தந்தை செல்வா என அழைக்கப்பெற்ற ஈழத்தமிழ் அரசியற் தலைவர் அமரர் எச்.ஜே.வி. செல்வநாயகம், 1977ல் " தமிழர்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் " என்றார்.
அதன் பின் மூன்று தசாப்த காலம் போராடிய இளைஞர்களிடத்தில் இருந்தது ஈழத் தமிழர் அரசியல். போராட்ட வாழ்வு புலப்பெயர்வுகளைச் செய்தது.
புலப்பெயர்வு, தாயகப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த நிலை, 2009 இறுதி யுத்தத்தின் பின்னதாக தடம்மாறிப் போயிற்று. போராட்டத்திற்கு ஆதரவான கட்டமைப்பு துண்டாடப்பட்டது. துண்டு போட்டவர்களும், துண்டாடியவர்களும், ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொன்னார்கள். ஆனால் அந்தக் கருத்துக் கற்பிதங்கள் யாவும் சொந்தங்களுக்கானவை அல்ல, சொத்துக்களுக்கானவை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
இவையெல்லாம் நடந்த போதும், ஈழத்தமிழ் மக்கள் " மாவீரர்" எனும் ஒற்றைச் சொல்லில் ஒன்றுபட்டு நிற்பதை ஒருபோதும் கைவிட்டு நின்றதில்லை. புலத்திலும், நிலத்திலும், இந்த ஆண்டுவரை மக்கள் தங்கள் மனத்திருத்திய நாயகர்களை மறக்காதிருந்து, ஒன்றுபட்டு நினைவு கூருகின்றார்கள். அந்த ஒன்றுபடுதலை வைத்து உழைக்கவும், உடைக்கவும், நினைத்தவர்களின் ஒன்றுபடுதலில் இந்த ஆண்டு மாவீரர் நினைவு நாளில், டிஜிட்டல் திரையில் முளைத்திருக்கிறது ஒரு புதியமுகம். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஏமாந்து போவார்களா?
செயற்கை நுன்னறிவு rtificial intelligence எனும் தொழில் நுட்பம் ஒரளவுக்கு முன்னேறி இருக்கும் காலமிது. விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் மனித குலத்திற்கான ஆக்கத்தினையும், அழிவினையும் சேர்த்தே கொண்டு வருகின்றன என்பது தெளிவு. அதன் வழி, காலத்தின் கரைதலிலும், நுட்பத்தின் வேகத்திலும், இன்னும் பல புதுமுகங்களை நாம் அறிந்திடவும், அவற்றால் அழிந்திடவும் கூடும்.