ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு அன்மையில் பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு சமீபத்தில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன் கூறினாள்.
அவள் கூறியதில் பெரிதும் அதிர்ச்சியாகவும், வருத்தம் தருவதாகவும் இருந்தது, தனக்கு அப்பதவி வழங்கப்படாமைக்கான காரணமாக இருந்ததாகஅவள் கூறியது. அதில் முக்கியமானது தான் ஒரு பெண், அதுவும் மணம் முடித்த இளம் பெண், அதனால் தனக்கு ஒரு பிரசவம் எனும் நிலை வரும்போது மிக நீண்ட காலத்திற்கு வேலைக்குச் சமூகந் தராது போக வேண்டியிருக்கும். அதனால்தான் அந்த வேலைக்கான தகுதியிருந்த போதும் அது தனக்கு மறுக்கப்பட்டது என்று.
இது ஒன்றும் அந்தப் பெண்ணின் ஊகமோ அல்லது கற்பனையோ அல்ல. இன்று காப்பரேட் நிறுவனங்கள் பலவற்றில் வேலை செய்யும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒரு பிரச்சனை இது. கணினித் துறையில் பணிபுரியும் பல இளம்பெண்கள், கர்பகாலத்தை தவிர்க்க, வலியுறுத்தப்படுவதாகக் கூடத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பெண்களின் உழைப்புச் சுரண்டல் தகமைச் சுரண்டல் என்பனவற்றில் வளர்முக நாடுகள், வளர்ந்த நாடுகள் என எந்த பேதமும் இல்லை. இத்தாலியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் மாரியோ, தனது ஏழு அம்சச் செயற்திட்ட அறிக்கையில், பெண்களுகளுக்கான ஊதியச் சமநிலையை ஒரு முக்கியமான திட்டமாக அறிவித்துள்ளார். இந்தப் பிரச்சனை இத்தாலிக்கு மட்டுமாதனதல்ல.
சுவிற்சர்லாந்தில் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்ட 50வது ஆண்டு இது. 1971 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. கூட்டாட்சி தேர்தல்களில் பெண்கள் பங்கு கொண்ட போதிலும், பல மாநிலங்களின், உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்கள் தங்கள் தேர்தல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு நீண்டகாலமானது. 1991 ஆம் ஆண்டில், சுவிற்சர்லாந்தில் பெண்களின் வாக்குரிமையை மறுத்து வந்த கடைசி மாநிலமான அப்பென்செல்-இன்னர்ஹோடனிலும் உரிமை வழங்கப்பட்ட போது அது முடிவுக்கு வந்தது.
1981 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், 1984 ஆம் ஆண்டில், கூட்டாட்சி சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி எலிசபெத் கோப். அதன்பின் 1985 ம் ஆண்டிற்தான், குடும்பத்திலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது.
இது மட்டுமல்ல இன்று வரையில், உலகளாவிய ரீதியில் 63 நாடுகள் மட்டுமே மகப்பேறு விடுமுறை அளித்துள்ளன. இதனடிப்படையில் உழைக்கும் பெண்களில் 28 சதவீத பெண்கள் மட்டுமே சம்பளத்தோடு கூடிய விடுமுறையை அனுபவிக்கிக்கின்றனர். சர்வதேச அளவில் 66சதவீத பணியை மேற்கொள்ளும் பெண்கள், உலக வருமானத்தில் 10 சதவீதம் மட்டுமே பெறும் நிலையில் உள்ளதாகவும், தெற்காசிய நாடுகளில் 95 சதவீத பெண்கள் அன்றாடம் கடும் உழைப்பை செலுத்தி சிறிதளவு வருமானத்தையே ஈட்டுவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
உடலுழைப்பினைத் தவிர்த்து, மொழிவகையிலும் பெண்கள் அவமதிக்கப்படுவதாகவும், அதற்கு எதிராகவும் பெண்கள் போராட வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தாலியின் மொழி அகராதியில், பாலியல் ரீதியான கொச்சைப்படுத்தும் சொற்களுக்கு பெண்களை அடையாளப்படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.
பெண்களுக்கான சமத்துவங்கள், பின்தங்கிய நாடுகளில் மட்டுமன்றி, அறிவியற், பொருளாதார, வளர்ச்சி அடைந்த நாடுகளாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளிலும் இன்னமும் முழுமைபெறவில்லை என்பதையே இவ்வாறான புள்ளி விபரங்களும், தகவல்களும் தெரிவிக்கின்றன. அதனால்தான் பெண்கள் போராடுகின்றார்கள்.