையுடைய எழுத்தாளர், வலைப்பதிவர், சமூகவியல் மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் தனது கூர்மையான பார்வையை வழங்குபவர். எனத் தொகுக்கிறது செயலி. 1995ம் ஆண்டு முதல் இணையத்தில் தொடர்ந்து இயங்கியும், எழுதியும் வருபவன் எனும் வகையில் கிடைக்கிறது இந்த அங்கீகாரம்.

அதேபோல எமது 4தமிழ்மீடியா இணையத்தளம் குறித்து கேட்ட போது,

4தமிழ்மீடியா என்பது தமிழ் சமூகத்திற்கு சேவை செய்யும் ஒரு இணைய இதழ் ஆகும். இது பலவிதமான தலைப்புகளில் கட்டுரைகள், செய்திகள், விமர்சனங்கள், மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் போன்றவற்றை வெளியிடுகிறது. 4தமிழ்மீடியா தமிழர்களுக்கான பரந்த படைப்புகள் மற்றும் தகவல்களை வழங்குவதில் பெரும் பங்களிப்பை ஆற்றுகிறது. இது இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கும்.

சமூகவியல், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பலவிதமான தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள். புத்தக விமர்சனங்கள், சினிமா விமர்சனங்கள், இசை விமர்சனங்கள், பல சமூக, அரசியல் மற்றும் கலாச்சார பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துகொள்வது.

4தமிழ்மீடியா பல்வேறு துறைகளில் உள்ள துறைசார் மற்றும் திறமையான எழுத்தாளர்களை கொண்டுள்ளது.   இவை தங்கள் கட்டுரைகள் மற்றும் பகிர்வுகளின் மூலம் வாசகர்களுக்கு ஆழமான மற்றும் சிந்தனையூட்டும் தகவல்களை வழங்குகின்றனர்.

மொத்தத்தில்: 4தமிழ்மீடியா என்பது தமிழ் மொழி பேசும் மக்களுக்காக செயல்படும் ஒரு முக்கியமான இணைய இதழ் ஆகும். இது சமூக, அரசியல், கலாச்சாரம், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் ஆழமான கட்டுரைகள் மற்றும் செய்திகளை வழங்குவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது.

எனத்தருகிறது.  ஆதலால் நமக்கான அங்கீகாரம் கிடைக்காது எனவோ, அதனையாரும் மறுதலித்து விடுவார்கள் எனவோ நாம்  ஐயமுறத்தேவையில்லை. நமக்குத் தேவை உண்மையான, நேர்த்தியான நீண்டகால உழைப்பு மட்டுமே. 

ஏன் நாம் எழுதுகின்றோம் ? என்றால் " எழுத்தும், பயணமும், என் இருவகைத் தியானங்கள் " என்பேன். எழுதுவது முதலில் எமக்குத் திருப்தி தருகிறது. அதுவே சமூகத்திற்குப் பயன்படுமானால்  பரம திருப்தியாகிறது. நம்முடைய சிந்தனை எழுத்தாகவோ, பாடலாகவோ வடிவம் பெற்றுவிட்டால், பின் அது நமக்கானது மட்டுமல்ல என்பதுதான் உண்மை.  நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்... என்பான், தேசத்திற்கும் தமிழுக்குமாக  வாழ்ந்த மகாகவி பாரதி.  அந்தச் சுதந்திர உணர்வு படைத்தவர்களிடமிருந்து நமக்குக் கிடைத்தவைதான், தேவாரத் திருமுறைகள் முதல், பாரதியின் பாடல்கள் வரை என்றும் சொல்லாம். 

களைகள் முளைகின்றன என்பதற்காக யாரும் நிலத்தில்  பயிரிடாமல் இருப்பதில்லை.  எதை விதைக்கிறோமோ? அதனையே அறுவடைசெய்ய முடியும். அது விதையாக இருந்தாலும் சரி, வினையாக இருந்தாலும் சரி என்பது பொது மொழி. இதையே  இணையத்தில் நாம் எழுதுவதற்கும் பொருந்திப் பார்க்கலாம். ஆகவே நல்லவற்றை நாளும் இணையத்தில் எழுதுவோம், இன்புறுவோம்..!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula