free website hit counter

இந்தியாவை ஸ்தம்பிக்க செய்துள்ள ‘பாரத் பந்த்’ பின்னணி என்ன ?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் பொதுவாக ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் அரசியல் கட்சிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்துவது வழக்கம். ஆனால், இம்முறை தொழிலாளர்கள் அறிவித்துள்ள ‘பாரத் பந்த்’ இந்தியாவையே மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்தும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன. நேற்று முதல் நாள் வேலை நிறுத்தம் தொடங்கியிருக்கிறது. பொதுத்துறை வங்கி ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.

வழக்கம்போல் பாஜக அரசு தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக புதிய தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாகக் கொண்டுவந்திருப்பதாகக் கூறி,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர் போராட்டக் குழுவினர். அவற்றில்

1.பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்.

2. நடைமுறையில் இருக்கும் 29 தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தியிருப்பதை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் (EDSA – Essential Defence Services Act) ரத்து செய்ய வேண்டும்

3.அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும்.

4.அங்கன்வாடி ஊழியர்களுக்கும், மதிய உணவு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

5.முறைசாரா ஊழியர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டுவர வேண்டும்.

6. வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு மற்றும் வருமான ஈடாக மாதந்தோறும் ரூ.7,500 அளிக்க வேண்டும்.

7.மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்திரவாத சட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்க வேண்டும்.

8.கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய முன்களத் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் வசதிகளை அளிக்க வேண்டும்.

9.வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

10.வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படாலும், விவசாயிகள் விடுத்துள்ள வேறு 6 அத்தியாவசிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
11.ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும்.

12.அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க அமைப்புகளான சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதன்படி சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

‘இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்’ என்று தலைமை செயலாளர் வெ. இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். எச்சரிக்கை கொடுக்கப்பட்டும் தமிழ் நாட்டில் 67 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் பொது மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் பேருந்துகள் இயங்காத நிலையில் மின்சார ரயில்களிலும், மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula