நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் கரிசல் இலக்கியம் என்பது யதார்த்த எழுத்தின் முக்கியமான வகை. அதில் முதல் சூப்பர் ஸ்டார் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் என்று எதிர்ப்புக் கூறாமல் ஏற்றுக்கொள்வார்கள்.
யார் இந்த கி.ராஜநாராயணன் ? அது என்ன கரிசல் இலக்கியம் ?
தமிழ் இலக்கியத்தில் எதற்கு இந்தப் பிரிவினை என்று கூட நீங்கள் நினைக்கலாம். இது பிரிவினை அல்ல; நவீன தமிழ் இலக்கியத்தின் புவியியல் வரைபடம். ஒரு தேசம், ஒரு மொழி இருந்தாலும் வட்டார ரீதியான புவியியல் அமைப்பு உருவாக்கும் வாழ்க்கைச் சூழ்நிலையால், வட்டாரப் பேச்சுமொழி, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், உணவுமுறை தொடங்கி வழிபாடு வரை பலவற்றிலும் வட்டாரத் தண்மையும் வழக்குகளும் மாறுபடுவது எல்லா தேசங்களிலும் இருக்கும் இயல்புதான்.
அதனால்தான், தமிழகத்தின் முன்னோர்கள் வாழும் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரித்தார்கள். சங்க இலக்கியமும் இந்த ஐவகைக்குள் அடங்கியது. அப்படித்தான் வட்டார மண் சார்ந்த இலக்கிய, நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையுடன் வளர்ந்து வந்திருக்கிறது. அதனடிப்படையில் கரிசல் இலக்கியம், கொங்கு இலக்கியம், தஞ்சை இலக்கியம், மதுரை இலக்கியம், நாஞ்சில் இலக்கியம், நெல்லை இலக்கியம், ஆற்காட்டு இலக்கியம் என தன்னுடைய எழுத்து வகையினை வகைப்படுத்திக்கொள்ளும் தமிழ் இலக்கியம் தற்போது இந்த வட்டார எல்லைகளைக் கடந்து, தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், இச இலக்கியம் என புதிய வகைமைகளுக்குள்ளும் தன்னை வளர்த்து வருகிறது.
இந்த இலக்கிய வகைகளுக்கு சற்றும் குறைந்துவிடமால் ஈழத் தமிழ் படைப்பாளிகளால் படைக்கப்பட்டுவரும் புலம்பெயர் இலக்கியம் தனித்த ஆளுமையுடன் வெளிப்பட்டு வருகிறது. சரி. இனி கி.ராவிடம் வருவோம்.
எது கரிசல் நிலம்?
தெற்கத்திச் சீமை எனப்படும் திருநெல்வேலி, சிவகாசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் பார்த்த பூமியாகக் கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களனாகவும் அங்கு வாழும் மனிதர்களையும் வெந்து தணியும் அந்த கந்தக பூமியில் வெயில் மற்றும் வறட்சி உடனான அவர்களுடைய பாடுகளையும் (விவசாயம்) அந்தப் பாடுகளுக்கு நடுவில் துளிர்க்கும் மகிழ்ச்சி, வலி, போராட்டம் என அந்தப் பகுதியின் வாழ்வியலை, அந்த மண்ணுக்கே உரிய வட்டார மொழி நடையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக எழுதப்பட்டு வரும் இலக்கியமே கரிசல் இலக்கியம். இதனுடைய பிதாமகர்தாம் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன்.
தண்ணீர் வழிந்தோடும் நாஞ்சில் பகுதியில் (நாகர் கோயில், கன்னியாகுமரி) பிறந்து வளர்ந்த ஒருவர் கி.ராவின் கதைகளைப் படித்தால் குடிநீர் பஞ்சத்தால் நா வறண்டுபோன உணர்வைப் பெறுவார். குளிரும் ரம்யமும் நிறைந்த நீலகிரியில் பிறந்த ஒரு வாசகர், கி.ராவின் எழுத்துகளில் ஒளிரும் கலவி வாழ்க்கையை வாசிக்க நேரும்போது அவருக்கு வியர்த்துப்போய்விடுவார்.
இன்றைய தூத்துக்குடி உள்ள கோவில்பட்டியிலிருந்து 10 மையில் தூரத்தில் இருக்கும் இடைச்செவல் என்கிற சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர்தான் கி.ராஜநாராயணன். 50 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதத் தொடங்கியபோது தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியை ஊடுருவிக் கலப்படம் செய்த சமஸ்கிரதத்தின் மணிப்பிரவாள நடை, தமிழ் வாசிப்பை சுத்தமாக துடைத்துப்போட்டிருந்த காலம். அப்போது பெருவெடிப்பாக கரிசல் பூமி மக்களின் வட்டாரப் பேச்சுமொழியில் எழுதத் தொடங்கினார் கி.ரா. தனது பகுதி மக்களின் கலாச்சாரப் பழக்கக் வழக்கங்களை, அவர்களுடைய தினசரி வாழ்வின் பாடுகளைத் தொட்டு, அழகுணர்ச்சியுடன் எழுதத் தொடங்கினார். தன்னுடைய மக்களின் பழக்கவழக்கங்களில் இருந்த அறியாமை, மேட்டிமைத்தனம், இயலாமை, அவற்றுக்கு நடுவில் ஊடாடும் ரசனை என எதுவொன்றையும் தவிர்க்காமல் நுட்பமாகவும் அதேநேரம் மெல்லிய நகைச்சுவை இழையோடப் பதிவு செய்தார். இன்னொரு பக்கம் மொத்த தமிழ் நிலப்பரப்பும் எதிர்கொண்ட வரலாறும் அதில் பதிவாகியிருக்கும். எடுத்துக்காட்டாக அவருடைய ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு எளிய கிராமத்துக் காதலையும் அதன் பின்னணியில் இந்திய சுந்தந்திரப் போராட்டத்தையும் பதிவு செய்திருப்பதை காணமுடியும்.
கி.ரா. தொடங்கி வைத்த எழுத்து
கி.ரா. எழுதத் தொடங்கியபோது, அதுவரை சமஸ்கிரதச் சொற்கள் நிறைந்த மணிப்பிரவாள நடையில் எழுத்தப்பட்டுவந்த சிறுகதைகளின் தடத்திலிருந்து விலகி நின்றது கி.ராவின் வட்டார மொழி நடை. மண்ணின் மனிதர்களைப் பேசிய அவருடைய கதைகள், தமிழ் இலக்கியப் பரப்பில் வட்டார இலக்கியம் எனும் புதுவகை எழுத்தின் தொடக்கமாக அமைந்தன. அதனால்தான் தமிழ் ‘கரிசல் இலக்கியத்தின் முன்னத்தின் ஏர்’ என்று கி.ராவை அழைக்கிறார்கள். கி.ராவின் எழுத்துகளால் தாக்கம் பெற்ற இளைஞர்கள் 60-களில் திமுதிமுவென தமிழில் வட்டாரமொழியில் எழுத வந்தார்கள். கரிசல் எழுத்து மட்டுமல்ல; தங்களுடைய பகுதி வட்டார எழுத்தை எழுத வேண்டும் என்று தமிழகம் முழுவதுமிருந்து பெரும் படை எழுதக் கிளம்பியது. இப்படி கி.ராவுக்குப் பின் எழுத வந்து, வெற்றிகரமாக வாசக அங்கீகாரம் பெற்ற கதைகளையெல்லாம் ‘கரிசல் சிறுகதைகள்’ என்கிற தலைப்பில் தொகுத்து 1980-ல் நூலாக வெளியிட்டார் கி.ரா. அவருடைய மற்றொரு சாதனை ‘கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி’ ஒன்றை முதன் முதலில் தொகுத்து வெளியிட்டது.
100 வயதை நோக்கி நடைப்போட்டுக்கொண்டிருந்த கி.ரா. 99வயதில் வாழ்வை நிறைவு செய்திருக்கிறார். தன்னுடைய 96 வயதில் ‘அந்த இவள்’ என்ற நாவலைப் படைத்திருந்தார். பாண்டிச்சேரியில் வசித்து வந்த அவர், கடந்த 55 ஆண்டுகளாக எழுதி வந்திருக்கிறார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், நடைச்சித்திரங்கள், கடிதங்கள் என பல வடிவங்களில் வட்டார இலக்கியத்தை, நிலத்தின் கதைகளாக, மண்ணையும் மக்களையும் பேசும் கதைகளாக படைத்திருக்கும் கி.ராவின் இலக்கியச் சாதனைகளுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. ஆனால், அவரது எழுத்துகள் உலக அளவில் மொழிபெயர்க்கப்பட்டிருக்குமானல், இந்தியாவின் ஞானபீடத்தையும் தாண்டி, இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெரும் தகுதியையும் கொண்டவை. ஆனால், தமிழ் மொழியின் இலக்கியச் செல்வங்கள் உலகப் பொதுமொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போதுதான் கி.ரா போன்றவர்கள் உலக இலக்கிய ஆளுமைகள் என்பது உணரப்படும். அதுவரை இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அவரது மறைவும் கூட 20 வாசகர்களின் கூடலுடன் முடிந்துவிடும் சோகமாகவே கடந்து செல்லும்.
கரிசல் தாத்தாவின் கடைசிச் சிரிப்பு
- படம் உதவி: புதுவை இளவேனில் -
தமிழின் தனித்துவமான எழுத்தின் பிதாமகர், கரிசல்காட்டுக் கதைசொல்லி கி.ரா.வின் மறைவுக்கு, ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது 4தமிழ்மீடியா குழுமம்.
கரிசல்காட்டுத் தாத்தா போய்வாருங்கள் !