free website hit counter

இத்தாலிக் கப்பூச்சினோவும் ஐரோப்பாவின் 'கிறீன் பாஸ்' சான்றிதழும் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வா ர இறுதியில், இத்தாலியிலுள்ள ஒரு பெரும் வணிவ வளாகத்தில் பொருட் கொள்வனவுக்காக நடந்து களைத்த நேரத்தில், கண்ணில் தெரிந்தது அந்தக் கபே பார். அந்த வணிக வளாகத்தின் கபே பாரில் கிடைக்கும் கப்பூச்சினோவின் சுவையும், நடந்த களைப்பும், சேர அங்கிருந்த இளைப்பாறு பகுதியில் அமர்ந்து கொண்டேன்.

சேவையாற்றும் பெண் அருகே வந்தாள். கபேக்கான ஆடர் எடுக்க வருகிறாள் என நினைத்த போது, அருகே வந்த அவள், இங்கே உட்காருவதென்றால், உங்கள் 'கிரீன்பாஸ்' மருத்துவச் சான்றிதழை முதலில் உறுதி செய்து வாருங்கள் என்றாள். ஆகஸ்ட் 6ந் திகதி முதல் இத்தாலியில் உணவகங்கள் முதல் முக்கிய இடங்களில் கூடுவதற்கு 'கிரீன்பாஸ் ' கட்டாயமாக்கப்பட்டுள்ளமை அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஆயினும் வணிக வளாகத்திற்குள் நுழைவதற்குத் தேவைப்படாத 'கிரீன்பாஸ்' அங்கே உள்ள கபே பாருக்குத் தேவைப்படுவது ஆச்சரியமாக இருந்தது. கேட்டபோது 'கபேற்றறியா' உணவகங்களின் சட்டவரைபுக்குள் வருவதனால் அது அவசியமாகிறது என்றாள்.

சான்றிதழை உறுதி செய்யும் பகுதியில் ஒவ்வொருவரது சான்றிதழையும் தனித்தனியாக பரிசோதிப்பதனால் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள். நாமும் காத்திருந்து பருகியதாலோ என்னவோ அந்தக் கப்பூச்சினோ இம்முறை சுவைக்கவில்லை. இப்போது புரிகிறது ஏன் இத்தாலியர்கள் இந்தத்திட்டத்திற்கு எதிர்ப்புக் காட்டுகின்றார்கள் என்று. ஒவ்வொரு தடவையும் ஒர கபே குடிப்பதற்காக சான்றிதழ் காட்ட வேண்டும் என்பது எத்தகைய சலிப்பினை ஏற்படுத்தும் என்பதை உணர முடிகிறது. ஆனால் வேறு வழி..?

ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசித்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக இத்தகைய நடைமுறையை உருவாக்கின்றன எனும் குற்றச்சாட்டுப் பரவலாகத் தடுப்பூசி எதிர்பாளர்களால் முன்மொழியப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குத் தீர்வாக அரசுகள் தடுப்பூசித்திட்டத்தினை வலியுறுத்திய போதும், அவசர அசவரமாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசித்திட்டம் பின்விளைவினை உடையது எனும் அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. ஆரோக்கியமான மக்களிடத்தில் இது அவசியமற்ற செயல் என்பது இயற்கை ஆர்வலர்கள் பலரிடமும் காணப்படும் கருத்தாகும். இவ்வாறான எதிர்நிலைகளினால், அரசுகளின் தடுப்பூசித்திட்டம் எதிர்பார்த்த இலக்கினை இன்னமும் எட்டவில்லை. இந்நிலையில் தடுப்பூசித்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான வழிமுறைகளாக, சுகாதாரச்சான்றிதழின் தேவையைக் கட்டாயமாக்குவது, இலவச தொற்றுச் சோதனைகளை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இந்த வாரத்தில் தடுப்பூசி எடுப்பதை அதிகரிக்கும் வகையில், ஜெர்மனி இலவச கோவிட் சோதனைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலத் தலைவர்களுக்கும், அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுக்கும் இடையிலான சந்திப்பில், அதிக தடுப்பூசி விகிதங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அக்டோபர் 11 ம் திகதி முதல் இலவச கோவிட் சோதனைகளை நிறுத்தும் முடிவுக்கு ஜெர்மன் அரசியல்வாதிகள் தீர்மானித்தனர். இதற்கு ஒருநாள் பின்னதாக புதன்கிழமை சுவிற்சர்லாந்தும், அக்டோபர் 1ம் திகதியிலிருந்து கோவிட் -19 சோதனைகளை இலவசமாக மேற்கொள்வதை நிறுத்துகின்றது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் போன்ற மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு விலக்குகளை வைத்துக்கொண்டு, பொதுவான சோதனைகளை இலவசமற்றதாக்குகின்றது.

ஜேர்மனின் மக்கள்தொகையில் 62.5 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள். சுவிற்சர்லாந்தில் இதுவரை 40 வீதத்திற்கும் சற்று அதிகமானவர்களே தடுப்பூசி பெற்றிருக்கின்றார்கள். இந்தப் புள்ளி விபரங்கள், அரசுகளின் சுகாதாரப்பாதுகாப்பு மூலோபாயங்களுக்குப் போதுமான தரவுகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகையில் கனிசமானவர்கள் தடுப்பூசி பெற்று, நோய் எதிர்ப்புச் சக்தியுடையவர்களாக உருவாகும்வரை, கோவிட்டுக்கான போராட்டம் தொடரவே செய்யும் என்பது மருத்துவ நிபுணர்களின் கணிப்பு. ஆகவே இந்த இலக்கினை எட்டுவது என்பதே இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் என்னும் கருதுகோளில் அரசுகள் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளன. இவற்றில் அதிருப்தியுற்ற மக்களில் பலரும், அரசுகளின் ஒருவகையான அச்சுறுத்தல்களாகவே இவற்றைக் காணுகின்றனர் அதனாலே ஆங்காங்கே மக்கள் எதிராக கிளர்தெழுவது ஐரோப்பாவில் தவிர்க்கமுடியாத சமகால காட்சிகளாகின்றன.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula