சுவிற்சர்லாந்தில் நடைபெறும் மிக முக்கிய சர்வதேச திரைப்பட விழா லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவாகும். அமெரிக்காவின் ஆஸ்கார், பிரான்சின் கேன்ஸ், இத்தாலியின் வெனிஸ், ஜேர்மனியின் பேர்ளின், திரைப்படவிழாக்களுக்கு இணையாக நடாத்தப்படும் இத் திரைப்படவிழா, ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக விளங்குவதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
சினிமாவில் மாற்றுச் சிந்தனைகளுக்கான தளம், புதியவர்களுக்கான களம், என்பவற்றோடு, பியாற்சா கிரான்டே எனும் பெருமுற்றப் பிரமாண்டத் திறந்தவெளித் திரை என்பதுவும் இச் சர்வதேசத் திரைப்படவிழாவின் தனிச் சிறப்பு. கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக சென்ற ஆண்டு அந்தச் சிறப்பினை இழந்திருந்த லோகார்னோ சர்வதேசத் திரைப்படவிழா, இந்த ஆண்டு அந்த இழப்பிலிருந்து மீண்டெழுகிறது.
'பார்வையாளர்களுக்குப் பாதுகாப்பான திரைவிழா' எனும் அடை மொழியொடு இன்று ஆரம்பமாகும் லோகார்னோ திரைபடவிழா குறித்து, அதன் ஒருங்கமைப்புக் குழுத் தலைவர் மார்கோ சோலாரி கூறுகையில், "இந்தப் பெருஞ் சதுக்கத்தில் கடந்த ஆண்டில் இருந்த சோகத்தினை மறப்போம், அதனை மாற்றுவோம் என நாங்கள் சொன்னோம். அதை இப்போது அனுபவிக்கத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திரைவிழாவின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது மிகவும் எளிது. விழா ஒருங்கமைப்பாளர்களின் உறுதியால் இந்த முடிவை அடைய முடிந்தது " எனக் கூறினார்.
இன்று மாலை பியாஸ்ஸா கிராண்டே பெரு முற்றத்தில் லோகார்னோ திரைப்பட விழாவின் 74 வது பதிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்குகிறது. இத்திரைப்படவிழாவின் புதிய கலை இயக்குன◌ாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜியோனா ஏ. நஸாரோவின் தெரிவுத் தலைமையில் 200க்கும் அதிகமான படங்களும், பல்வேறு பிரபலங்களின் கௌரவிப்புக்களும், கலந்துரையாடல்களும், களியாட்டங்களும் தொடங்குகின்றது.
சுவிற்சர்லாந்தில் புதிய கோவிட் -19 தொற்றுக்கள் மீண்டும் 1,000 ஐ தாண்டின !
இன்றைய ஆரம்பவிழாவில் கலந்து கொள்ளும் முக்கியமான சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு செங்கம்பள வரவேற்பினையையும், கௌரவத்தினையும் பெறுபவர்கள், ஆரம்பநாளில் பியாற்சாகிரான்டே பெருமுற்றத் திரையில் முதல்காட்சி காணும் "பெக்கெட்" (Beckett), திரைப்படத்தின் நாயகன் (John David Washington) ஜான் டேவிட் வாஷிங்டன், பிரெஞ்சு நடிகை மற்றும் முன்னாள் மாடல் அழகி லெடிடியா காஸ்டா, ஆகியோர்.
பெருந்தொற்றுக் காலத்தில் வெறிச்சோடிக்கிடந்த பெருமுற்றம் மீண்டும் உயிர்க்கிறது.