கோவிட் எனும் பெருந்தொற்று ஏற்பட்ட பொழுதில், பெரும் அளவில் உயிரிழப்புக்களைச் சந்திக்கப் போகும் நாடுகளின் வரிசையில் இருந்த நாடுகளில் முக்கியமானது இந்தியா.
இந்த நோக்கிற்கான காரணங்களில் முக்கியமானது இந்திய மக்கள் தொகை. மற்றையது இந்தியாவின் நடைமுறை நிர்வாகச் சிக்கல்கள். கோவிட் பெருந்தொற்றின் தோற்றுவாயான சீனாவும் மக்கள் தொகை கூடிய நாடுதான். ஆயினும் அதனது நிர்வாகக் கட்டமைப்பு, தொழில்நுட்பவளம், இறுக்கமான அரசியலமைப்பு என்பன அதன் இழப்புக்களின் எண்ணிக்கையை மட்டுறுத்தியிருந்தது.
உலகெங்கிலும் குழப்பங்களும், அச்சமும் நிறைந்திருந்த கோவிட் பெருந்தொற்றின் முதல் அலையின் போது, இந்தியா பெருமுடக்கத்தின் மூலம் இழப்புக்களைத் தவிர்த்துக் கொண்டது. ஆனால் இரண்டாவது அலையில் சிக்கிக் கொண்ட போது, அதிக அளவிலான உயிரிழப்புக்களைச் சந்தித்தது. குறிப்பாக குடிசன நெருக்கமும், நிர்வாகக் கட்டமைப்பு ஒருங்கமைவும் இல்லாத வடமாநிலங்கள் அதிகளவில் பாதிப்புக்களைச் சந்தித்தன.
இதையெல்லாம் தாண்டி, நேற்றைய நாளில் இந்தியா உலகை ஒரு தரம் தன் பக்கம் மீண்டும் ஈர்த்துள்ளது. 100 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் இட்டு, ஒரு சாதனையைப் பதிவு செய்துள்ளது. பொதுப்பார்வைக்கு இது பெருவிடயமாகத் தோன்றாமலும் போகலாம். இதன் வழங்குதல் முறைகளில் விமர்சனங்கள் பல கூறவும் கூடலாம். ஆனால் இவைகள் தாண்டி இது ஒரு உலகக் கவனிப்பு மிக்க சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கோவிட் தொடர்பான செய்திகளில் பிற நாடுகள் குறித்து அதிகம் கவனங் கொள்ளாத இத்தாலியப் பத்திரிகை ஒன்று தனது பக்கத்தில் குறித்த செய்தியைப் பகிர்ந்துள்ளதில் தெரிகிறது இது குறித்த உலகக் கவனம்.
பொருளாதார வளம், அறிவியல் வளம் மிக்க ஐரோப்பிய நாடுகளிலேயே, தடுப்பூசித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும், மக்கள் மனநிலைக் குழப்பங்களும், எதிர்ப்புக்களும் உள்ளன. ஒவ்வொரு நாட்டினதும் சுகாதார அமைச்சும், துறைசார் நிபுணர்களும் கூவி அழுதும், பல்வேறு சலுகைக் கொடுப்பனவுகளை, பல மில்லியன் செலவில் வழங்கியும், தடுப்பூசி வழங்குவதில் இதுவரை ஆகக் கூடிய விகிதாசாரத்தை எட்ட முடியாமல் உள்ளன. இந்நிலையில் இந்தியா 100 கோடி மக்களுக்கான தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தமிழகத்தில் சுமார் 70 சத விகிததிற்கும் அதிகமானாவர்கள் தடுப்பூசி பெற்று விட்டாதாக, செவ்வியொன்றில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகள் கிடைக்குமா எனும் நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியவாறே, தனது திட்டத்தினை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்தியத் தடுப்பூசிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதிருந்த நிலையில், சென்ற மாதத்தில், அவற்றுக்கான அங்கீகாரத்தை, ஐரோப்பிய நாடுகள் முதலாக பல்வேறு நாடுகளும் வழங்கியிருந்தன. தனது ஏழுவகையான சொந்தத் தயாரிப்புக்களுடன், பல்வேறு குறைவளங்களிருந்த நிலையிலும், 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி என்பதை இந்தியா நிகழ்த்திக் காட்டியிருப்பது விமர்சனங்களுக்கு அப்பாலுமான சாதனை.