free website hit counter

ஆவண அழகியல் மிகு, இலக்கியப் புனைவு !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அக்கிரமம் செய்து கொண்டிருந்த தஞ்சகன், தண்டகன், தாரகன் என்னும் மூன்று அசுரர்களை, அம்மை பச்சைக்காளி, பவளக்காளி, வடபத்திர காளி என்று… எட்டு காளியாக வந்து வெட்டி சாய்த்ததும், சிவன் அவளை சாந்தப்படுத்தி தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் அன்னை ஆனந்தவல்லியாக்கினாராம்.

ஆனால் லக்ஷ்மி பாலகிருஷணன், ஆனந்தவல்லியாக நம்மிடம் அழைத்து வருவது, பால்யத்தில் மணம் முடிக்கப்பெற்று, மணவாழ்க்கை கானாது, பெற்ற தந்தையாலேயே அடிமையாக விற்கப்பட்டு, ஆனந்தவல்லியாக, அரசரால் உபயோகப்படுத்தப்படும் கையறு பெண்ணை.

ஆனந்தவல்லியை நம்முன் அழைத்துவரும் எண்ணத்தை லக்ஷ்மியிடம் விதைத்திருப்பது, பால்ய விவாகத்தின் மூலம் தனது மனைவியாக வரிக்கப்பட்டவளை அடிமையாக வாங்கிக் கொண்ட அரச குடும்பத்திடம் இருந்து மீட்டுத் தரும்படி, பிரிட்டிஷ் அரச பிரதிநிதிக்கு, ஒரு ஆண்மகன் எழுதிய கடிதம். ஆனந்த வல்லியாக மாறிய அவளது மனைவி மீனாட்சியே அவனைப்பற்றிச் சிந்தித்திருந்தாளில்லை எனும் நிலையில், தன் மனைவி எனும் பற்றுதியில் அவளை மீட்கப் போராடும் அவனது அன்பும் நம்பிக்கையும், ஶ்ரீராமனை விஞ்சிய காவிய நாயகனாக தனக்கு அவன் தெரிந்தான். அவனது நம்பிக்கையை வரலாற்றில் தேடிய லக்ஷ்மி கண்ட உண்மைகள்தான் ஆனந்தவல்லியைப் போன்ற அடிமைப்பட்ட பெண்கள் வாழ்ந்த அரசர்களின் அந்தப்புரங்கள்.

ஒரு வரலாற்றுச் சினிமாவுக்குள் பார்வையாளனை கதையின் களநிலைக் காலத்துக்கு உள்ளிழுத்துக் கதை சொல்ல அவசியமானவை, வண்ணம், வடிவமைப்பு, ஆடையணி அலங்காரம், இசை, இவற்றின் பின்னாலான மொழிநடை. இவையணைத்தினதும் கூட்டுக்கலவையாக தன் தேர்ந்த மொழிநடையை முன்வைத்து வாசகனது மனதுக்குள் ஆனந்தவல்லியை அமரச் செய்துவிடுகின்றார் நாவலாசிரியர்.கதையின் காலப்பிரவாகச் சொற்களும், காட்சி வர்ணனைகளும், கதை மாந்தர்களது மொழிவழக்கும், வாசிப்பினை இடர்படுத்திவிடாது இலாவகமாக இணைந்து நடைபயில, காட்சிகளையும், சம்பவங்களையும், முன் பின்னாக நகர்த்திக் கதை சொல்லும் உத்தியினால், நம் எண்ணத்திரையில் ஒரு காலச் சினிமாவாகப் பதிவாகிவிடுகிறது ஆனந்தவல்லி. இதற்கான தேடல் மிகுந்த ஆசியிரின் கடின உழைப்பினால், பல இடங்களில் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்களும், சில இடங்களில் அனுபவ தத்துவார்த்த வாசகங்களும், வஞ்சிக்கப்பட்ட மாந்தர்களின் குரலாகக் கேட்கிறது.

நம் ஐரோப்பியப் பயணப் பாதைகளில், முடியாட்சியின் எச்சங்களாக நிற்கும் கோட்டைகளைக் காணும்போதெல்லாம், அவற்றின் ஒவ்வொரு கல்லிலும் நிச்சயம் ஒரு கண்ணீர்கதை ஒளிந்திருக்கும் என எண்ணுவதுண்டு. காலத்தே எழுதப்பெற்ற ஒரு கடிதத்துக்குப் பின்னால் உள்ள ஒரு அன்பின் கதையை, அபலைகளின் அடையாளமென ஆனந்தவல்லியை வடித்திருக்கின்றார் லக்ஷ்மி. இரண்டு வருடங்களின் முன்னர் ஆனந்தவல்லியின் அட்டைபட வடிவமைப்பினை முதலில் கண்டபோது எழுந்த ஆவலினை நிறைவு செய்யும் வகையில் ஆனந்தவல்லியின் உள்ளக்கிடக்கையை, ஒரு சமூகத்தின் உள்ளடக்தை ஆவண அழகியல் மிகு, இலக்கியப் புனைவாகப் புதினமாகத் தந்த ஆசிரியர் லக்ஷ்மி பாலகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் !

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

 

லக்ஷ்மி பாலகிருஷ்ணன் வலைப்பதிவு : https://malarvanam.wordpress.com/

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula