free website hit counter

உக்ரைனில் என்ன நடக்கிறது..? - பகுதி 2 - இ.பா.சிந்தன்

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தைச் சேர்ந்த இ.பா.சிந்தன். சமூகம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும், தொகுப்புக்களையும் தமிழ்மொழியில் எழுதி வரும், அவரது பல்வேறு படைப்புக்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.உக்ரைன் யுத்தம் தொடர்பாக அவர் தொடராக எழுதி வரும் இக் கட்டுரைத் தொடரினை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, அவரது அனுமதியுடனும், அவருக்கான நன்றிகளுடனும், இங்கு  தொடர் மீள் பதிவுகளாக  வெளியிடுகின்றோம் - 4Tamilmedia Team

உக்ரைனில் என்ன நடக்கிறது..? - பகுதி 1

உக்ரைனில் என்ன நடக்குது ? – பகுதி 2

சோவியத் யூனியன்- ரஷியா – திவால் வரலாறு:
கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இணைப்பதற்காக, அமெரிக்காவும் நேட்டோவும், ஐ.நா.சபையும் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த கோர்பச்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. ஜெர்மனியின் இணைப்பிற்கு சோவியத் யூனியன் சம்மதித்தால், மத்திய ஐரோப்பாவைத் தாண்டி நேட்டோ படைகள் விரிவாக்கப்படமாட்டாது என்று அமெரிக்கா அப்பேச்சுவார்த்தையில் வாக்குறுதி கொடுத்தது. பேச்சுவார்த்தையின் மிகமுக்கிய அம்சமாக இதுவே இருந்தது. ஆனால், கிழக்கு ஜெர்மனியை மேற்கு ஜெர்மனியுடன் இணைத்தபின்னரும், நேட்டோ படைகள் மத்திய ஐரோப்பாவைத் தாண்டி விரிவாக்கப்பட்டன. கார்பச்சேவுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதன்பிறகு சோவியத் யூனியன் உடைந்து போன வரலாறு நமக்கெல்லாம் தெரியும். அதிலிருந்து பிரிந்த நாடுகளுக்கும் நேட்டோ பரவியது. போலந்தில் நேட்டோவின் ஏவுகணைத் தளம் கூட அமைக்கப்பட்டது. உக்ரைனில் என்ன நடக்கிறது..?

சோவியத் யூனியன் சிதறுண்டதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறம் அம்மக்களை வாட்டிக்கொண்டிருந்தது. மற்றொருபுறம், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சூறையாடல்கள் ரஷியாவில் நிகழ்த்தப்பட்டன. சோவியத் புரட்சி காலத்திலிருந்தே மக்களின் சொத்துக்களாக இருந்தவற்றையெல்லாம் மேற்குலக கொள்ளையர்கள் நுழைந்து, பல டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டு ரஷியாவிலிருந்து எடுத்துசெல்லப்பட்டுவிட்டன. இவையெல்லாம் யெல்சினின் ஆட்சிக்காலத்தில் நடந்தன.

சோவியத் யூனியன் உடைக்கப்பட்டால் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நம்பவைக்கப்பட்ட மக்கள் ஏமாந்துபோயினர். ஒரு கோடி குழந்தைகளுக்கு மேல் பிறந்தும், ரஷியாவின் பிறப்பு இறப்பு விகிதம் பூஜ்ஜியமாக மாறியது. அதாவது, சோவியத் யூனியன் உடைந்ததிலிருந்து, ரஷியாவில் பிறப்பவர்களைவிடவும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அதிலிருந்து ரஷியா மீளமுடியாமல் தவிக்கிறது.

அதே காலகட்டத்தில் ரஷியாவுக்கும் செசன்யாவுக்கு இடையில் நடந்த போரிலும், மேற்குலகின் பங்களிப்பு இருந்தன. இதனால், ரஷியா மேலும் வலுவிழந்து போனது. எல்சின் காலத்தில் ரஷியாவிற்குள் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களை ஒட்டுமொத்தமாக ரஷியாவுக்கு எதிராக மாற்றவேண்டும் என்பதில் மேற்குலகம் குறியாக இருந்தது. அதனால் செசன்யப் போரில் முஜாகிதீன் இயக்கங்கள் களமிறக்கப்பட்டன.

இவையெல்லாமுமாக சேர்ந்து, ரஷியா என்கிற நாடே உலகவரைபடத்தில் இல்லாமல் போகிற நிலை ஏற்பட்டது. பொருளாதார மந்தநிலை, தேசிய சொத்துக்கள் சூறையாடல், ஓய்வூதிய நிதியம் சூறையாடல், இயற்கை வளங்கள் சூறையாடல், அறிவியல் ஆய்வுகள் உள்ளிட்டவை நிறுத்தம், இராணுவம் வலுவிழந்தநிலை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட இயலாத நிலை என அழிந்துவிடும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டிருந்தது. அயல்நாட்டு கொள்ளையர்களுடன் இணைந்து பல சூறையாடல்களை நிகழ்த்திய உள்ளூர் கொள்ளையர்கள் ரஷியாவின் புதிய அதிகார சக்திகளாக உருவெடுத்தனர். அப்படியாக உருவானவர்கள் இயல்பாகவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆதரவு சக்திகளாக இருந்தனர். ரஷியாவின் ஏழ்மை நிலைக்கு உதவி புரிவதாக சொல்லிக்கொண்டு, அமெரிக்காவிலிருந்து கிருத்துவ மிஷனரிகள் எல்லாம் வந்து குவியத் துவங்கினர்.

சர்வதேச அரங்கில் ரஷியாவின் மதிப்பும் மரியாதையும்கூட சரிந்து விழுந்தது. ரஷியாவின் நண்பர்களாக இருந்தவர்கள்கூட ரஷியாவிடமிருந்து தள்ளியிருக்கவே விரும்பினர். ஆப்பிரிக்காவில், மத்திய கிழக்கில் இருந்த எண்ணற்ற நாடுகள் ரஷியாவின் நட்பு நாடுகள் அனைத்தும் ரஷியாவை விட்டு விலகிவிட்டன. ரஷியாவை மீட்டுக்கொண்டுவருவதற்கு சரியான ஆட்சியாளர்களும் இல்லை. பல நாடுகளில் இருந்த ரஷியாவின் தூதரகங்கள் கூட செயல்படாத நிலையில் இருந்தன. எவ்வித நோக்கமும் இல்லாத புதிய புதிய என்.ஜி.ஓ.க்களும் சிறுசிறு இயக்கங்களும் உருவாகின. ஆங்காங்கே அதிகாரத்தை அவர்களே எடுத்துக்கொண்டனர். ஒட்டுமொத்த ரஷ்யாவையும் கட்டுக்குள் கொண்டுவரும் அதிகாரம் யாரிடமும் இல்லாமல் போனது. சோவியத் யூனியன் உடைக்கப்பட்டு பல நாடுகள் பிரிக்கப்பட்ட பின்னரும், ரஷியா மிகப்பெரிய நாடாக இருக்கிறது என்று சொல்லியும், ஒவ்வொரு சிறுசிறு பகுதியும் தனிநாடு கோரும் கோரிக்கைகளை எழுப்பின. அவற்றை எழுப்பியவர்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் ஆதரவு குழுக்களாக இருந்தனர் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

அமெரிக்காவின் ஒரே போட்டியாளராக இருந்த சோவியத் யூனியன் அழிந்துவிட்டது என்பதால், உலகை ஆக்கிரமித்து அமெரிக்கப் பேரரசின் கீழ் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவில் ஒரு இயக்கம் உருவானது. அமெரிக்காவின் சில அறிவுஜீவிகள் எல்லாம் இணைந்து உருவாக்கிய அவ்வியக்கித்தின் பெயர் “புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம்” (பிநேக்) ஆகும். ஏற்கனவே பல அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் சொன்னபடி மெதுவாக முயற்சித்தால் அமெரிக்கா அவ்வளவு சீக்கிரத்தில் பேரரசாக முடியாது என்றும், ஒரு சில நாடுகளில் நேரடியாக நுழைந்து ஆட்சி அதிரடியாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவ்வியக்கம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்கா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் 2001க்குப்பிறகு நுழைந்து போர்புரிந்தது.

அமெரிக்காவின் பேரரசுக் கனவின் தந்தை என்று அழைக்கப்படுகிற கென்னன் (1947இல் அதற்கான ஆவணத்தை எழுதியவர்), ஈராக் போரின் துவக்கத்தின்போது 92 வயதில் இருந்தார். அவரே ஈராக் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்துக் குரல் கொடுத்தார். இப்போரினால் அமெரிக்கா பலமிழந்த நாடாகத்தான் மாறும் என்றும் இப்போருக்குப் பின்னால் அமெரிக்காவிற்கு சமமான எதிரிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்றும் அவர் அமெரிக்காவை எச்சரித்தார்; ஈராக் போரை எதிர்த்தார். ஆனால் பினாக்கோ அவருக்கு மறுப்பு தெரிவித்தது. போரினை நிறுத்திவிட்டு, மித்திய கிழக்கை வேடிக்கையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றது. “அகண்ட மத்திய கிழக்கை” அமெரிக்கா வெகு சீக்கிரத்தில் உருவாக்கி தனது கட்டுக்குள் வைக்கவேண்டிய நேரமிது என்றது பினாக் குழு.

அகண்ட மத்திய கிழக்கு என்பது ஆப்கானிஸ்தானில் துவங்கி ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கியது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு ஆப்பிரிக்காவையும் இதிலே இணைக்கும் கனவையும் கொண்டிருந்தது “அகண்ட மத்திய கிழக்கு” திட்டம். அங்கெல்லாம் தான் உலகின் மிக அதிகமான எண்ணை வளங்கள் புதைந்துகிடக்கின்றன. உலகில் பெட்ரோல் தேவைப்படாத நாடே இருக்கமுடியாது என்பதால், பெட்ரோல் கிடைக்கிற எல்லா நாடுகளையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டாலே அமெரிக்கா பேரரசாவது உறுதி என்றது பினாக் குழு.

எல்சினுக்குப் பிறகு ரஷியாவின் அதிபராக புடின் பதவியேற்றார். புடின் பதவியேற்ற காலகட்டத்திலும் மிகப்பெரிய கடனில்தான் இருந்தது ரஷியா. 200 பில்லியன் டாலர் கடனோடு, திவாலான தேசமாகவே இருந்தது. உலகிலேயே மிக அதிகமான இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும், ஏழை தேசமாக இருந்தது. சோவியத் உடைந்தததற்கும் புடின் அதிபரானதற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு மறைமுகப் போட்டியாக ஐரோப்பாவில் ஜெர்மனி வளர்ச்சியடைந்திருந்தது. பொருளாதார வல்லமை பெற்ற நாடாக ஜெர்மனி உருவாகியிருந்தது.

சோவியத் யூனியன் காலத்தில் கிழக்கு ஜெர்மனியில் புடின் பணியமர்த்தப்பட்டிருந்தார். புடினால் சரளமாக ஜெர்மன் மொழியும் பேசமுடியும் என்பதால் ஜெர்மனோடு நெருங்கிய உறவு இருந்தது. அதன் காரணமாக அதிபராவதற்கு முன்னரே, ரஷிய-ஜெர்மன் கூட்டக் குழுவின் இணைத்தலைவராக புடின் இருந்துவந்தார். அதனால் ஜெர்மனியோடான உறவினை மேலும் நெருக்கமாக்கினால் அது ரஷியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்பதை புடின் புரிந்துவைத்திருந்தார். அரபுலக நாடுகளின் எண்ணை வளத்தை அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அமெரிக்காவின் ஆதிக்கத்தின் காரணமாகவும், டாலரால் மட்டுமே வர்த்தகத்தை மேற்கொள்ளமுடியும் என்பதாலும், அரபுலகத்தில் கிடைக்கும் பெட்ரோல் உள்ளிட்ட எண்ணைப் பொருட்கள், “டாலர் ஆயில்” என்றே அழைக்கப்படுகின்றன. ஜெர்மனிக்கு டாலரைப் பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்வதில் விருப்பமில்லை. தனக்கென தனியான எரிசக்தித் திட்டம் வேண்டுமென்று வெகுநாட்களாகவே ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது ஜெர்மனி.

ஜெர்மனியின் விருப்பம் ஒரு பக்கமிருக்க, ரஷிய அதிபரான புடினோ அதனை சாதகமாக்கிக்கொள்ள மறுபுறம் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஜெர்மனியோடு சிலப்பல பேச்சுவார்த்தைகளையும் நடத்தியும் வந்தார். 2003இல் அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நுழைந்து நிகழ்த்திய போர் குறித்து நாம் அறிவோம். எண்ணை வளமிக்க மத்திய கிழக்கு நாடான ஈராக்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகத்தான் அமெரிக்கா அப்போரினை நடத்தியது. அப்போரினால் அமெரிக்காவே எதிர்பார்க்காத ஒரு விளைவு ஏற்பட்டது. அதுதான் ரஷியாவின் வளர்ச்சி. அதெப்படி சாத்தியமானது? ஆம், ஈராக் போரின்போது பெட்ரோலியப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பெட்ரோலின் விலை 35 டாலராக இருந்தது. ஈராக்கின் ஃபல்லுஜாவில் அமெரிக்காவின் கப்பல்களை ஈராக்கியப்படையினர் தாக்கிய அதே நாளில், 75 டாலராக பெட்ரோலின் விலை உயர்ந்தது. ஈராக்கை மிக எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்த அமெரிக்காவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

கடுமையான மற்றும் நீண்ட எதிர்ப்பினை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருந்தது. ஈராக் போரினால், உலகில் எண்ணை உற்பத்தி செய்யும் பல நாடுகள் இலாபமடைந்தன என்பது அமெரிக்காவே எதிர்பார்க்காத திருப்பம். ஈராக் போருக்கு முன்னர், வெனிசுவேலா, லிபியா, அல்ஜீரியா போன்ற பல நாடுகள் மிகப்பெரிய கடனில் திவாலாகிக்கிடந்தன. ஈராக் போருக்குப்பின்னர் அவர்களது இமாலயக் கடன்கள் தீர்ந்தன. தன்னுடைய சுயநலத்திற்காக அமெரிக்கா நடத்திய ஒரு போரினால், ரஷியா என்கிற திவாலாகியிருந்த நாடு மீண்டெழுந்தது. பெட்ரோலியப் பொருட்களை ரஷியாவிடமிருந்து ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வாங்கின. சர்வதேச சந்தையில் விலையும் அதிகரித்தமையால், ரஷியாவிற்கு பெருத்த இலாபம் கிடைத்தது. பொருளாதார சரிவிலிருந்து ரஷியாவும் மீண்டது. ஈராக் போரின் உச்சகட்ட ஆண்டுகளான 2003 முதல் 2008 வரையில் மட்டுமே ரஷியா தனது கடன்களை அடைத்துவிட்டது. சோவியத் யூனியன் சிதைவுண்டபின்னர் எல்சின் காலத்தில் ரஷியா என்கிற நாடு இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. கடன்சுமையும், வறுமையும் ஆட்கொண்டிருந்தமையால், ஒருங்கிணைந்த தேசமாக செயல்படமுடியாமல் இருந்தது. ஆனால் புடின் காலத்தில், ஈராக் போரின் எதிர்பார்க்காத விளைவாக, ரஷியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து செயல்படத்துவங்கியது.

- தொடரும்

நன்றி: இ.பா.சிந்தன்

chinthan.com

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula