உலகமே ஒலிம்பிக்கின் அந்த உன்னத தருணத்தைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறது !. டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்பெற்ற பதங்கங்கள் யாவும் வீரர்களுக்கான பதக்கங்கள். ஆனால் இரு வீரர்கள் பெற்றுள்ள தங்கப் பதக்கங்கள் மட்டும் இரு தங்க மனிதர்களின் கழுத்துகளில் தவழ்வதில் பெருமிதம் கொண்டன.
டோக்யோ ஒலிம்பிக் பெருந்தொற்றுக் காலத்தின் சாவலுக்கு மத்தியில் நடப்பாதல் மட்டும் அது வரலாற்றில் இடம்பிடித்தது என்று கூறும் அதேவேளை, இதுபோன்ற உன்னத தருணங்களாலும் அது வரலாற்றில் பொன் எழுத்துகளால் தனது விளையாட்டின் ஆளுமையைப் பொறித்துகொண்டுவிட்டது.
எதற்கு இந்தப் பீடிகை என்கிறீர்களா? நடந்து இதுதான்! உயரம் தாண்டுதலின் இறுதிச் சுற்றில் கத்தார் நாட்டின் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ டம்பேரி ஆகிய இரண்டு வீரர்களும் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். இரு வீரர்கள் பதக்கங்களைப் பகிர்வது ஒன்றும் புதிதல்ல. அது பகிர்ந்துகொள்ளப்பட்ட விதம்தான் தற்போது மானுட நேயர்களின் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது. உயரம் தாண்டுதல் போட்டியில் இந்த இரு வீரர்களும் வெவ்வேறு நாடுகளின் எதிரெதிர் போட்டியாளர்களாக இருந்தாலும், பல போட்டிகளில் பங்கேற்றபோது ஏற்பட்ட சந்திப்புகளால் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி நேற்று நடந்த நிலையில் அதில் பல நாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டனர். இறுதியில் கத்தார் நாட்டின் முதாஸ் பார்ஷிமும், இத்தாலியின் கியான்மார்கோ டம்பேரி ஆகிய இருவரும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டி ஒரே புள்ளிகளைப் பெற்றனர். 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதற்கு இருவரும் 3 முயற்சிகள் செய்தும் அதில் இருவரும் 3 தவறுகளைச் செய்தனர். இதையடுத்து, தங்கத்துக்கான வெற்றியாளரைத் கண்டுபிடிக்க கடைசி தாண்டுதலை முயற்சிக்கும்படி நடுவர் வாய்ப்பளித்தார். ஆனால், இத்தாலியின் டம்பேரிக்கு, காலில் அடிபட்டு கடுமையான வலி. கத்தாரின் பார்ஷிம், டம்பேரியின் திறமை தனக்குச் சற்றும் குறைந்தது அல்ல என்பதை அறிந்தவர். இறுதி வாய்ப்பை பார்ஷிம் பயன்படுத்தும் நிலையில் அவரது அடிபட்ட கால் இல்லை என்பதை டம்பேரி அறிந்துகொண்டார். அப்போது, ஒலிம்பிக் போட்டி நடுவரிடம் டம்பேரி, “ நாங்கள் இருவரும் நீங்கள் தரும் இறுதி தாண்டுதல் வாய்ப்பை எங்கள் கால்களின் நிலையை கவனத்தில் கொண்டு தவிர்த்தால் உங்களின் முடிவு என்னவாக இருக்கும்? என்று கேட்டார். டம்பேரி இப்படிக் கேட்டதும் ஏதோ நடக்கப்போகிறது என்று பார்ஷிம் துள்ளி எழுந்தார்.
டம்பேரியின் கேள்விக்கு நடுவர் பதில் அளித்தார். “கடைசி வாய்ப்பை இருவரும் தவிர்த்தால் இருவருக்கும் தங்கம் பகிர்ந்து அளிக்கப்படும்” என்றார். இதைக்கேட்டதும் துள்ளிக் குதித்தார் பார்ஷிம். மைதானத்தில் ஓடோடி வந்து துள்ளிக் குதித்து டம்பேரியின் இடுப்பில் ஒரு குழந்தையைப்போல் தாவி ஏறிக்கொண்டார். நிற, மத, நில வேறுபாடுகளைக் கடந்த இந்த நட்பினையும், சக விளையாட்டு வீரனின் திறமையையும் அங்கீகரிக்க, கத்தார் வீரரின் செயலை மனித நேயர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும், ரியோவில் வெள்ளியும் வென்றவர் பார்ஷிம். ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டில் காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் பல உலகப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. அந்த நேரத்தில் பார்ஷிம் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடவருவதற்கு டம்பேரி பெரும் ஆதரவு அளித்துள்ளார். தங்கப்பதக்க கனவு குறித்து பார்ஷிம் கூறுகையில், “இது எனக்குக் கனவு போன்றது. இதிலிருந்து கண்விழிக்க நான் விரும்பவில்லை. இந்த நாளுக்காகத்தான் 5 வருடங்கள் காத்திருந்தேன். பல காயங்கள்.. பின்னடைவுகள். இன்று இருவரும் இந்த தருணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இது உண்மையில் மதிப்பு மிகுந்தது” எனத் தெரிவித்தார்.
2010-ஆம் வருடம் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டி கனடாவில் நடந்தது. அங்கேதான் பார்ஷிம், ட்ம்பேரி இருவரும் முதல்முறை சந்தித்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது. களத்தில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் வெளியே சிறந்த நண்பர்கள் என்பதை ஒலிம்பிக்கிலும் நிரூபித்துவிட்டனர். உள்ளத்தால் உயரம் தாண்டியவர்களின் இந்த தங்கத் தருணம் ஒலிம்பிக் வரலாற்றில் என்றைக்கும் நினைவு கூறப்படும்.
- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை