ஈழத் தமிழினத்தின் ஆன்மாவை ஒட்டுமொத்தமாக அறுத்துவிடும் கொடுங்கனவோடு பேரினவாதம் தன்னுடைய கறுப்புக் கரங்களை காலங்காலமாக நீட்டி வந்திருக்கின்றது.
புத்தன் இந்த உலகிற்கு போதித்த நீதிக்கு நேர் மாறான சிந்தனையொன்றை தன்னுடைய பேரினவாத கோட்பாடாக இனத்தினதும் மதத்தினதும் பெயரினால் தென் இலங்கையின் அதிகார பீடங்கள் பல நூற்றாண்டு காலமாக முன்னெடுத்து வருகின்றன.
அந்தச் சிந்தனைகளுக்கு எதிராக பாரம்பரிய உரித்துக்களையும் உரிமைகளையும் நெஞ்சில் ஏந்திப் போராடும் இனமாக தமிழ் மக்கள் எப்போதுமே நெஞ்சுரத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த நெஞ்சுரத்தை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடுரங்களைக் கொண்டு அடக்கி ஒடுக்கிவிட முடியும் என்று தென் இலங்கையும், அதன் இணக்க சக்திகளும் நம்பின.
ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுகளைக் கடந்தும் உரித்துக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிக்காகவும் போராடும் நெஞ்சுரத்தை தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அது, காலங்காலமாக பேரினவாதத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆன்மாக்கள் வழங்கிய நெஞ்சுரம். மாண்டவர்களின் கனவுகளை ஓர் இனமாக சுமந்தாக வேண்டிய கடப்பாடு.
முள்ளிவாய்க்காலில் வைத்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலிவாங்கப்பட்டு இன்றோடு 17 ஆண்டுகளாகிறது. இன்னமும் முள்ளிவாய்க்காலுக்கான நீதி, அம் மண்ணில் ஆழப் புதைந்தே கிடக்கின்றது. அதனை வெளிக்கொணர்வதையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பெரும் சபதமாக மேற்கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் மாண்டவர்களின் ஆன்மாக்களும், அவர்களுக்காக நாளாந்தம் ஏங்கித் தவிக்கும் உறவுகளும் வேண்டிக் கொள்வது நீதியை. அந்த நீதி இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியாக மாத்திரமல்லாமல், உரித்துக்கள் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும். அவற்றுக்கான போராட்டத்தினை எந்தவொரு தருணத்திலும் நிறுத்திவிடக்கூடாது என்பதை முள்ளிவாய்க்கால் நினைவுகள் ஒவ்வொரு நொடியும் தமிழ் மக்களின் காதுகளில் உரக்கக் கூறிக் கொண்டே இருக்கும்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், பேரினவாதத்தின் பிரதிநிதிகளாக நின்றுவிடாது, நியாதிற்கான குரலாகவும், நீதிக்கான காவலர்களாகவும், இருத்தலே அந்த மண்ணுள் புதைந்த மக்களுக்குத் தரும் மரியாதையாகவும், நேர்மையான அரசியலாகவும் இருக்கும்.
