புலம்பெயர் தமிழர்களின் பணம் தாயகத்தில் பாடோபம் எனும் பெயரில் பல கலாச்சாரச் சீரழிவுகளில் வீணடிக்கப்படுகிறது. அதிலும் ஆத்மார்த்தமான அமைதியைத் தரவேண்டிய ஆலயங்களில், கேளிக்கை நிகழ்வுகளுக்காகச் செலவிடப்படுகிறது எனும் குற்றச்சாட்டு வெகுவாக, எழுந்து வரும் காலமாக இது அமைகிறது. சமகாலத்தில் ஓய்வூதியம் நோக்கி நகரும் முதல் தலைமுறை, விலகும் அடுத்த தலைமுறை முதல், வடக்கின் கோயில் ஆடம்பரத்திலிருந்து எதிர்காலப் பொருளாதாரம் வரை இக்கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு தலைமுறை உழைத்து அனுப்பிய பணத்தில் ஒரு வீடு எழுகிறது. மற்றொரு குடும்பம் அந்தப் பணத்தில் ஒரு கோயிலை எழுப்புகிறது. இன்னொரு குடும்பம் ஒரு மாணவனின் கல்வியைத் தாங்குகிறது. வேறு ஒருவர் ஒரு சிறு தொழிலைத் தொடங்குகிறார்.இந்த நான்கு காட்சிகளும் ஒரே புலம்பெயர் பொருளாதாரத்தின் எழும் தாயகத்தின் வெவ்வேறு முகங்கள். ஆனால் புலம் பெயர் தமிழர்ளின் இந்தப் பணப்பாய்ச்சி என்றென்றும் தொடருமா? அதுவே இன்றைய வடக்கு கிழக்கின் முன் நிற்கும் மிக முக்கியமான எதிர்காலக் கேள்விகளில் ஒன்று.
புலம்பெயர் தமிழரின் முதல் தலைமுறை மெதுவாக ஓய்வூதிய வயதுக்குள் நுழைகிறது. அடுத்து வரும் பத்தாண்டுகளில் சம்பள வருமானம் குறையும். மருத்துவம், காப்பீடு, முதுமை, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் இரண்டாம் தலைமுறை இலங்கையுடன் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிணைப்பு முதல் தலைமுறையினருடையதைப் போன்றதாக இருக்காது. இதன் பொருள் என்ன?
தாயகத்தை நோக்கிய பணப்பாய்ச்சி ஒரே நாளில் நின்றுவிடாது. ஆனால் அதன் அளவு மெதுவாகக் குறையக்கூடும். அப்படியானால் இப்போது நமக்கு கிடைக்கும் அந்தப் பணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? இதுதான் இன்னும் கடினமான கேள்வி.
பணம் குறையக்கூடும் என்பதை ஏன் இப்போது சிந்திக்க வேண்டும்?
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மொத்த remittance-ஐ தமிழ் புலம்பெயர் சமூகத்தின் பணமாகக் கருத முடியாது. இரு தரவுகளும் தனித்தனியாகப் பார்க்கப்பட வேண்டும்.ஆனால் வடக்கு–கிழக்கில் குடும்பங்களின் வாழ்க்கையிலும் சமூகத் திட்டங்களிலும் புலம்பெயர் பணம் வகிக்கும் பங்கு மறுக்க முடியாதது.
போருக்குப் பிந்தைய யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் நிதியுடன் உருவான கோயில்கள் குறித்த ஆய்வுகள், புதிய கோயில் கட்டுமானங்களின் கணிசமான பகுதி புலம்பெயர் ஈடுபாடு, நன்கொடை மற்றும் தாயகத்துடனான உறவை மீளமைக்கும் முயற்சிகளுடன் தொடர்புடையவை என்பதைப் பதிவு செய்துள்ளன.
இது ஒரு சாதாரண மதக் காட்சி அல்ல. இது புலம்பெயர் பணம் எங்கு செல்கிறது என்பதற்கான ஒரு சமூகக் கண்ணாடி. அந்தக் கண்ணாடியில் நாம் பார்க்க வேண்டியது; நமது முன்னுரிமைகள் சரியாக உள்ளனவா? முதல் தலைமுறை ஓய்வுபெறும்போது என்ன நடக்கும்? இதுவரை புலம்பெயர் பணத்தின் முதுகெலும்பாக இருந்தது முதல் தலைமுறையின் உழைப்பும் வருமானமும். அவர்கள் இளமையில் வெளிநாடு சென்றார்கள். கடினமாக உழைத்தார்கள். சேமித்தார்கள். தாயகத்துக்கு அனுப்பினார்கள். வீடுகள் கட்டினார்கள். குடும்பங்களைத் தாங்கினார்கள். கோயில்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் நிதி வழங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களின் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
ஓய்வு நிலை.
இந்நிலையில் சம்பளம் குறையும். ஓய்வூதியம் சம்பளத்தை முழுமையாக மாற்றாது. சேமிப்பைத் தொடாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் உருவாகும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது ஒரு முக்கியமான பொருளாதார மாற்றம் நிகழும். அது “கொடுக்கக்கூடிய பணம்” மெதுவாக “பாதுகாக்க வேண்டிய பணமாக” மாறும். அப்போது தாயகத்துக்கு அனுப்பப்படும் மாதாந்திர அல்லது ஆண்டாந்திர தொகை குறையலாம். ஆனால் இது தாயகத்தின் மீதான அன்பு குறைவதால் அல்ல, வருமானத்தின் இயல்பு மாறுவதால். அப்படியானால் நாம் இன்று செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானதல்லவா?
மிகவும் முக்கியமானது.ஏனெனில் வளம் நிரந்தரமல்ல என்றால், அதன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்புவது அவசியம். இங்கேதான் வடக்கில் காணப்படும் ஒரு முரண்பாட்டை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஒருபுறம்:
வேலைவாய்ப்பு பற்றாக்குறை,
இளைஞர்களின் எதிர்காலம்,
சிறு தொழில்களின் பலவீனம்,
தொழில்நுட்பக் கல்வியின் தேவை,
விவசாய நவீனமயமாக்கல்,
முதியோர் பராமரிப்பு,
சுகாதார வசதிகள்,
திறன் பயிற்சி,
பெண்கள் தொழில் முனைவு போன்ற அடிப்படை தேவைகள் உள்ளன.
மறுபுறம்:
பெரும் அளவிலான கோயில் கட்டுமானங்கள், அலங்காரங்கள், திருவிழாக்கள், களியாட்டங்கள் மற்றும் போட்டி மனப்பான்மையிலான செலவுகள் காணப்படுகின்றன என்று சமூகத்தில் விமர்சனங்கள் எழுகின்றன.இதனைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் உள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் புலம்பெயர் நிதியுடன் உருவான சில கோயில்கள் அவற்றின் சுற்றுப்புற சமூகத் தேவைகளுடன் ஒப்பிடும்போது அளவுக்கு மீறிய பிரம்மாண்டத்துடன் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் கோயில்களின் எதிர்கால பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. அதனால் எழும் கேள்வி “கோயில் கட்டக்கூடாதா?” என்பது அல்ல. அந்தக் கேள்வி தவறானது.
அப்படியானால் எழும் சரியான கேள்வி எது ?
“கிடைக்கக்கூடிய ஒவ்வொரு புலம்பெயர் ரூபாயிலும், எவ்வளவு பகுதி வழிபாட்டிற்கும், எவ்வளவு பகுதி சமூகத்தின் எதிர்காலத்திற்கும் செல்ல வேண்டும்?” என்பதே. இது மதத்தை விமர்சிப்பதல்ல; முன்னுரிமையைப் பற்றி கேட்பது
கோயில் தமிழ்ச் சமூகத்தின் வெறும் வழிபாட்டுத் தலம் அல்ல.
அது உண்மையில்; கலாசார நினைவகம்; சமூக ஒன்றுகூடல்; பாரம்பரியத்தின் பாதுகாப்பிடம்; தலைமுறைகளை இணைக்கும் நிறுவனம்; கலை, இசை, என்பவற்றுடன் இணைந்த ஆன்மிகத்தின் மையம். எனவே கோயில்களுக்கான நிதியை முழுமையாக மறுப்பது சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் நியாயமானதல்ல. ஆனால் ஒரு கோயிலின் கோபுரம் உயரும்போது, அதன் அருகிலுள்ள இளைஞனின் எதிர்காலமும் உயர்கிறதா?
ஒரு திருவிழாவில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்படும் போது, அந்த ஊரில் ஒரு மாணவனுக்கு ஒரு வருட கல்வி உதவி கிடைக்கிறதா? ஒரு அலங்காரப் பணிக்காகப் பெரும் தொகை செலவிடப்படும் போது, அதே ஊரில் ஒரு சிறு தொழிலுக்கு கடன் அல்லது விதைமூலதனம் கிடைக்கிறதா? இந்தக் கேள்விகளைக் கேட்பது மத எதிர்ப்பு அல்ல. இது சமூகப் பொறுப்பு.
“கோயில் vs கல்வி” என்ற போலியான எதிர்மறையைத் தவிர்க்க வேண்டும்
இங்கே இன்னொரு நுட்பமான விஷயம் உள்ளது. நாம் “கோயிலா? கல்வியா?” என்று வாதிட்டு இரண்டு எதிரிகளாக உருவாக்கக் கூடாது.மாறாக; “கோயிலும் இருக்கட்டும்; கோயிலைச் சுற்றியுள்ள சமூகமும் வளம்பெறட்டும்” என்பதே சரியான அணுகுமுறை.
ஒரு கோயிலுக்கு புலம்பெயர் ஒருவர் 10 மில்லியன் ரூபாய் வழங்கினால், அந்தத் தொகையின் ஒரு பகுதி கட்டுமானத்திற்கும், ஒரு பகுதி கல்விக்கும், ஒரு பகுதி மருத்துவ உதவிக்கும், ஒரு பகுதி கோயிலின் நீண்டகால பராமரிப்பு நிதிக்கும் சென்றால்? அந்தக் கோயில் வெறும் கட்டிடம் அல்ல. அது ஒரு சமூக நிறுவனமாக மாறுகிறது.
கோயில்களின் பொருளாதாரப் பரிணாமம் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு கோயில் ஆண்டுக்கு பெரும் நிதியைப் பெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிதியின் பயன்பாட்டை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. வழிபாடு மற்றும் பராமரிப்பு
தினசரி பூஜை, ஊழியர்கள், மின்சாரம், பராமரிப்பு போன்ற அத்தியாவசிய செலவுகள்.
2. பாரம்பரியப் பாதுகாப்பு
கோயில் கலை, இசை, சிற்பம், சைவசித்தாந்தம், தமிழ் மரபு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள்.
3. கல்வி
கோயிலுடன் இணைந்த கல்வி நிதியம்.
வறிய மாணவர்களுக்கு: கல்வி உதவி; கணினி; இணைய வசதி; பல்கலைக்கழக உதவித்தொகை; தொழில்நுட்பப் பயிற்சி.
4. சுகாதாரம்
கிராமத்தில் மருத்துவ முகாம்கள்.
முதியோருக்கான உதவி.
நீண்டகால நோயாளிகளுக்கான ஆதரவு.
5. வாழ்வாதாரம்
சிறு தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு சிறு கடன்.
பெண்களுக்கான தொழில் முனைவு நிதி.
விவசாய உபகரணங்கள்.
தொழில்நுட்பப் பயிற்சி. அப்போது கோயில் ஒரு செலவிடும் நிறுவனமாக இல்லாமல், சமூக மூலதனத்தை உருவாக்கும் நிறுவனமாக மாறும்.
ஒரு திருவிழாவை எப்படி மாற்றலாம்?
திருவிழா தேவையற்றது என்று சொல்ல முடியாது. அது சமூகத்தின் உயிர். ஆனால் அதன் வடிவத்தை மாற்றலாம்.
உதாரணமாக; ஒரு பெரிய திருவிழாவுக்கு 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதெனில், அதில் 15 மில்லியன் ரூபாய் வழிபாடு மற்றும் விழாவுக்குச் செலவாகட்டும்.
மீதமுள்ள 5 மில்லியன் ரூபாய்; “திருவிழா சமூக நிதி” என அமைக்கப்படலாம். அதன் மூலம் ஆண்டுதோறும்; 20 மாணவர்களுக்கு உதவித்தொகை; 5 சிறு தொழில்களுக்கு விதைநிதி; 100 முதியோருக்கு மருத்துவ உதவி என வழங்கலாம். இதனால், அடுத்த ஆண்டு அந்த மாணவர்களில் ஒருவர் மருத்துவராகலாம். ஒருவர் பொறியாளராகலாம். ஒருவர் தொழில் முனைவோராகலாம். அப்போது அந்தத் திருவிழாவின் ஒளி ஒரு இரவில் அணைந்து போகாது. அது ஒரு தலைமுறைக்குச் செல்லும்.
புலம்பெயர் நன்கொடையாளர்களுக்கும் ஒரு புதிய பொறுப்பு
இங்கு புலம்பெயர் சமூகத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். வெளிநாட்டில் வாழும் ஒருவர் கோயிலுக்கு பணம் அனுப்புவது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் அவர் தாயகத்தின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
கோயிலின் கட்டுமானத்திற்கு; “எவ்வளவு பெரியதாக கட்டலாம்?” என்று கேட்பதைவிட, “எத்தனை தலைமுறைகள் இதனால் பயன்பெறும்?” என்று கேட்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஒரு கோபுரம் நூறு ஆண்டுகள் நிற்கலாம். ஆனால் ஒரு கல்வி உதவியால் உருவான மருத்துவர், நூற்றுக்கணக்கான உயிர்களைத் தொடலாம். ஒரு சிறு தொழிலுக்கு வழங்கிய மூலதனம் பத்து ஆண்டுகளில் பல குடும்பங்களின் வருமானமாக மாறலாம். அதனால்; கேளிக்கைகளில் செலவு செய்வதா? மனிதனில் முதலீடு செய்வதா? என்ற கேள்வி எழுகிறது.
இக் கேள்ளிவக்கான சிறந்த பதில்; இரண்டையும் செய்யலாம், ஆனால் சமநிலையுடன். “கோயில் நிதி”யை “சமூக முதலீட்டு நிதி”யாக மாற்ற முடியுமா? இது நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு யோசனை. ஒவ்வொரு பெரிய கோயிலும் ஆண்டுதோறும் பெறும் புலம்பெயர் நன்கொடையில் ஒரு சிறிய சதவீதத்தை கட்டாயமல்லாத, ஆனால் சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையிலான Community Development Fund ஆக ஒதுக்கலாம்.
உதாரணமாக:
70% — கோயில் மற்றும் மதப் பணிகள்
10% — கல்வி
10% — சுகாதாரம்
5% — இளைஞர் தொழில் முனைவு
5% — அவசர சமூக உதவி என்பது ஒரு மாதிரி மட்டுமே. விகிதங்கள் கோயிலுக்கு கோயில் மாறலாம். முக்கியமானது விகிதம் அல்ல. கோயிலின் பணத்தில் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் ஒரு நிரந்தர பங்கு இருக்க வேண்டும் என்பதே கொள்கை.
வெளிப்படைத்தன்மை இல்லாமல் மாற்றம் வராது
இது இன்னொரு முக்கியமான பிரச்சினை. புலம்பெயர் நிதி எவ்வளவு வருகிறது? எவ்வளவு செலவாகிறது? எந்த ஒப்பந்ததாரருக்கு செல்கிறது?கட்டுமானச் செலவு என்ன? பராமரிப்பு செலவு எவ்வளவு? ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? எவ்வளவு கல்விக்குச் செல்கிறது? எவ்வளவு சமூக நலத்திற்குச் செல்கிறது? என்பவை வெளிப்படையாக இருக்க வேண்டும்.
கோயில் என்ற பெயரால் கணக்குக் கேட்கக்கூடாது என்ற மனநிலை நீண்டகாலத்தில் கோயில்களுக்கே தீங்கு விளைவிக்கும்.
ஆய்வுகளில் சில புலம்பெயர் நிதியுதவி செய்யப்பட்ட கோயில் திட்டங்களில் உள்ளூர் சமூகத்திற்கு முடிவெடுக்கும் அதிகாரம் குறைவாக இருந்ததையும், “மதம்” என்ற புனிதத் தன்மை காரணமாக செலவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்புவது கடினமாக இருந்ததையும் பதிவு செய்துள்ளன.
எனவே; புனிதம் என்பது கணக்குத் தணிக்கையிலிருந்து விலக்கு அல்ல. மாறாக, புனிதமான பணத்திற்கு இன்னும் அதிகமான பொறுப்புணர்வு தேவை. கோயில் போட்டி சமூகப் போட்டியாக மாறக்கூடாது
வடக்கில் சில இடங்களில் ஒரு கோயில் மற்றொரு கோயிலை விட பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்ற போட்டி உருவாகும்போது, அதன் பின்னால் மத உணர்வு மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்து, செல்வாக்கு, புலம்பெயர் வெற்றி ஆகியவற்றைக் காட்டும் விருப்பங்களும் இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன.
இது மிகவும் ஆபத்தான பாதை. ஏனெனில் ஒரு கோயிலின் பிரம்மாண்டம் மற்றொரு கோயிலுக்கு அழுத்தத்தை உருவாக்கும்.
பின்னர்; “அவர்களிடம் வெளிநாட்டுப் பணம் இருக்கிறது; நாமும் கட்ட வேண்டும்.” என்ற போட்டி உருவாகும். இறுதியில்,
கடவுளுக்கான பக்தி, கட்டிடத்திற்கான போட்டியாக மாறிவிடும்.
அதைவிட ஆபத்தானது; புலம்பெயர் செல்வத்தின் வெளிப்பாடு, தாயக வறுமையின் நடுவே ஒரு சமூக சமத்துவமின்மையின் அடையாளமாக மாறுவது. ஆரோக்கியமான மாற்றம் எப்படி சாத்தியம்? இதற்கு ஒரு புதிய சமூக ஒப்பந்தம் தேவை.
புலம்பெயர் சமூகத்திடம் இருந்து, “கட்டுங்கள்” என்பதற்குப் பதிலாக, “கட்டிய பிறகு என்ன உருவாகும்?” என்று கேட்க வேண்டும்.
கோயில் நிர்வாகத்திடம் இருந்து, “எவ்வளவு செலவிட்டோம்?” என்பதோடு “எவ்வளவு சமூக மதிப்பு உருவாக்கினோம்?” என்பதையும் காட்ட வேண்டும். உள்ளூர் சமூகத்திடம் இருந்து; “வெளிநாட்டில் இருப்பவர்கள் தர வேண்டும்” என்ற எதிர்பார்ப்பிலிருந்து “நாமும் ஒரு பங்கை ஏற்க வேண்டும்” என்ற பொறுப்புணர்வுக்கு நகர வேண்டும். அரசிடம் இருந்து;புலம்பெயர் நிதியை வெறும் நன்கொடையாகப் பார்க்காமல், வளர்ச்சி மூலதனமாக அணுக வேண்டும்.
இவ்வாறான நோக்கில் எழும் புதிய மாதிரி வடிவம் : “ஒரு கோயில் - ஒரு சமூகப் பல்கலைக்கழகம்” என்பதாகும். இது ஒரு குறியீட்டு யோசனை. ஒவ்வொரு பெரிய கோயிலும் தனது சுற்றுப்புற சமூகத்தில் குறைந்தபட்சம் ஒரு துறையைத் தத்தெடுக்கலாம்.
ஒரு கோயில்; கல்வியை. மற்றொன்று; முதியோர் நலனை. மற்றொன்று; விவசாயத்தை.மற்றொன்று; இளைஞர் தொழில் முனைவினை. மற்றொன்று; தமிழ் கலை மற்றும் பண்பாட்டை. அப்போது கோயில்கள் ஒன்றுக்கொன்று போட்டியிட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொன்றும் ஒரு சமூகத் தேவையைத் தாங்கும் நிறுவனமாக மாறும்.
புலம்பெயர் பணத்தின் அடுத்த கட்டம்
“வழங்குதல்” அல்ல, “பெருக்குதல்” இதுதான் முழு விவாதத்தின் மையம்.
இன்று: 100 ரூபாய் செலவு என்ற மாதிரி இருக்கிறது.
நாளை: 100 ரூபாய் → முதலீடு → வருமானம் → வேலை → மேலும் வருமானம் என்ற மாதிரி இருக்க வேண்டும்.
ஒரு கோயில் 10 லட்சம் ரூபாய் செலவழித்து ஒரு அலங்காரத்தைச் செய்தால், அந்தப் பணம் பெரும்பாலும் ஒரு நிகழ்வுடன் முடிகிறது. அதே 10 லட்சம் ரூபாய்; ஐந்து இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான மூலதனமாக மாறினால்? அவர்கள் உருவாக்கும் வருமானம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொடரலாம். ஒரு நாள் நீடிக்கும் அலங்காரத்தைவிட, பத்து ஆண்டுகள் நீடிக்கும் வாழ்வாதாரம் சமூகத்திற்கு அதிக செல்வம். இது மதத்துக்கு எதிரான கருத்தல்ல மாறாக, இது மத நிறுவனங்களின் சமூகப் பங்கைக் கூட உயர்த்தும்.
தமிழ் மரபில் கோயில் என்பது வெறும் வழிபாட்டிடம் மட்டுமல்ல.அது சமூக வாழ்க்கையின் மையமாக இருந்த காலங்கள் உண்டு. கல்வி, கலை, இசை, உணவு, தர்மம், சமூகச் சந்திப்பு போன்றவை அதன் சுற்றிலும் இயங்கின. அந்தப் பாரம்பரியத்தின் நவீன வடிவத்தை ஏன் மீண்டும் உருவாக்கக்கூடாது?
கோயில் — ஆன்மிக மையம்.
கோயில் — கலாசார மையம்.
கோயில் — கல்வி மையம்.
கோயில் — சமூக நல மையம்.
கோயில் — இளைஞர் திறன் மையம். இவ்வாறு விரிவடைந்தால், கோயிலுக்குச் செலவிடப்படும் பணம் வீணாகாமல், சமூக மூலதனமாக மாறும்.
இறுதியில் ஒரு கடினமான உண்மை
புலம்பெயர் தமிழரின் முதல் தலைமுறை என்றும் சம்பளம் பெறப்போவதில்லை. அவர்களின் வருமானம் ஒருநாள் குறையும். அவர்களின் ஓய்வூதியம் குறைவாக இருக்கும். அவர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவர்களின் பிள்ளைகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் அதிகம் முதலீடு செய்வார்கள். அவர்களின் பேரப்பிள்ளைகள் இலங்கையை வேறொரு பார்வையில் பார்க்கலாம்.
அதனால்; இன்றைய புலம்பெயர் பணம் நாளைய நிரந்தர வருமானம் அல்ல. அது ஒரு வரலாற்றுச் சாளரம். அந்தச் சாளரம் இன்னும் திறந்திருக்கிறது.ஆனால் எவ்வளவு காலம்? அதைத் துல்லியமாக யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அடுத்த 10–20 ஆண்டுகள் மிக முக்கியமானவை.
இந்தக் காலத்தில் கிடைக்கும் வளத்தை நாம்; கோபுரங்களாக மாற்றுகிறோமா? களியாட்டங்களாக மாற்றுகிறோமா? அல்லது மனித மூலதனமாக மாற்றுகிறோமா? என்பதே தீர்மானிக்கும்.
ஒரு கோயிலின் உயரத்தைவிட ஒரு தலைமுறையின் உயரம் முக்கியம்
வடக்கின் வானில் உயரமாக எழும் கோபுரங்கள் நம் வரலாற்றின் அடையாளங்கள். அவை இருக்கட்டும். அவை இன்னும் உயரட்டும். ஆனால் அவற்றின் நிழலில்; ஒரு மாணவன் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்தால், ஒரு இளைஞன் வேலை இல்லாமல் இருந்தால், ஒரு விவசாயி கடனில் இருந்தால், ஒரு முதியவர் மருத்துவ உதவிக்காகக் காத்திருந்தால், ஒரு பெண் தொழில் தொடங்க முடியாமல் இருந்தால், ஒரு குடும்பம் வெளிநாட்டுப் பணம் நிற்குமோ என்ற அச்சத்தில் வாழ்ந்தால், அப்போது நமது கோபுரங்களின் உயரம் நமது சமூகத்தின் உயரத்தை அளக்காது.
சமூகத்தின் உயரம் அதன் மனிதர்களின் வாழ்க்கையில்தான் தெரியும்.
அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியது என்ன? முதல் தலைமுறை தாயகத்துக்கு பணம் அனுப்பியது. அது வீடுகளைக் கட்டியது. அது கோயில்களைக் கட்டியது. அது குடும்பங்களைக் காப்பாற்றியது. அதற்காக அந்த தலைமுறைக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆனால் அந்தப் பணத்தை எவ்வாறு பயன்படுத்தினோம் என்பதே அடுத்த தலைமுறையின் தீர்ப்பாக இருக்கும்.
கோயில்கள் இருந்தனவா? — ஆம்.
பெரிய திருவிழாக்கள் நடந்தனவா? — ஆம்.
கோபுரங்கள் உயர்ந்தனவா? — ஆம்.
ஆனால்; அந்தக் காலத்தில் எத்தனை தொழில்கள் உருவானது? எத்தனை இளைஞர்கள் உள்ளூரிலேயே வேலை பெற்றார்கள்?
எத்தனை மாணவர்கள் உலகத் தரக் கல்வி பெற்றார்கள்? எத்தனை குடும்பங்கள் வெளிநாட்டுப் பணத்தைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுபட்டன? எத்தனை சமூக நிறுவனங்கள் தன்னிறைவு பெற்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் நமது உண்மையான கணக்கு.
புலம்பெயர் பணத்தின் அடுத்த தலைமுறைச் சாசனம்
இனி புலம்பெயர் தமிழர் தாயகத்துக்கு பணம் அனுப்பும்போது ஒரு புதிய கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. “இந்தப் பணம் ஒரு வருடம் கழித்து எங்கே இருக்கும்?” கோயில் கட்டுமானத்தில் செலவிட்டால் அது கல்லாக இருக்கும்.
திருவிழாவில் செலவிட்டால் — அது நினைவாக இருக்கும்.
உணவாக செலவிட்டால் — அது ஒரு நாளில் முடியும்.
கல்வியில் செலவிட்டால் — அது ஒரு மனிதனாக வளரும்.
தொழிலில் முதலீடு செய்தால் — அது வருமானமாகத் திரும்பும்.
வேலைவாய்ப்பாக மாற்றினால் — அது ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும்.
இதுவே புலம்பெயர் பணத்தின் பரிணாமப் பாதை.
முதல் தலைமுறை ஓய்வுபெறும் முன் நாம் அந்த மாற்றத்தைத் தொடங்காவிட்டால், நாளைய வடக்கு ஒரு மிகப்பெரிய பொருளாதார இடைவெளியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இன்று தொடங்கினால்? ஒரு தலைமுறை அனுப்பிய பணம், அடுத்த தலைமுறையின் தன்னிறைவு பொருளாதாரமாக மாறலாம்.
அப்போது கோயிலின் கோபுரமும் இருக்கும். திருவிழாவின் ஒளியும் இருக்கும்.தமிழின் பண்பாடும் இருக்கும்.ஆனால் அவற்றின் அடியில், தன்னம்பிக்கையுள்ள ஒரு சமூகமும் இருக்கும். அதுவே நமக்குத் தேவை. புலம்பெயர் தமிழரின் பணம் என்றும் வர வேண்டும் என்பதல்ல; அவர்கள் அனுப்பிய பணம் ஒரு நாள் நமக்குத் தேவையில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே உண்மையான இலக்கு.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்.
