free website hit counter

ஆல்ப்ஸ் மலைகளின் ஆன்மக் குரல் ஆல்ப்ஹார்ன் (Alphorn)

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு மலை மற்றொரு மலையுடன் உரையாடுமா? என்ற கேள்விக்கு இசையால் பதிலளிக்கிறது சுவிற்சர்லாந்தின் தேசிய வாத்தியமான ஆல்ப்ஹார்ன். இசை எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மொழி என்றால், ஆல்ப்ஹார்ன் இயற்கையே இசையாகப் பேசும் மொழியாகும்.

பனியாலும், பசுமையாலும்  போர்த்தப்பட்ட ஆல்ப்ஸ் மலைத் தொடர்களின் அமைதியைக் கிழித்தெழும் அதன் நீண்ட ஒலி, இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பண்டைய உறவை இன்னும் உயிர்ப்புடன் நினைவூட்டுகிறது. சுவிற்சர்லாந்தின் தேசிய இசை அடையாளமாக விளங்கும் இந்த மரவாத்தியம், ஒரு கருவி மட்டுமல்ல; அது ஒரு நாட்டின் வரலாறும், பண்பாடும், வாழ்வியலும், இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறையும் ஆகும்.

மலை மேய்ப்பவர்களின் மொழி

ஆல்ப்ஹார்னின் வரலாறு ஐரோப்பாவின் நடுக்காலத்தை எட்டிச் செல்கிறது. 14 மற்றும் 15-ஆம் நூற்றாண்டுகளில் சுவிற்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் வாழ்ந்த கால்நடை மேய்ப்பவர்கள், தகவல் பரிமாற்றத்திற்காக இதைப் பயன்படுத்தியதாகப் பழைய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. எனினும், சில ஆய்வாளர்கள் அதன் தோற்றம் அதற்கும் முற்பட்ட நூற்றாண்டுகளைச் சேர்ந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

அந்தக் காலத்தில் தொலைபேசி, வானொலி, அஞ்சல் போன்ற தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத நிலையில், மலை உச்சியிலிருந்து ஊதப்படும் ஆல்ப்ஹார்னின் ஆழமான ஒலி பல கிலோமீட்டர்கள் தூரம் வரை எதிரொலித்தது. மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை அழைப்பதற்கும், அருகிலிருந்த மேய்ப்பவர்களுக்கு செய்திகளை அறிவிப்பதற்கும், அவசர நிலைகளில் எச்சரிக்கை வழங்குவதற்கும் இந்த வாத்தியம் பயன்பட்டது. இயற்கையே அதன் ஒலிபெருக்கியாக மாறியிருந்தது.

இயற்கையின் கரங்களில் பிறந்த இசைக்கருவி

ஆல்ப்ஹார்ன் பொதுவாக ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் வளரும் ஸ்ப்ரூஸ் அல்லது பைன் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பழங்காலத்தில் இயற்கையாக வளைந்து வளர்ந்த மரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து உள்ளைப் பகுதியைச் செதுக்கி, பின்னர் மீண்டும் இணைத்து கருவியை உருவாக்கினர். அதன் வெளிப்புறம் மரப்பட்டை அல்லது பிரம்பு போன்ற இயற்கைப் பொருட்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இன்றும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பல ஆல்ப்ஹார்ன்கள் இதே கைவினை மரபைப் பின்பற்றுகின்றன.

பொதுவாக 3 முதல் 4 மீட்டர் நீளமுடைய இந்த வாத்தியம், கீழ்ப்பகுதியில் மலரின் இதழ்போல் விரிந்து காணப்படும். இதில் விரல்களால் அழுத்தும் துளைகளோ, வால்வுகளோ இல்லை. கலைஞரின் உதடுகளின் அதிர்வும் மூச்சுக் கட்டுப்பாடுமே இசையை உருவாக்குகின்றன. இதனால் இயற்கை ஒலித் தொடரை (Natural Harmonic Series) அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான சுரங்கள் மட்டுமே இதில் உருவாகின்றன. இந்த எளிமையே அதன் கம்பீரமான ஒலிக்குக் காரணமாகும்.

மறையத் தொடங்கிய மரபின் மறுமலர்ச்சி

19-ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப முன்னேற்றம் வேகமெடுத்தபோது, ஆல்ப்ஹார்னின் அன்றாடப் பயன்பாடு குறைந்தது. தொலைத்தொடர்பு வசதிகள் வளர்ந்ததால், தகவல் பரிமாற்றக் கருவியாக அதன் தேவை கிட்டத்தட்ட மறைந்தது. இதனால் இந்த இசைக்கருவியும் காலத்தின் ஓட்டத்தில் அழிந்து போகும் நிலையில் தள்ளப்பட்டது.

ஆனால் அதே காலகட்டத்தில் சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களையும் நாட்டுப்புறக் கலாசாரத்தையும் பாதுகாக்கும் இயக்கங்கள் உருவாயின. நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், கைவினைஞர்கள், பண்பாட்டு அமைப்புகள் ஆகியோரின் முயற்சியால் ஆல்ப்ஹார்ன் மீண்டும் மேடையேறியது. குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நடைபெற்ற நாட்டுப்புற இசை விழாக்கள் இதன் மறுமலர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.

தேசிய அடையாளமாக உயர்ந்த இசை

இன்று ஆல்ப்ஹார்ன், சுவிற்சர்லாந்தின் தேசிய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொண்டாடப்படும் சுவிஸ் தேசிய தின நிகழ்வுகள், ஆல்ப்ஸ் மலை விழாக்கள், பாரம்பரிய கால்நடை இறக்குமதி விழாக்கள் (Alpabzug/Desalpe), நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச கலாசாரத் திருவிழாக்களில் ஆல்ப்ஹார்னின் ஒலி தவறாமல் ஒலிக்கிறது.

சுவிற்சர்லாந்தின் பல இசைப் பள்ளிகளும் நாட்டுப்புற இசை அமைப்புகளும் இளம் தலைமுறையினருக்கு ஆல்ப்ஹார்ன் பயிற்சியை வழங்குகின்றன. உலகின் பல நாடுகளிலிருந்தும் இசைக் கலைஞர்கள் இந்த வாத்தியத்தை கற்றுக்கொள்வதற்காக சுவிற்சர்லாந்திற்குச் செல்கின்றனர். சில சமகால இசையமைப்பாளர்கள், ஆல்ப்ஹார்னை மேற்கத்திய இசைக்குழுக்கள், ஜாஸ் மற்றும் நவீன இசை வடிவங்களுடனும் இணைத்து புதிய இசை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இசையாய் ஒலிக்கும் இயற்கை

ஆல்ப்ஹார்னின் ஒலி ஒரு இசைக் குறிப்பாக மட்டும் காதில் விழுவதில்லை; அது மலைகளின் அமைதியையும், பனிக்காற்றின் நறுமணத்தையும், பசுமைப் புல்வெளிகளில் மேயும் கால்நடைகளின் வாழ்க்கையையும் நினைவூட்டுகிறது. அதன் ஒவ்வொரு நாதமும் மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தின் நினைவுச் சின்னமாக ஒலிக்கிறது.

ஒரு நாட்டின் வரலாற்றை நூல்கள் சொல்லலாம்; அதன் பண்பாட்டை அருங்காட்சியகங்கள் காக்கலாம். ஆனால் ஒரு மக்களின் ஆன்மாவை இசை மட்டுமே பேச முடியும். அந்த வகையில், ஆல்ப்ஹார்ன் சுவிற்சர்லாந்தின் ஆன்மக் குரலாக இன்றும் ஆல்ப்ஸ் மலைகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

மரத்தால் உருவாக்கப்பட்ட நீண்ட குழாய் ஒன்றிலிருந்து பிறக்கும் இசை அல்ல அது; மலைகளின் இதயத் துடிப்பை மனிதன் கேட்கக் கற்றுக்கொண்ட மொழிதான் ஆல்ப்ஹார்ன் இசை என்பதே சாலப் பொருந்தும்.

இன்று தேசிய நாளைக் கொண்டாடிடும் சுவிற்சர்லாந்து மக்களுக்கு இனிய தேசியதின நல்வாழ்த்துக்கள் !

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

உருவாக்கத்தில் அங்கமாக..!

எடெல்வீஸ் மலரும் எங்களைப் போலவே...!

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula