free website hit counter

தமிழ் இசை அரோரா சாய் அபயங்கர் !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாய் அபயங்கர் SaiAbhyankkar. இந்தப் பெயர் 'Dude' படத்தின் பாடல்கள் வழி நெருக்கமடைவதன் முன், வெறும் கேள்விப்பட்ட பெயரே. ஆனால் கடந்த சில தினங்களுக்குள், அவன் இசையின் வழி, என்னை மெல்ல மெல்ல ஆகர்ஷித்தான்.

youtubeல் 'Dude'படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வில்தான் அவனது இசை, குரல், பாடல்,  மெல்லத் திரும்பிப் பார்த்து, விரும்பச் செய்தது. அதன் பின்னதாகவே அவனது பாடல்களைத் தேடித் தேடிக் கேட்கத் தொடங்கினேன். என்னவொரு வித்தியாசமான இசையனுபவம்.

இதையும் வாசிக்கலாம்....

வழமையான சில அடுக்கு இசைக் கோப்புக்களிலிருந்து வேறுபட்டு, பல அடுக்குகள் மிக்க இசைக்கோர்வையாக ஆக்கித் தரக் கேட்கும் அனுபவம் அலாதியாக இருக்கிறது. மேலோட்டமாக்க கேட்டால் இசை இரைச்சல் போலவும் கேட்கக் கூடிய பாடல்கள்தான். ஆனால்  earphone களின்வழி கேட்கையில், ஒவ்வொர பாடல்களுக்குள்ளும் உறைந்து கிடக்கும் பல இசைஅடுக்குகள், உலகின் பல்வேறு இசைக்கருவூலங்களின் சாரலைச் சாறெனத் தருவதைக் கேட்டு இரசிக்கலாம், அனுபவிக்கலாம். 

முத்தமழை சிறக்கட்டும் !

அதேபோன்று, வேறு தளங்களின் இசைக்கோப்பிலிருந்து இலாவகமாக எங்கள் தெம்மாங்கிற்கும், கிராமத்து இசைக்கும், பரவிப்படர்ந்து, இசை ஜாலம் செய்கிறது.  இசை மட்டுமன்றி பாடல்களின் முதல்வரிகளையே தலைப்பு வரிகளாகக் கேட்டுப்பழகிய எமக்கு, இவர்களின் இடைவரிப் பாடல் தலைப்புக்களும் புதிய அனுபவமே. அதனாலென்ன?  'நல்லாத்தான் இருக்கையா ' எனச் சொல்லும்படிதான் இருக்கின்றன. இளையவர்களின் இரசனைக்கேற்ற துள்ளிசைப் பாடல்களாகவும்,  அதனுள்ளேயேயிருந்து மெல்லிசைப்பாடலாகவும் கலவையாகத் தரும் கலை அவர் கைகளில் நிறைந்திருக்கிறது.

இதுவரை கேட்ட சாய் அபயங்கரின் பாடல்கள் பலவும் ஒரே பாணியில் அமைந்திருக்கினறனவே என எண்ணும்போது, ' வலம் வரவேண்டும் ஐயே.." எனும் அவரது பக்திப் பாடலைக் கேட்க முடிந்தது, இந்த இளைஞனின் இசை விரிவு, ஒரு பெரு வெடிப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை அது தோற்றுவிக்கிறது.

இந்த இசை நாற்றங்காலின் வித்தெனும் பெற்றோர்களாக இருப்பவர்கள், திப்பு, ஹரினி எனும் இசைப் பிரபலங்கள் என்பதனால், அதுவும் சாத்தியமே. 

சூரியனிலிருந்து வரும் துகள்கள் பூமியின் வடதுருவத்தில், காந்தப்புலத்துடன் மோதும்போது உருவாகும் ஒளி நிகழ்வாக இயற்கையாக வரையும் காட்சி அரோரா (Aurora Borealis) போல், வருங்காலத்தில் உலகின் பல்வேறு இசைக்கோலங்களால் எம் மனக்கோலங்களை மகிழ்விக்கலாம். சாய் அபயங்கர் @SaiAbhyankkar எனும் வளரும் கலைஞனை இப்போது வாழ்த்தலாம், 

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula