ஐரோப்பாவின் 37 நாடுகள் போட்டியிட்ட பிரம்மாண்ட இசைநிகழ்வான யூரோவிஷன் 2024 ல் முதலிடம் வென்றது சுவிற்சர்லாந்து.
இம் மாதம் 11 ந் திகதி ஸ்வீடனின் மால்மோ நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில், இருபத்தைந்து (25) நாடுகள் கலந்து கொண்டிருந்தன. இந்த இசைப்போட்டியில், 591 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார் சுவிற்சர்லாந்து இசைக்கலைஞர் நெமோ மெட்லர்.
1999 ஆகஸ்ட் 3ந்திகதி பிறந்த, நெமோ மெட்லர் சுவிற்சர்லாந்தின் பிரபலமான ராப்பர், பாடகர் மற்றும் இசைக்கலைஞர். இவர் பாடலுடன், வயலின், பியானோ மற்றும் டிரம்ஸ் ஆகியவற்றையும் வாசிக்கக் கூடிய கலைஞர். 2015 ம் ஆண்டு முதல், இசைத் துறையில் உள்ள நெமோ ஐந்து சுவிஸ் இசை விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
2023 நவம்பரில், SonntagsZeitung பத்திரிகையின் ஒரு கட்டுரையில், Nemo தன்னை, பாலினஅடையாளமற்ற நபராகப் பகிரங்கமாக அறிவித்தார். 'யூரோவிஷன்' இறுதிச்சுற்றில் அவர்பாடிய "The Code" பாடலும், இக் கருத்தினைக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ஒரு சிறுபான்மை சமூகத்திலிருந்து, உலகின் மிகப்பெரிய மேடையில் அடியெடுத்து வைப்பதும், ஏற்றுக்கொள்ளுதலும், போட்டியில் வெற்றி பெறுவதை விட பெரியது. பாலினம் சுட்டாத என் விருப்பு, எனது வாழ்க்கை உண்மையின் ஒரு பெரிய பகுதியாகும். நான் எங்கு சென்றாலும் எனக்காக எழுந்து நின்று நானாகவே இருக்க முடியும் என்ற இந்த உணர்வுதான் எனது உண்மையின் மிகப்பெரிய வெற்றியாகும் என வெற்றியின் பின்னர் ஊடகங்களிடம் பேசுகையில் நெமோ குறிப்பிட்டார்.