ஒரு சினிமாவில், இன்னும் மீசை கூட அரும்பாத ஒல்லிப்பிச்சிக் கதாநாயகன் ஏழெட்டு அடியாள்களைத் தன்னந்தனியாகச் சமாளிக்கிறான். இம்மாம் பெரிய தடிமாட்டுத் தாண்டவராயன்களையெல்லாம் சும்மா அப்படியே தூக்கி வீசுகின்றான்.
இதைப் பார்க்கின்றவர்கள், நம்ப முடியாமல் சிரிக்கின்றான்கள். 'ஏன்ய்யா கதை விடறதுக்கு ஒரு லிமிட் இல்லை?'
ஆனால், ஒருவேளை இதே சம்பவம் நிஜத்தில் நடந்தால் நம்முடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்? அதைவிட, அந்த தக்கனூண்டு பையனால் தூக்கி வீசப்படுகிற பயில்வான்களெல்லாம் எவ்வளவு அவமானமாக உணர்வார்கள்!
கடந்த அறுபது ஆண்டுகளாக இஸ்ரேல் இதை தான் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் ஒருமுறை, இரண்டுமுறை அல்ல, திரும்பத் திரும்ப பலமுறை...
இவை ஆசிரியர் என். சொக்கன் அவரது மொஸாட் எனும் புத்தகத்தில் பதித்த மறுக்க முடியாத உண்மை வசனங்கள்... இஸ்ரேல் தன்னை சூழ எதிரி நாடுகளை மட்டுமே கொண்டிருந்தாலும், எந்த வித சலனமும் இன்றி அனைத்து நாடுகளையும் அசால்ட்டாய் கையாளுவதற்கு முக்கிய காரணம் அதன் உளவுத்துறையான மொசாட் தான்...
ம்யூனிக் நகர படுகொலைக்காய் சந்தேகித்த அனைவரையும் நாடு விட்டு நாடு சென்று கொன்றதாய் இருக்கட்டும், ஹிட்லரின் பாசறையில் வளர்ந்து யூதர்களை கொன்றொழித்து பின் நாட்களில் பதுங்கி வாழ்ந்த அடால்ஃப் ஐக்மெனை ஆர்ஜென்டீனா சென்று கடத்தி இஸ்ரேலுக்கு கொண்டு வந்தாய் இருக்கட்டும், எதிரி நாடான ஈராக்கில் உள்ள மிக்-21 ரக போர் விமானத்தை கடத்தி வந்ததாய் இருக்கட்டும், அணு குண்டு தயாரிப்பதற்கு 200 டன் யுரேனியத்தை எந்த சந்தேகமும் தன் பக்கம் வராமல் பெல்ஜியத்திலிருத்து இஸ்ரேலுக்கு கடத்தி வந்ததாய் இருக்கட்டும், பிரான்ஸ் துறைமுகத்தில் உள்ள 10 மில்லியன் டாலர் பெறுமதியான 5 படகுகளை கடத்தி வந்ததாய் இருக்கட்டும், ஈராக்கிற்காக பாரிஸில் உருவாகிக்கொண்டிருந்த அணுஉலையை Bombs வைத்து தகர்த்துடைத்ததாய் இருக்கட்டும், எகிப்து விமானங்களுக்கு இந்த நேரத்தில் தாக்கினால் தான் வீழ்வார்கள் என்று கணித்து கூறியதாய் இருக்கட்டும், தனக்கு பாலூட்டி வளர்த்த அமெரிக்காவிலேயே உளவாளிகளை வைத்து வேவு பார்த்து அமெரிக்க அதிபர் பில்கிளின்டனின் அந்தரங்க ரகசியங்களை கண்டுபிடித்ததாயிருக்கட்டும் அத்தனையும் பிரமிப்பையும் ஆச்சர்யத்தையும் தந்துவிட்டாமல் வேறெதை தந்துவிடப்போகிறது...
புத்தகம் தந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாய் அப்படியே மதிலில் சாய்ந்தவாறே "என்ன மூளைடா இவங்களுக்கு ...." என்று எண்ணிப் பார்க்கின்றேன்.
- 4தமிழ்மீடியாவிற்காக: கண்ணம்மா