திரையில் அந்தக் காட்சிகளைப் பார்த்து இரண்டு நாட்களாகிவிட்டன. ஆனாலும் அந்தப் பயங்கரமும் பதற்றமும் பெரு வலிசுமந்த காட்சிகளாக மனத்திரையில் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.
1984ம் ஆண்டு, இதே டிசம்பர் மாதம் 2- 3ந் திகதிகளில் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. போபால் பேரழிவு அல்லது போபால்விஷ வாயு துயரம் என்றழைக்கப்படும், அந்தப் பெருந்துயரம், போபலில் இருந்த யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (UCIL) பூச்சிக்கொல்லி ஆலையில் நடந்த ஒரு பெரும் இரசாயன விபத்தாகும். உலகின் மிக மோசமான தொழில்துறை பேரழிவாக வர்ணிக்கப்படும், இந்தப் பேரவலத்தில் ஆலையைச் சுற்றியுள்ள சிறிய நகரங்களில் 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் மீதைல் ஐசோசயனேட் (MIC) நச்சு வாயுவினால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் எனும் தகவல்கள் உள்ளன. இதன் பாதிப்புக் உள்ளான குழந்தைகள் பலர் இப்போதும் வலுவிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
எழுத்திலோ, வார்த்தைகளிலோ சொல்லிவிட முடியாத அந்தப் பெருந்துயரச் சம்பவத்தை, The Railway Men எனும் தலைப்பில் இணையக் குறுந்தொடராக "நெட்பிளிக்ஸ்" நிறுவனம் கடந்த நவம்பர் 18ந் திகதி வெளியிட்டுள்ளது.
இந்த மனிதப் பேரனர்த்தம் குறித்துப் பல்வேறு கடினமான தகவல்களும் ஏலவே அறிந்திருந்தவகையில், அந்தப் பெரும் வலியின் துயரத்தை அதன் கடினத்துடனேயே காட்சிப்படுத்தியிருப்பார்களா? என்ற உள் மனக் கேள்வியுடனேயே, தொடரின் முதலாவது எபிசோட்டினைப் பார்கத் தொடங்கினோம். ஒரு நாளின் தொடக்கம் போல மெதுவாக் தொடங்கி, வலியின் வீரியத்தை காட்சிகள் உணர்த்தியவாறே நகர்ந்தன.ஒவ்வொரு எபிசோட்டின் முடிவிலும் நிறுத்திடலாம் என எண்ணிய போதும், அவ்வாறு செய்துவிட முடியா வண்ணம், காட்சிகளும், படத் தொகுப்பும் நம் விழிகளைக் கடந்து செல்கின்றன. இசையும், காட்சியும், கலவையும், நம் சிந்தையை போபாலின் துயரச்சூழலுக்கே கடத்திச் செல்ல, நான்கு எபிசோட்டுகள் கடந்துவிடுகின்றன.
விஷவாயுக் கசிவு விபத்துக் குறித்த படத்திற்கு "ரயில்வே மனிதன் " என்ற பெயர் எதற்கு என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆனால் கதையும் காட்சிகளும், அந்த உண்மைச் சம்பவத்துக்குள் ஒளிந்து போயுள்ள பல்வேறு துயரங்களையும், மீட்புக்களையும், அரசியல் அதிகாரங்களையும் தாண்டி, ஒரு மக்கள்துறை மக்களுக்காக எப்படிப் போராடுகின்றது, மனிதத்திற்காய் போராடி மீட்கின்றது என்பதை, ஒரு விரைவுப் புகையிரதத்தின் வேகத்துடனேயே சொல்லியிருக்கிறது திரைக்கதை.
இறுதிக்காட்சியில் துயரச் சம்பவத்தின் நிஜமான நிழற்படங்களை திரையில் காட்டி, அதற்கான திரைக்காட்சிகளையும் பார்க்கும்போது, காட்சிப்படுத்தல்களுக்கான கடின உழைப்புத் தெரிகிறது. ஒரு பல்தேசிய நிறுவனத்தின் மக்கள் விரோதப் போக்கும், அதற்குத் துணைபோகும் உள்ளுர் அரசியலும், காவல்துறையும், கருணையற்ற வகையில் நடத்தும் திருட்டுத்தனத்தை விட, திருடுவதற்கு வந்த திருடனிடம் துன்பப்படும் மக்களுக்காக இரங்கும் குணம் நிறைந்திருக்கிறது என்பதைச் சுட்டும், ஒரு கதாபாத்திரத்தைப் போல, காட்சிக்குள் வரும் பல கதாபாத்திரங்களும், கருணையை, மானுடத்தைப் பேசுகின்றன.
இந்தப் பெருஞ்சோகம் நடந்த இரவில் போபால் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடமையிலிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் குலாம் தஸ்தகீர் மற்றும் அவரது குழுவினரின் பெரும் போராட்டத்தினை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதையில், இந்திய இரயில்வேயின் மேற்கு மத்திய மண்டலத்தின் பொது மேலாளர் ரதி பாண்டேவாக ஆர். மாதவன் நடிக்க, கே கே மேனன், போபால் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் இப்தேகார் சித்திக்யாக நடித்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களுடைய இந்தத் தொடரின் பிரதியாக்கத்தைக் கச்சிதமாக வடித்துள்ளார் ஆயுஸ் குப்தா. இயக்குனர் ஷிவ் ராவைலின் முறையான நெறியாள்கையில், செய்தியாக நாம் படித்த போபால் விஷவாயுக் கசிவுப் பேரனர்த்ததை, ஒரு பெருஞ்சோக அனுபவமாகப் பார்க்க முடிகிறது. ஒரு தடவையேனும் பார்த்து விடுங்கள் The Railway Men.
- மலைநாடான்