வாழ்நாளில் சென்னைக்கு சென்றிடாத ஒரு இலங்கைத் தமிழனை சென்னைத் தமிழ் பேசும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த தமிழனாக காண்பிக்க முயற்சித்தால், அவன் இந்தியத் தமிழனாக மாறுவதற்கான உழைப்பு அந்த நடிகனுக்கு குறைந்தது இரண்டு வருடங்களாவது தேவை.
ஜகமே தந்திரத்தில் மாத்திரம் எப்படி உங்களால் இவ்வளவு வேகமாக இலங்கைத் தமிழர்களின் கதாபாத்திரங்களை பெரும்பாலான இந்தியர்களை கொண்டு உருவாக்க முடிகிறது?
“தமிழ் என்றால் தமிழ்நாடு மட்டும் தானா?” என அந்தபடத்தில் வரும் கேள்வியை திருப்பி அவர்களிடமே கேட்க தோன்றுகிறது. “இலங்கைத் தமிழர்கள் என்றாலே இந்தியர்கள் மாத்திரம் தானா?”
ஒடுக்கப்பட்ட ஒருவனின் வாழ்க்கையை காண்பிப்பதற்கு ஒடுக்கப்பட்ட இனமொன்றில் இருந்து தான் ஒருவனை தேடிப்பிடித்து, நடிப்பு சொல்லிக்கொடுத்து, திரையில் காண்பிக்க வேண்டுமென்றில்லை. ஆனால் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அவர் எந்தளவு ஒடுக்கப்பட்ட ஒருவனை/ஒருத்தியை முடிந்தளவு நேர்மையாக ஒத்திருக்கிறார், எந்தளவு அவராக மாறுகிறார் என்பதனை பொருத்து ஒரு திரைப்படத்தின் நேர்த்தி எழுகிறது.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இலங்கைத் தமிழ் பேசும் விடுதலைப் போராளிகளை காண்பிக்கையிலோ, தென்னாலியில் கமல் இலங்கைத் தமிழ் பேசுகையிலோ, ஜகமே தந்திரத்தில் இலங்கைத் தமிழர்கர்களாக காட்டப்படும் பல இரண்டாம் நபர்களிலோ அவர்களை சுற்றி ஒரு மிகப்பெரிய திரைப்பட பட்டாளம் இருக்கிறது. நம்பும் வகையிலான நடிப்புத் தீணியும், உணர்ச்சி வேகமும், இசையும், பரிசமும், காதலும், கோபமும் இருக்கிறது. அதில் ஒன்றையும் மறுப்பதிற்கில்லை. இலங்கைத் தமிழர்கள் எவரெனத் தெரியாதவர்களுக்கு இவர்கள், இப்படித்தான் இருப்பார்கள் என நம்ப வைக்கக் கூடிய சக்தியும் அத்திரைப்படக் கதைகளுக்கு இருக்கிறது. ஆனாலும் படம் எம்முள் ஒட்ட மறுக்கிறது. நடிப்பு மாத்திரம் அல்ல, முழுக்கதையுமே. உலகில் எந்த மூலையில் இருந்தாலும், எந்த இனத்தவனாக இருந்தாலும், உங்கள் திரைபப்டத்தில் என்னைக் காண முடியாவிடால் என்னால் அந்த திரைப்படத்தின் காட்சிப்படுத்தலில் தொலைந்து போக முடியாது என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒரு சினிமா மேற்கோள் குறி.
இது இலங்கைத் தமிழனுக்கு மட்டுமல்ல. மலேசியத் தமிழனாக ஒருவனை நீங்கள் உங்களது தென்னிந்திய திரைப்படத்தில் காண்பிக்கும் போதும் இதே சிக்கல் தான். இந்த திரைப்படத்திலும் அது தான் நடந்திருக்கிறது. ஒரு புலம்பெயர் இலங்கைத் தமிழனின் வாழ்க்கையை பெருமைப்படுத்துவதாக நினைத்து கொண்டு இன்னமும் இழிவுபடுத்தியிருக்கிறீர்கள். அது தனியாக மொழி உச்சரிப்ப்பு மட்டுமல்ல. நடை உடல் மொழியியல், ஆடை மொழியியல், ஒப்பணை மொழியியல், மற்றவர்களுடன் பழகும் மெய்யியல் என அனைத்திலும் இருக்கிறது. “தமிழ் என்றால் தமிழ்நாடு மட்டும் தானா” எனும் ஒரு கேள்வியை நீங்கள் கேட்ட விதம், அதன் உச்சரிப்பு போதும். கடைசிவரை உங்களால் எங்களை புரிந்து கொள்ள முடியாது எனும் எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை .
இதன் திரைக்கதை மற்றும் வசனத்தில் இலங்கை எழுத்தாளர் ஒருவரை இணைத்து பணிபுரிந்ததாக சொல்கிறீர்கள். நடிப்பிலும் பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக சொல்கிறீர்கள். ஒன்று, அவர்களது எழுத்தையும், அவரது பரிந்துரைகளையும் காட்சியில் மாற்றீடு செய்வதற்கான புரிந்துணர்வு உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது அவர்கள் உங்கள் குழுவில் இணைந்ததற்கென்ன, அவர்களால் உங்களது எந்த ஒரு திரைப்பட பாணியையும் மாற்ற முடியாத, சக்தியவற்றவராக இருந்திருக்கலாம்.
இறைவியில் காணக்கிடைத்த கார்த்திக் சுப்புராஜ், ஜகமே தந்திரத்தில் காணமுடியாது போனது ஆச்சரியமாக இருந்தது. ஆழமற்ற தேடல் காரணமா? அல்லது இறைவி எனக்கு பரீட்சயமில்லாத, நான் வாழ்ந்திடாத வாழ்வாதாரக் களம் என்பதனால், அதன் அனைத்து கதாபாத்திரங்களுடனும் என்னால் நம்பும் படியில் ஒட்டமுடிந்ததா? நான் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்வியல் களத்தில் நின்று என்னை திரைபப்டத்தில் பிரதிநிதித்துப் பேச நினைக்கும் போது, என்னால் அத்திரைப்படத்தில் போலியாக காண்பிக்கப்படும் அனைத்து சூட்சுமங்களும் சட்டென இணங்கான முடிகிறது போலும்.
இவற்றை எல்லாம் விட ஒரு மூன்றாவது காரணம் இருக்கலாம். திரைப்பட உருவாக்கல் என்பது எப்போதும் ஒரு தனிமனித வேலையல்ல. இறைவியில் கார்த்திக் சுப்புராஜின் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் எவரேனும் படத்தின் நேர்த்திக்கு மிக கச்சிதமாக மறைமுகமாக கைகொடுத்திருக்கலாம். ஜகமே தந்திரம், Netflix இன் தடம், பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் எனும் போது குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டிய காமர்சியல் கால எல்லை கார்த்திக் சுப்புராஜ்ஜுக்கு எதையும் ஆழமாக செல்ல முடியாத கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
இயக்குனர் வெற்றி மாறனிடம், ரவிச்சந்திரன் அஷ்வின் யூடியூப் செவ்வியில் ஒரு கேள்வி கேட்பார். Time Traveling பற்றி நீங்கள் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள், எங்கிருந்து தொடங்குவீர்கள்?
வெற்றி மாறனின் பதில், நான் முதலில், Quantum Physics படிக்கத் தொடங்குவேன். ஐன்ஸ்டீனின் எண்ணங்களிலிருந்து, இப்போது வெளிவந்திருக்கும் நவீன விஞ்ஞானத் தேடல்கள் வரை படிப்பேன். ஆராய்வேன். அதற்கு பிறது இந்த விடயங்களை இன்றைக்கு விஞ்ஞானம் எப்படி பார்க்கிறது, ஆன்மீகம் எப்படி பார்க்கிறது, மெஞ்ஞானம் எப்படி பார்க்கிறது என்பதெல்லாம் தெரிந்துகொண்டு ஒரு பத்துவருடத்துக்கு பிறகு கதையை எழுதத் தொடங்குவேன் என்பார் சர்வசாதாரணமாக.
உங்களுக்கு நன்கு பரீட்சயமான ஒரு கதைக்களமாக இருக்கலாம். அல்லது பரீட்சயமற்ற ஒரு புதுக்களமாக இருக்கலாம். உங்களால் அதை சரிவர ஆழமாக புரிந்துகொள்ளும் வரையிலான பொறுமையும், தேடலும், உழைப்பும் இல்லாதவரை எந்தவொரு சினிமாவும் சிறந்த வரலாற்று திரைப்படங்களாக உருவாக முடியாது.
- 4தமிழ்மீடியாவுக்காக: ஸாரா