free website hit counter

சுயமரியாதைக் குரல்.. !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்திலிருந்து தன் இசைத்திறனுடனும், நம்பிக்கையுடனும், இந்தியத் தளத்தில் உள்ள சக திறமையாளர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் கில்மிசா. கில்மிசாவின் திறமை நிராகரிக்கபட முடியாது என்பதை அவள் போட்டியிட்ட தருணங்களிலெல்லாம் நிரூபித்து வந்திருக்கிறாள்.

இதனை நடுவர்களில் ஒருவரான பின்னணிப்பாடகர் ஶ்ரீநிவாஸ் நிகழ்ச்சியிலே வெளிப்படையாகக் கூறியிருக்கின்றாள். மற்ற நடுவர்களும் இதனை ஆதரித்திருக்கிறார்கள்.

கில்மிசாவின் வெற்றி திறமைக்கும் அப்பால், வேறு சிலவகையிலும் முக்கியமானதாக மக்களால் கவனிக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமானது, இதுவரை இந்தியத் தொலைக்காட்சி இசைப்போட்டிகளில் ஈழத்தின் இசைக் கலைஞர்களாக, புலம்பெயர் தேசங்களில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்களே கவனம் பெற்றுள்ளார்கள். முதல் முறையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட ஒரு சிறு பெண் தன் திறமையை நிரூபித்து வெற்றி பெற்றிருக்கின்றாள்.

போட்டியின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது, கில்மிசாவின் தந்தை தன் மகளின் திறமைக்கான களத்தில், அவளைச் சேர்ப்பிப்பதற்காக, தங்களது விருப்பத்தின் சிறு சேமிப்பினைக் கொண்டே தங்கள் பயணம் தொடர்ந்ததாகக் குறிப்பிடுவார். உண்மையில் ஒரு வெற்றியின் பின்னால் உதவக் கூடியவர்கள் பலர் வருவார்கள். ஆனால் வெற்றிக்கான முதல் அடி என்பது நிச்சயமற்றது. ஆனால் அதனை தங்கள் குழந்தையின் திறமையையும், ஆசையினையும், முன்னிறுத்தி தங்களது சேமிப்பினை செலவிட எண்ணிய பெற்றோர்களின் திடசங்கற்பம் வெற்றி பெற்றுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக காணமற்போன தன் மாமாவைக்குறித்து, காணமற்போனவர்கள் பற்றிய கவலையை, கவனத்தை தன் ஒரு பாடலின்போது வெளிப்படுத்திய கில்மிசா, தன் வெற்றியின் சமர்ப்பணத்தை விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்காக உரிய தருணத்தில் வெளிப்படுத்தியதும் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. "தன்னை விட தன் திறமை மதிக்கபட வேண்டும் என நினைப்பது சுய மரியாதை. அது கர்வமல்ல.." என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன். அந்தச் சுயமரியாதையுடன் ஈழத்தின் குரலாக ஒலிக்கிறது கில்மிசாவின் குரல்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula