நாடு தராவிட்டாலும் பறவாயில்லை, ஐந்து ஊர்கள் தந்தால் போதும் எனும் நிலையில் நின்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு, தமிழ் மக்கள் பயங்காட்டிய வண்ணமே மறுபடியும் ஊர்களைப் பகிர்ந்து கொடுத்திருக்கின்றார்கள்.
ஊர்களாயினும் கிடைக்குமா? என்றிருந்தவர்களுக்கு இது இப்பொழுதுக்கான ஆறுதல். ஆயினும் என்ன செய்ய வேண்டும் என்பதை இனியாவது நிதானமாகச் சிந்திக்க வேண்டியதை வலியுறுத்தியிருக்கின்றார்கள் நாடாளவிய தமிழ் மக்கள். சிந்திப்பார்களா ? செயலாற்றுவார்களா? தமிழ் அரசியலாளர்கள் என்பதில் இருக்கிறது, தமிழர்களதும், தமிழ் அரசியலாளர்களதும் அரசியல் எதிர்காலம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தவறுவார்களேயாயின் அரசியல் தெரியாத அநாதைகளாகிப்போவது அவர்கள் மட்டுமல்ல, கூடவே தமிழ் மக்களும்தான். இதனைப் புரிந்து கொன் உணர்ச்சிகர அரசியல்வார்த்தை ஜாலங்களை விட்டு, உருப்படியாக மக்கள் தேவைக்கான உங்கள் செயல்களும், அதற்கான பொறுப்புணர்வுடனான செயற்பாடுகளையும், தேவையான இணைவுகளையும் இணங்குதல்களையும் செய்து நல்வாழ்வுக்கு உழைத்திட வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியலர்களுக்கானது.
துத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியதிகாரத்துக்கு வந்த புதிய தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையை சிங்கள மக்கள் இன்னமும் முற்றாகத் தவிர்த்திடவில்லை.ஆனாலும் அது மாற்றங்காணக் கூடியது என்பதை உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை அதிகார மமதையில் மோசமான ஆட்சி நடத்தியவர்களை மற்க்கவுமில்லை என்பதையும் தங்கள் தெரிவுகளில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்த வகையில் சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாத உணர்ச்சிகர அரசியல் வெற்றி பெறாது என்பதை மிண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
இந்த வகையில் நாட்டின் எல்லா இன மக்களும் இந்தத் தேர்தல் முடிவுகளின் வழி உறுதிபடச் சொல்லி இருப்பது, தங்களுக்கான தனித்துவங்களுடனும், உரிமைகளுடனும், சுதந்திரத்துடனும், வாழ்வதற்கான உரிமைகளை, தங்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுதலேயாகும். இதற்கான சிந்தனைகளைச் செயற்திட்டங்களை முறையாக செய்யத் தவறினால், அதற்கான நிராகரிப்புக்கள் நிச்சயம் என்பதனை மறுபடியும் உறுதியோடு தெரிவித்துள்ளார்கள் ஶ்ரீ லங்கா எனும் சின்னத் தீவின் மக்கள். அந்த வகையில் மக்கள் அரசியல்மயப்பட்டிருக்கிறார்கள் எனத் தெளிவுபடத் தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். ஆக இனி அரசியல் அறிந்து கொள்ள வேண்டியது....?