ஆகஸ்ட் 1, 1291 ம் ஆண்டில் சுவிஸ் கூட்டமைப்பு எனும் உடன்பாட்டில் உருவானதுதான் சுவிற்சர்லாந்து எனும் தேசம்.
குறுநில ஆட்சியாளர்களினால் பிளவுண்டிருந்த நிலப்பரப்பில், 1291 ம் ஆண்டு, Uri, Schwyz, Unterwalden எனும் சூன்று பகுதிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்புகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளச் செய்த ஏற்பாடே சுவிஸ் கூட்டமைப்பின் ஆரம்பம் . இதுவே ஆகஸ்ட் 1ந் திகதி சுவிற்சர்லாந்தில் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. சுவிஸ் தேசிய தினம், நாட்டின் ஒருங்கிணைப்பு மற்றும் சுதந்திரத்தை கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான நாளாகும்.
ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலங்கள் என, சுவிற்சர்லாந்து, நோர்வே, கேரளா ஆகிய பகுதிகளைச் சொல்வது ஒரு வழக்கம். இந்த மூன்று நிலங்களும் இயற்கை அழகு நிரம்பியவைதான். அதே போன்று இயற்கைச் சீற்றப் பேரழிவுகளுக்கும் ஆளாகக் கூடிய பிரதேசங்களே. ஆனால் இயற்கையைப் பேணுதலாலும், சீரிய கல்வித் தரத்தாலும், தமது பகுதிகளை அழகிய நிலங்களாக ஆக்கி வைத்திருக்கிறார்கள் இப் பிரதேங்களின் மக்கள்.
ஐரோப்பாவின் நந்தவனம், விளையாட்டுத்திடல், என்றெல்லாம் பாராட்டப்படும் சுவிற்சர்லாந்தின் பெருமைக்குரிய விடயங்கள் பலவுண்டு. குறிப்பாக தொழில்நுட்பம், பொருளாதாரம், இயற்கை அழகு, மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் பெறும் நாடாக இருப்பினும், நடுநிலை நிலைப்பாடு (Neutrality) எனும் அணிசாராக் கொள்கையினால் மிக நீண்டகாலப் பெருமைக்குரியது. 1815 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச முரண்பாடுகளில் எத்தரப்பிலும் பங்குபெறாமல், நடுநிலையான அரசியலமைப்பைக் கடைப்பிடித்து வருகின்றது. இது, நாட்டு மக்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது.
சுவிற்சர்லாந்தின் இயற்கை அழகும் பெருமைக்குரியதே. அல்ப்ஸ் மலைகள், நீரோட்டங்கள், குளங்கள் மற்றும் பசுமை நிறைந்த காடுகள் உலகின் மிக அழகான இயற்கை அழகு நிறைந்த நாடாக சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன.
சுவிற்சர்லாந்து உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக இருக்கிறது. சுவிஸ் நிறுவனங்கள், குறிப்பாக ஹோட்லிங் மற்றும் நெஸ்லி போன்றவை, தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்னிலை வகிக்கின்றன. இதேபோல, ETH Zurich, EPFL Lausanne போன்ற பல்கலைக்கழகங்கள் உலகளாவிய ஆராய்ச்சி மையங்களாக உள்ளன.
சுவிற்சர்லாந்தில் உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் உள்ளது. இதில் சிறந்த மருத்துவம், கல்வி, மற்றும் பொது சேவைகள் உள்ளன. சுகாதாரம், சமூக நலன், மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
பொருளாதார நிலையில், பங்குச்சந்தை மற்றும் வங்கி துறை (Banking and Finance) முக்கியம் பெறுகிறது. சுவிற்சர்லாந்து உலகின் முக்கிய பங்கு சந்தை மற்றும் வங்கி மையங்களில் ஒன்றாக உள்ளது. சுவிஸ் வங்கிகள், அதன் தனிப்பட்ட வங்கி சேவைகள் மற்றும் பாதுகாப்பு முறைமைகளுக்காக பிரபலமாக உள்ளன. Zurich மற்றும் Geneva ஆகிய நகரங்கள் உலகின் முக்கிய நிதி மையங்களில் உள்ளன.
சுவிற்சர்லாந்தில் மலையேற்றம், பனிச்சறுக்கு மற்றும் திசைக்காட்டி நடைபயிற்சி போன்ற விளையாட்டுகளும் பயிற்சிகளும் மிகவும் பிரபலமாக உள்ளது. பல்வேறு சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.
சுவிஸ் கடிகாரங்கள் தரம் மற்றும் துல்லியத்திற்காக உலகப்புகழ் பெற்றவை. ரோலெக்ஸ், ஒமேகா, பத்தேக் பிலிப்பே போன்ற பிராண்டுகள் உலகின் முன்னணி கடிகார உற்பத்தியாளர்களாக உள்ளன. சுவிஸ் சாக்லேட் அதன் உயர்ந்த தரம் மற்றும் சிறந்த சுவைக்காக உலகப்புகழ் பெற்றது. Lindt, Toblerone போன்ற பிராண்டுகள் சுவிஸ் சாக்லேட் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுவிற்சர்லாந்தின் பெருமைகளை இவ்வாறு பல துறைகளில் காணலாம்.
சுவிற்சர்லாந்தில் பல்வேறு சமூகங்களின் கலவையும் எதிர்காலமும் குறித்து விளக்குவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சுவிஸ் எனும் நாடு உருவாகிய போது, ஜெர்மன், பிரெஞ்ச், இத்தாலிய, ரோமான்ஷ் போன்ற மொழி பேசும் சமூகங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது, கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற பிரதேசங்களிலிருந்து வந்த குடியேறிய மக்களும் தேசிய இனப்பட்டியலுக்குள் உள்ளார்கள்.
சுவிற்சர்லாந்தில் குடியேறியவர்கள், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் இப்போது முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால், பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றோடொன்று கலந்துள்ளது சுவிற்சர்லாந்தின் தனித்துவம். பலவிதமான கலாச்சார நிகழ்ச்சிகள், உணவு, கலை, இசை ஆகியவற்றால் வளமாகி உள்ளன.
இதேவேளை பல்வேறு சமூகங்களை ஒருங்கிணைப்பது சவாலாக இருந்த போதும், அனைத்து சமூகங்களுக்கும் சமமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் எனும் நிலையில் பல திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. அந்த உருவாக்கத்தின் அங்கமாக நாமும் இணைந்திருந்து இன்றைய தேசிய நாளில் வாழ்த்துவோமாக..!