ஆகஸ்ட் 1 சுவிற்சர்லாந்து தனது தேசிய சுதந்திர நாளைக் கொண்டாடுகிறது. 2021 ஆகஸ்ட் சுவிஸின் 730 வது தேசிய நாள்.
குறுநில ஆட்சிகளாகச் சிதறிக்கிடந்த மலைப்பிரதேச நிலப்பகுதிகளிலிருந்து, யூரி, ஸ்விஸ் மற்றும் அன்டர்வால்டன் ஆகிய மூன்று பிராந்தியங்கள், லுசேர்ன் ஏரிக்கு அருகிலுள்ள ரட்லி மைதானத்தில், 1291 ஆகஸ்ட் 1ல் கூட்டாட்சி சாசனத்தில் கையெழுத்திட்டன. அந்தநாளை குறிப்பாக வைத்து, சுவிற்சர்லாந்தின் தேசிநாள், அதிகாரபூர்வ விடுமுறைநாளாக அறிவிக்கப்பட சுமார் ஒரு நூற்றாண்டு சென்றது. இப்போதுள்ள சுவிஸ் கூட்டாட்சியில் 26 மாநிலங்களுக்கான அங்கீகாரம் 1999 ம் ஆண்டின் கூட்டாட்சி அரசியலமைப்பில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
சுவிஸ் அரசியலில், பெண்களுக்கான வாக்குரிமை குறித்த முதல் வாக்கெடுப்பு 1 பிப்ரவரி 1959 அன்று நடத்தப்பட்டது. ஆனாலும் மக்களின் பெரும்பான்மையினரால் (67%) நிராகரிக்கப்பட்டது. எனினும் சில பிரெஞ்சு மாநிலங்கள் பென்களுக்கான அரசியல் உரிமையை வழங்கின. ஆனால் சுவிஸ் கூட்டாட்சி அரசின் தேர்தலில் பெண்கள் பங்கு கொள்வதற்கான உரிமை, 1971 இல் வாக்கெடுப்புக்குப் பின் கிடைத்தது. ஆயினும் அப்பென்செல் இன்னர்ரோடென் (AI) எனும் சிறிய மாநிலம், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை 1991 ல் வழங்கிய போதே இது முழுமைபெற்றது.
சுவிற்சர்லாந்தில் பெண்கள் வாக்குரிமையினை முழுவதுமாகப் பெறும் காலப்பகுதிக்குள், இலங்கையில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க (1960-1965, 1970-1977) இரு தடவைகள் அரசியற்தலைவராகவும், உலகின் முதல் பெண் பிரதமராகவும், பதவி வகித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மக்களில் ஒரு பகுதியான பெண்கள் அரசியற் பங்கு கொள்ளவே மிக நீண்டகாலம் எடுத்த சுவிஸ் அரசியலில், வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் முக்கியத்துவம் பெறமுடியுமா ? என்பது ஒரு முக்கியமான கேள்வியாக உள்ளது. இக் கேள்விக்கான ஒரு பதிலை அல்லது அது சார்புடைய ஒரு கருத்தினை வெளிப்படுத்துகிறது அன்மையில் லூசெர்ன் மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகங்களின் அரசியல் விஞ்ஞானிகள் நெனாட் ஸ்டோஜனோவிச் மற்றும் லீ போர்ட்மேன் ஆகியோரால் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள்.
சுவிஸிலிருந்து ஜேர்மனிக்குச் செல்ல ஆகஸ்ட் 1 முதல் சோதனைச் சான்று அவசியம் !
தேசிய கவுன்சிலுக்கான 2015 கூட்டாட்சி தேர்தல்கள் தொடர்பான 600,000 வாக்குச்சீட்டின் பகுப்பாய்வின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொதுவாக சுவிஸ் குடும்பப்பெயர் இல்லாத மக்கள் இரட்டிப்பாக பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டுவதாகவும், அவர்கள் பெரும்பாலும் கட்சிப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இது வலதுசாரி வாக்காளர்களிடையே அதிகமாக வெளிநாட்டுப் பெயருடைய வேட்பாளர்களைக் குறைக்கிறது. அதேவேளை மறுபுறம், வாக்காளர்கள் பெரும்பாலும் "சுவிஸ்" குடும்பப்பெயருடன் வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறார்கள் எனக் குறிப்பிடுகின்றது. 2015 தேர்தல்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தேர்தல்களில் இந்த நிலையில் மாற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய புள்ளியியல் அலுவலகத் தரவுகளின்படி, சுவிற்சர்லாந்தில் இடம்பெயர்வு பின்னணி கொண்ட பெரியவர்களின் பங்கு கிட்டத்தட்ட 38% ஆகும். இவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் (13%) இயல்பானவர்களாவும் மற்றும் முழு அரசியல் உரிமைகளை அனுபவிப்பவர்களாவும் உள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிற்சர்லாந்தின் உள்ளூர் அரசியற் தளங்களிலும் கட்சிகளிலும், தற்போது எம்மவர்கள் பலர் பிரவேசித்துள்ளார்கள். இவர்களது வெற்றிக்கும், முன்னணியில் வருவதற்கும், பெருஞ் சவால்களாக இருக்கக் கூடியவற்றில் முக்கியமானது, அவர்களது குடும்பபப் பெயர்கள் என்பது இந்த ஆய்வின் வழி அறியவருகிறது. ஆனாலும் வாக்காளிக்கும் உரிமை பெற்றுள்ள நம்மவர்களின் கூட்டான மற்றும் தவிர்க்கப்படாத வாக்களிப்புக்கள், இரண்டாம் தலைமுறையினரின் அரசியற்கல்வியும், அதனூடான ஆழ்ந்த அரசியற்புலமையும், அவர்களுக்கான முக்கியத்துவத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்