free website hit counter

பதக்கத்திற்குக் காத்திருக்கும் பரிதாப இந்தியா !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியா ஒலிம்பிக்கில் வெல்ல என்னதான் தேவை...? உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு. வளரும் நாடுகளில் மிகப்பெரிய ஜிடிபியைக் கொண்ட தேசம். இன்னும் எத்தனை எத்தனையோ பெருமைகளை அடுக்கிகொண்டு போகலாம்.

இருந்தும் என்ன? ஒலிம்பிக்ஸ் என வருகிறபோது என் மண்ணைக் கவ்வுகிறது இந்தியா? உடனே ஒவ்வொரு முறையும் சொல்லப்படும் காரணம், விளையாட்டுத் துறையில் மலிந்திருக்கும் ஊழல் என்பது. ஆனால், அது மட்டும்தானா? இன்று சின்னச் சின்ன நாடுகள் கூட தங்கம் வென்றுள்ளன. இந்தியாவின் நிலை கடந்த 70 ஆண்டுகளில் இதே நிலை தொடர்கிறது.

தற்போது டோக்யோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவுக்குப் பிறகு, போட்டிகள் தொடங்கிய நாளில், இந்தியாவின் மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்போது மிகக் குறைந்த அளவிலேயே இறுதிப் போட்டிகள் நடைபெற்றிருந்தன. மொத்தமே 10 பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒற்றை வெள்ளிப் பெற்றிருந்த இந்தியாவுக்கு இரண்டாவது இடம் என தேசபக்தி உணர்வை வெளியிட்டு பெருமைப்பட்டன ஊடகங்கள். பிறகு, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் பல போட்டிகளில் வென்று பதக்கங்களை அள்ள, இந்தியாவின் இடத்தைத் தேட வேண்டியிருந்தது.

தங்கப்பதக்கம் வென்ற நாடுகளில் செர்பியாவும் ஒன்று. ஐரோப்பிய கண்டத்தில் கம்யூனிச அரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, யூகோஸ்லோவியா சிதறியபோது, போர் மேகங்களுக்கிடையே உருவானது செர்பியா. 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு. அதன் சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மாண்டிக் மெஸ்ஸே டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்றார். போர்ச் சூழல்களும் விடுதலைக் குரல்களும் ஓயாத செர்பியாவில் இருந்து 2008ல் குடியரசான இன்னொரு சிறிய நாடு கொசோவா. மொத்த மக்கள் தொகையே 18 லட்சம் பேர்தான். 2016 ரியோ ஒலிம்பிக்கில் தான் அந்நாடு முதன்முதலில் பங்கேற்றது. அப்போது அந்த நாட்டின் சார்பில் பங்கேற்வர்கள் 8 பேர். அதில் மெஜில்ண்டா கெல்மெண்டி என்ற வீராங்கனை ஜூடோவில் தங்கம் வென்றார். புதிய நாட்டின் தேசிய கீதம், பதக்க மேடையருகே ஒலித்தது. கெல்மண்டி கண்களில் நீர் கட்டியது. பெருமையுடன் துடைத்துக் கொண்டார். விடுதலைப் போராட்ட வெற்றிக்கு இணையாக விளையாட்டு கள வெற்றியையும் கொண்டாடினர் கொசோவா நாட்டவர். அதுபோலவே டோக்கியோ ஒலிம்பிக்கில் டிஸ்ட்ரியா கரஸ்னிகி, நோரோ ஜகோவா ஆகியோரால் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது கொசோவா.

இன்னமும் முழு விடுதலை பெறாத தீவு பெர்முடா. இப்போதும் பிரிட்டன் ஆளுகையில் உள்ள பெர்முடாவின் மொத்த மக்கள் தொகை 65 ஆயிரம் பேர் கூட இல்லை. அதன் சார்பில் பெண்களுக்கான ட்ரையத்லான் போட்டியில் பங்கேற்ற புளோரா டஃபி, தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையையும் பெர்முடாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார் புளோரா.

ஒலிம்பிக்கின் ஒவ்வொரு போட்டியிலும் எந்த நாடு தங்கப் பதக்கம் வெல்கிறதோ அந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். டோக்கியோ போட்டியில் ‘ஜன கண மன’ எப்போது இசைக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கு, மீராவின் வெள்ளி மூலம் போட்டியின் தொடக்கத்திலேயே பதக்கப் பட்டியலில் இடம் பிடித்ததில் ஆறுதலும் நம்பிக்கையும் கிடைத்தது. ஒலிம்பிக் போட்டிகளில் எப்படியாவது பதக்கப் பட்டியலில் இடம் பிடித்து விடுவது என்ற அளவில்தான் இந்திய விளையாட்டுத் தன்மை அமைந்துள்ளது. 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் கே.டி.ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்கு முன்பும் பின்பும்கூட ஹாக்கி மூலமாகத்தான் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்தது. அப்புறம் அது வெள்ளி, வெண்கலம் எனத் தேய்ந்து, பிறகு அதுவும்கூட இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளில் வெறுங்கையுடன் திரும்பியதும் உண்டு.

1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் மீண்டும் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று ஒரு தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்தது. அதுவும், தேசிய விளையாட்டான ஹாக்கிப் போட்டியில். அதுதான் ஹாக்கியில் இந்தியாவுக்கான கடைசி ஒலிம்பிக் பதக்கமாக இருக்கிறது. 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஒரே நம்பிக்கை, பி.டி.உஷாதான். அவரும் தடகளத்தில் தலை தெறிக்க ஓடினார். இறுதிச் சுற்றில் நான்காவது இடத்திற்குத்தான் வந்தார். பதக்க கனவு தகர்ந்தது.

சியோலில் 1988ல் நடந்த ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்ற இந்திய பெண்கள் பெரும் நம்பிக்கையை விதைத்திருந்தனர். பி.டி.உஷா, ஷைனி ஆபிரகாம், வந்தனா ராவ், மெர்சி அடங்கிய டீம் நிச்சயம் பதக்கம் ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் வெறுங்கையை வீசியபடி தான் திரும்பினார்கள். அதே சியோலில் நீச்சல் போட்டியில் 'சூரினாம்' நாட்டு வீரர் ஆன்டனி நெஸ்டி தங்கப்பதக்கம் வென்றார் என்ற செய்தியைக் கேட்டதும், அந்த நாடு எங்கே இருக்கிறது என கூகுள் இல்லாத காலத்தில் , உலக வரைபடத்தில் தேடியபோது, தென் அமெரிக்கப் பகுதியில் ஒரு சின்னப் புள்ளியாக இருந்தது. சூரினாம் கிளப்பிய வயிற்றெரிச்சலை விட அதிக வயிற்றெரிச்சலைத் தந்தது பாகிஸ்தான். குத்துச்சண்டையில் அது வெண்கலப் பதக்கம் வாங்கிய போது நம்மவர்கள் முகத்தில் குத்து விட்டது போலவே இருந்தது.

நமக்கு பதக்கம் இல்லாவிட்டாலும் எதையாவது சொல்லி ஆறுதல் அடையலாம். பக்கத்து வீட்டுக்காரன் பதக்கத்துடன் வந்தால் எப்படி இருக்கும்? அந்த நிலைமைதான் இந்திய விளையாட்டு ஆர்வலர்களுக்கு. பார்சிலோனாவில் நடந்த 1992 ஒலிம்பிக்கில் வில்-அம்பு போட்டியில் இந்தியாவின் லிம்பா ராம் கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், அந்த ஒலிம்பிக்கின் பெருஞ் சுடரை ஒரு வில் வீரர் தன் நெருப்பு அம்பினால் ஏற்றியிருந்ததால், சட்டென எல்லாருடைய பார்வையும் லிம்பாராம் பக்கமே திரும்பியிருந்தது. பெயரில் ராம், கையில் வில்-அம்பு. ரசிகர்களின் உணர்ச்சிக்கு கேட்கவா வேண்டும்? கடைசியில், காற்று வீசியதால் அம்பின் இலக்கு தவறிவிட்டது என வெறுங்கையுடன் திரும்பினா‘ராம்’.

பஞ்சத்தில் செத்துக்கொண்டிருந்த எத்தியோப்பியா நாட்டின் ஆணும் பெண்ணும் வறுமையை வெல்லும் வகையில் பார்சிலோனாவில் வேகமாக ஓடி, ஒரு தங்கம்-இரண்டு வெண்கலம் வென்றிருந்தனர். இந்தியாவுக்கோ ஒலிம்பிக்கில் ‘ஹாட்ரிக்‘தோல்வி. உலகின் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாட்டிலிருந்து ஒருவர் கூடவா பதக்கம் வாங்க முடியாது என்ற கேள்விக்கான விடை1996ல் அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மூலமாகக் கிடைத்தது. வெண்கலப் பதக்கம் வென்று, 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இடம் பெறச் செய்த பெருமை அவருக்குரியது . ஆனாலும், இந்திய தேசிய கீதம் இசைப்பதற்கான வாய்ப்பு அமைய இன்னொரு மாமாங்கம் காத்திருக்க வேண்டியிருந்தது.

2008ஆம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். 1980ல் கம்யூனிச நாடான சோவியத் யூனியன் தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் இசைக்கப்பட்ட ‘ஜன கண மன’, 28 ஆண்டுகள் கழித்து மற்றொரு கம்யூனிச நாடான சீனாவின் பெய்ஜிங்கில் இசைக்கப்பட்டது. மற்றொரு மாமாங்கம் கடந்துவிட்டது. டோக்கியோவில் இந்திய தேசிய கீதத்தைக் கேட்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள். ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். லவ்லினாக்களால் நம்பிக்கை வெல்லுமா? காத்திருக்கிறது இந்தியா!

- 4தமிழ்மீடியாவிற்காக : தேவா

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula