free website hit counter

வைரஸ் மாறுபாடு Vs தடுப்பூசி - வெல்வது யார் ?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசிகள் வந்தால் தொலைந்து விடும் என்றிருந்த எண்ணத்தில், வைரஸின் மாறுபாடுகள் மண் அள்ளித் தூற்றியிருக்கின்றன.

மருத்துவ உலகம் வைரஸிற்கும், அதனை எதிர்க்கும் தடுப்பு மருத்துக்குமான போட்டி குறித்து ஆரம்பத்திலிருந்தே யோசிக்கமலலில்லை. ஆனால் மாறுபாட்டின் வேறுபடுதலைக் கணிப்பது என்பது அவ்வளவு இலகுவானதுமல்ல என்பதைச் சமகாலம் உணர்த்தி வருகிறது.

முன்னைய காலப் பெருந்தொற்றுக்களின் போது கண்டுபிடிக்கப்பட்டதை விட வேகமாகவே தடுப்பூசி கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடிக்கும் வசதியை நவீன மருத்துவ உலகம் கொண்டிருந்தது. ஆனாலும் அதனையும் மீறி வைரஸ் வேகமாக மாறுபாடு கொள்வதும் சமகாலத்தில் உணரப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி குறித்து அன்மையில் கருத்துரைத்த, ஜெனீவா பிரபல தொற்று நோய் நிபுணர் டிடியர் பிட்டெட் கூறுகையில், "அதிக தடுப்பூசிகள் உள்ள நாடுகளில் மிகவும் அஞ்சப்படும் மாறுபாட்டின் வகைகள் எழும். இது மாறுபாட்டிற்கும் தடுப்பூசிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும். எதிர்ப்பை எதிர்கொள்ளும் வைரஸ், 'நான் மாற வேண்டும், இல்லையெனில் இறந்துவிடுவேன் ' எனத் தனக்குத் தானே கட்டளையிட்டுக் கொள்ளும். இது ஒரு உயிர் பிழைப்பு உள்ளுணர்வு. வைரஸ்களின் உள்ளனர்வு அவற்றினை மாற்றியமைக்க முடிகிறது. இது ஆச்சரியமல்ல ”என்று அவர் ஒரு செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் கோவிட் -19 தளர்வுகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் ?

அவர் மேலும் கூறுகையில், எங்களால் எல்லாவற்றையும் நிறுத்த முடியாது. ஏனென்றால் மக்கள் சோதனை அல்லது தடுப்பூசி போட மறுக்கிறார்கள். அதேவேளை டெல்டா மாறுபாட்டின் பரவல் காரணமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய அலைகள் ஏற்படலாம். அவற்றின் அளவு மக்கள் தொகையில் தடுப்பூசி பெற்றவர்களின் பாதுகாப்பு சார்ந்தது. டெல்டா மாறுபாட்டை கட்டுக்குள் வைத்திருந்தாலும் கூட புதிய மாறுபாடுகள் தோன்றாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் அளிப்பதற்கில்லை. இந்த வைரஸ் ஒருபோதும் நீங்காது, அதனுடன் வாழ கற்றுக்கொள்வோம். இது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதோ அல்லது புதிய விடயமோ அல்ல.

நாங்கள் அனைவரும் குழந்தை பருவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பெரிய கொரோனா வைரஸ் குடும்பங்களுடன்தான் வாழ்கிறோம். 20 வயதிற்குள், நம்மில் கிட்டத்தட்ட 100% பேர் இந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். நம்மில் 100% பேர் ட கோவிட் -19 க்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும். பின்னர் நாங்கள் இதைப் பற்றி பேச மாட்டோம். தடுப்பூசி அந்த கட்டங்களை துரிதப்படுத்த உதவுகிறது என்று கூறி நிறைவு செய்கின்றார்.

ஆக, வைரஸுக்கும், வாழ்வுக்குமான இந்த யுத்தத்தில் ஆரோக்கியம் மட்டுமே முக்கியமானது. அதுவே மீட்சி தரக் கூடியது. கொரோனா பெருந்தொற்றின் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவ மனையிலிருந்து மீண்ட நண்பரொருவருடன் நேற்றுப் பேசுகையில், " மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டு வந்திருக்கின்றேன். இப்போது என்னால் எல்லாத் தவறுகளையும் மன்னிக்க முடிகிறது. எல்லோரையும் நேசிக்க முடிக்கிறது. ஏனெனில் வாழ்வு மகத்தானது. இயற்கை மிக மிகப் பெரியது " எனச் சொன்னார்.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula