மனித உரிமைகள் எங்கே மீறப்பட்டாலும் அதை உலகின் கண்களுக்கும் கவனத்துக்கும் கொண்டு வருவதே அசலான இதழியல் பணி’என்றார் அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை வெளியீட்டாளர் ஜோசப் புலிட்சர்.
அவரது பெயரால் கடந்த, கடந்த 100 ஆண்டுகளாக, பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் புலிட்சர் பரிசினை வழங்கி வருகிறது. இந்த பெருமைமிகு விருதினை இந்திய வம்சாவளிப் பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலனும் அவருடை, புகைபட மற்றும் ஒளிப்பதிவு சகாக்களும் பெற்றுள்ளனர்.
சீனாவில் ஜின்ஜியாங் மாநிலத்தில் லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை ஜின்பிங் அரசு செய்து வருவதாக உலகளாவிய குற்றச்சாட்டு உண்டு. இவர்களுடைய மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை சாதனங்கள் பொருத்தப்படுவதாக புகார்கள் வந்தன. மேலும் உய்குர் இன மக்களை லட்சக்கணக்கில் பிடித்து அடைத்து வைப்பதற்கு சீனா ரகசிய கட்டமைப்புகளையும் உருவாக்கி வந்ததாகத் தெரிகிறது.
இந்த ரகசிய கட்டமைப்புகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து உலக அரங்குக்கு அம்பலப்படுத்தியதில் மேகா ராஜகோபாலனுக்கு முக்கிய பங்கு உண்டு. சீனா, நாட்டுக்குள் நுழைய இவருக்கு தடை விதித்த நிலையில், கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்று ஜின்ஜியாங்கில் அடைபட்டுக் கிடந்தவர்களை சந்தித்து பேசி சீனாவின் அட்டூழியத்தை தீரத்துடன் அம்பலப்படுத்தினார். அவருடன் இணைந்து அலிசன் கில்லிங் மற்றும் கிறிஸ்டோ புஷ்செக் ஆகியோர் புகைப்பட மற்றும் ஒளிப்பதிவு பத்திரிகையாளர்களைப் பணிபுரிந்தனர்.
இம்மூவருக்கும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையைக் கொண்டது. மேகா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தனக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் ஒரு சேர தெரிவித்திருக்கிறார். இவர் தற்போது அமெரிக்காவின் ‘புஸ்பீட் நியூஸ்’ இணையதளச் செய்தி நிறுவனத்துக்காக லண்டனில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை