ஒரு பாலின உறவு சமூகக் குற்றமாக கருதப்பெற்று வந்த சுவிற்சர்லாந்தில், அதனை ஆதரித்து வாக்களித்து, ஒரு பாலின உறவை அங்கீகரித்துள்ளார்கள் சுவிற்சர்லாந்து மக்கள்.
பல் கலாச்சாரச்மூகங்கள் இணைந்து வாழும் சுவிற்சர்லாந்தின் இந்த மாற்றம் காலங்கடந்து நிகழ்ந்த மாற்றம் எனவும், நிகழ்ந்திருப்பது காலத்தின் கட்டாயம் என்றும் வர்ணிக்கப்படுகிறது. கலாச்சாரக் காவலர்களுக்கு அதிர்ச்சி தருவதாயினும் இது மாறிவரும் உலக ஒழுங்கின் தவிர்க்க முடியாத விதி என்பதை சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். மனிதத்தின் மகத்தான பண்பு எனக் கொண்டாடுகிறார்கள் ஒரினச் சேர்கையாளர்கள்.
ஒரு பாலின உறவு, மற்றும் திருமணத்திற்கு, இறுதி ஐரோப்பிய நாடாக சுவிற்சர்லாந்தும் சட்டபூர்வமான சம்மதத்தினை வழங்கியுள்ளது. நேற்றைய தினம் இதற்கான சட்வாக்கதிற்காக நடைபெற்ற வாக்களிப்பில், சுவிற்சர்லாந்தின் 23மாநிலங்களில் வாழும் சுவிஸ் மக்கள், ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆதரவளித்துள்ளனர்.
சுவிஸ் வாக்காளர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் ஒரே பாலின திருமணத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை ஆதரித்துள்ளமை, ஓரின சேர்க்கையாளர்களுக்கான வரலாற்று நாள் என்று விமர்ச்சிக்கப்படுகிறது.
இந்த வாக்களிப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட குழுவின் செய்தித் தொடர்பாளர் ஓல்கா பரனோவா " கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மனநிலையின் மாற்றத்தை இது பிரதிபலிக்கிறது. உண்மையில் சமூகத்தில் எல்ஜிபிடி மக்களின் மிக பரந்த மற்றும் மிக முக்கியமான ஏற்றுக்கொள்ளலின் பிரதிபலிப்பாக இது உணரப்படும் " எனக் குறிப்பிட்டார்.
பல வருட விவாதங்கள் மற்றும் விவாதங்களுக்கு பிறகு, 8.6 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் ஒரே பாலின தம்பதிகளை திருமணம் செய்ய அனுமதிக்கும் மசோதாவுக்கு சுவிஸ் பாராளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கான பொது வாக்கெடுப்புத் தூண்டுதலை, 50 ஆயிரம் கையெழுத்துக்களுடன் ஆதரவாளர்கள் ஏற்படுத்தினார்கள்.
இதன்வழி, நேற்று நடந்த வாக்களிப்பில், 64.1 சதவிகித சுவிஸ் வாக்காளர்கள் ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆதரவாக இருப்பதால், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இதற்கான சட்டவரைவு அமுலாக்கம் எதிர்வரும் ஜூலை 1, 2022 முதலே நடைமுறைக்கு வரும் எனமத்திய நீதி மற்றும் காவல் துறை தலைவர் கரின் கெல்லர் தெரிவித்துள்ளார்.
இச்சட்டம் நடைமுறைக்கு வருகையில், ஒரு பாலினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது மட்டுமல்லாது, விந்து தானம், குழந்தைகள் தத்தெடுப்பு, முதலான வசதிகளையும் சட்டரீதியாகப் பெற்றுக் கொள்ள முடியும். மாறிவரும் உலக ஒழுங்கின் மற்றுமொரு சாட்சியமாகிறது சுவிற்சர்லாந்தின் இந்த மாற்றம்.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்