இந்தியாவின் வளரும் பொருளாதாரம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக 2030 ம் ஆண்டில் இந்தியாவை மாற்றும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
உலக அளவில் பொருளாதார அளவீடு செய்யும் நிறுவனமான S&P குளோபல் ரேட்டிங்ஸ் இதனைக் கணித்து அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் தற்போது முன்னிலை வகிக்கும் பொருளாதார நிலையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
2024 மார்ச் முடிவடையும் நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருக்கும். இது முந்தைய நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 7.2 சதவீதத்தில் இருந்து குறைந்துள்ளது. ஆயினும்
அடுத்த நிதியாண்டில் (2024-25) வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருக்கும் எனவும், அதற்கு அடுத்த நிதியாண்டில் 6.9 சதவீதமாகவும், 2026-27ல் 7 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2026-27 நிதியாண்டில் 7 சதவீத வளர்ச்சியை எட்டும் இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறும் எனவும், அதன்படி 2030 ஆம் ஆண்டளவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று எஸ்&பி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் சந்தையின் வலுவான வளர்ச்சியானது, அடுத்த பத்தாண்டுகளில், குறிப்பாக நிதியியல் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத் துறைகளில், அதன் செழிப்பான தொடக்க சூழலை விரிவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று S&P மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியபா அடுத்த பெரிய உலகளாவிய உற்பத்தி மையமாக மாற முடியுமா என்பது ஒரு முக்கிய சோதனை. சேவைகள் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரத்தில் இருந்து இந்தியாவை உற்பத்தி-மேலாதிக்க நாடாக மாற்றுவதற்கு இது ஒரு மகத்தான வாய்ப்பாகும். அதற்கான ஒரு வலுவான தளவாட கட்டமைப்பை இந்தியா உருவாக்குவது முக்கியமானது என்றும் எஸ்&பி தெரிவித்துள்ளது.