காலம் எப்போதும் அரிதான ஒன்று. தேவையான உதவியை வேண்டும் காலத்தில் கொடுக்காத செயல்கள் பயனற்றவை. சாந்தனின் மரணம் மறுபடியும் அதனை மனித சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்லியுள்ளது.
தாய் மண்ணில், தாயின் மடியில் தலைவைத்துப் படுக்க ஆசைப்பட்டவனை, நீதி விடுதலை செய்தது. ஆனால் சட்டங்களின் கைகளில் சாவடைந்தான் சாந்தன். ஒரு தாயின் 33 வருடகாலப் பிரார்த்தனைகள் தோற்றுப் போயின.
2022 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சி மத்திய சிறைக்கு அருகில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். கடந்த வாரம், சென்னையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) சாந்தனை இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவு பிறப்பித்தது; இருப்பினும், சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக அவர் RGGH-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்று புதன்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிபிஆர் செயல்முறையைத் தொடர்ந்து அவர் புத்துயிர் பெற்று, வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த நிலையில், பலனின்றி காலை 7.50 மணியளவில் அவர் உயிரிழந்தார் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அறிவித்துள்ளது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.
சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிர் விட்டு விடுதலையாகிக் காத்திருக்கும் தாயிடம் திரும்புகின்றான் சாந்தன்.