"சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்..." எனும் நான் எனும் குரலைக் கேட்பதற்காக தமிழகத்தின் ஒரு கோடியே 75 இலட்சத்திற்கும் அதிகமாக, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் பேரிலோ, தான் இரசித்த விஜய் எனும் ஒரு நடிகன் மீதான விருப்பத்தின் காரணமாகவோ, தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்களித்த ஒவ்வொருவனும், கடந்த நான்கு நாட்களின் ஒவ்வொரு நொடியையும், ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும், அச்சத்துடனும் கடந்து சென்றான்.
அப்படிக் கழிந்த அந்த நாட்களில், அணில் குஞ்சுகள் என்றும், தற்குறிகள் என்றும், விமர்சிக்கப்பட்ட இளைய தமிழகத்தின் ஒரு பகுதியினருக்கு, அரசியல் என்றால் என்ன? அது எத்தனை சூதுவாது நிரம்பியது என்பதையும், அதுவே அரசியல் நாகரீகம் அல்லது அனுபவம் என்பது போலவும், ஒரு முது பயிற்சி வகுப்பினையே எடுத்து விட்டார்கள் அரசியல் முதுமானிகள் எனும் மூத்தோர்.
அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் எனக் கூறி இளைஞரணி உருவாக்குவார்கள். பெண்கள் வரவேண்டும் என மகளிர் அணி உருவாக்குவார்கள். ஆனால் அந்த அணிகளிலிருந்தும் அரைச்சதம் தாண்டியவர்களே அதிகாரத்தில் வரவேண்டும் என அடம்பிடிப்பார்கள்.
இதையெல்லாம் தாண்டி, தன் நட்சத்திர் பிரபல முகத்தை வைத்தக் கொண்டு, பெரும்பாலும் தன் வயதை ஒத்தவர்களையும், தன்னிலும் இளையவர்களையம் அணிதிரட்டி அரசியலுக்கு வந்தால், முதல் நாளிலிருந்தே சந்தித்த அனுபவங்கள் பலவும் சங்கடமானவையே.

எத்தனை விமர்சனங்கள் ? எத்தனை வெறுப்புரைப் பேச்சுக்கள் ?. ஆனால் உதிர்க்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தை வன்மங்களையும், எதிர்வார்த்தை பேசாமல், எதைசெய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்து, அரசின் முதன்மைக்கு வந்திருக்கின்றார்கள். தற்குறிகள் என விமர்ச்சிக்கபட்ட அவர்களால்தான், தங்கள் முன்னவர்களால் செய்ய முடியாமற்போன, ஒதுக்கப்பட்டவர்களுக்கான அரசியல் அங்கத்துவத்தையும், மகளிருக்கான அங்கீகாரத்தையும் பெருமளவில் தரமுடிந்திருக்கிறது.
இளரத்தம், உணர்ச்சி வசப்படும் என நீங்கள் சொல்லி வந்ததையெல்லாம், தங்கள் பொறுமையால் கடந்து, முன்னவர்களின் அத்தனை முகமூடிகளையும், உண்மை முகங்களையும், பொதுவெளியில் திரையிட்டிருக்கின்றார்கள். விஜயைக் நடிகன் என்றும் கூத்தாடி என்றும் சொல்லியவர்களில் பலர் எத்தனை பெரிய நடிகர்களாக இருக்கிறார்கள் என்பதை, கடந்த நாட்களின் தொலைக்காட்சித் திரைகள் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
அவர்கள் மீது வைக்கப்பட்ட ஒவ்வொரு அடிப்படை விமர்சனத்தையும், அமைதியாக அதேவேளை ஆணித்தரமாக தங்கள் மௌனத்தில் மறுத்து நிற்கின்றார்கள். இதைச் சொன்னால் உங்களுக்கு ஏளனமாகத் தெரியும். உங்கள் அரசியல் வரலாற்றின் கடந்கால வரலாற்றுப் பக்கங்களில், இத்தகைய அசாதாரண சூழ்நிலைகளில் ஏற்படுத்தப்பட்ட அசம்பாவிதங்களும், அடிதடிகளும், கலவரக் கலாச்சாரங்களும் எத்தனை என்பதை நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள், அப்போது புரியும்.
தங்கள் மனது விருப்பமான நாயகனாக மடடுமே பார்த்துப் பழகியவர்கள், எப்போது காண்போம் என ஏங்கி நின்றவர்கள்கள், முண்டியடித்துக் கூடுகின்றார்கள் என்பது உண்மைதான். ஆனால் தங்கள் நாயகன், இனி தங்களின் அரசியற் தலைவன் எனும் புரிதலும், பழக்கமும் வரப் பக்குவப்பட்டு நிற்பார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
அரசியல் அறிவும், அனுபவமும், அவர்களுக்கு குறைவாக இருக்கலாம். ஆனால் கற்றுக்கொள்வதற்கான காலமும், கருவிகளும் அவர்கள் கைகளுக்குள்ளேயே இருக்கிறது. உலகின் எந்த மூலையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள்.
தமிழகத்தின் இளம் முதல்வரும் இளைய உறுப்பினர்களும், தமிழக மக்கள் ஒரு காலத்தின் கடமையை உங்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள் எனும் பொறுப்புணர்வினை, மனதிலும், செயலிலும் பதித்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். உங்கள் முன்னவர்களுக்கும், மூப்புக்குமான மரியாதையையும், கண்ணியத்தையும் காப்பாற்றப் பழகிக் கொள்ளுங்கள். குழப்பிவிடுவார்கள் எனும் அச்சம் இன்றி, அவர்கள் குழப்பிவிட விரும்பாத வகையில் செயற்பட எண்ணம் கொள்ளுங்கள். தமிழகத்திற்கென நீண்ட நெடிய பண்பாட்டு விழுமயங்கள் உண்டு. அவை சிதைந்து போக வண்ணம் செயற்படுங்கள். நேர்மையான ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கவும், நாட்டின் உயர்வுக்குமான எண்ணங்களைச் செயல்களாக பதியமிடுங்கள். நீங்கள் நல்லபடியாக நடந்தால், உங்களைத் தொடர்பவர்கள், உங்களிலும் சிறப்பான உயர்வுகளைக் காண்பார்கள்.
இத்தனை குழப்பங்களின் இறுதியிலும், வரலாற்றுத் தவறினைத் தவிர்த்து, தமிழ்ச்சமூகத்தின் தனித்துவத்தைப் பேணும் விருப்பில் ஒன்றுபடுகின்றோம் என்ற குரல், தமிழகத்து மக்களின் இதயங்களை மட்டுமல்ல, எல்லைகள் எல்லாம் தாண்டி உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் மனங்களிலும் கூட, வேற்றுமைகள் களைந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இளைய தமிழகம் எழுகின்றது என்பதற்கான ஒரு அடையாளம். உலகின் இளையவர் விகிதாசாரப் பரம்பலின் முன்னிலையில் நிற்கும் இந்தியாவின், முன்னணி மாநிலம் ஒன்றின் அரசியல் அதிகார சபையின் முதல்வராகவும், உறுப்பினர்களாகவும், இளையவர்கள் பலர் அணிசெய்வது எவ்வளவு பொருத்தமானது. இது தமிழகத்தினை இன்னும் பல உயர்வுக்கு எடுத்துச் செல்லும் எனும் நம்பிக்கையோடு இருப்போம். All is well...
எழுகின்ற இளைய தமிழகத்துக்கு வாழ்த்துக்கள் !
