கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
அந்த விவாதத்துக்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால், பில் கேட்ஸ் - மெலிண்டா தம்பதி குறித்த ஒரு வருத்தமன செய்தி இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக் ஆகியிருக்கிறது.
ஆமாம்! பில் கேட்ஸும் மெலிண்டாவும் 26 ஆண்டுகள் மண வாழ்விலிருந்து பரஸ்பர விவகாரத்து பெற்று வெளியேறுகிறார்கள். 2000-ஆவது ஆண்டில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பொது மேலாளராக பதவி வகித்த மெலிண்டா, பின்னர் 2015 ‘பில் கேட்ஸ் - மெலின்டா பவுண்டேஷன் என்கிற உலகின் மிகப்பெரிய அறக்கட்டளையை கணவரின் சம்மத்துடன் தொடங்கினார். ஏனெனில் இருவருமே உதவும் மனம் படைத்தவர்கள். உலகின் மிகப்பெரிய பணக்காரத் தம்பதிகளில் இவர்களும் அடங்குவர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதை விடவும் முக்கியமானது உலகிலேயே இவர்கள் மிகபெரிய கொடையாளிகள் என்பது வெகுமக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. தங்களுடைய பில் - பெலிண்டா கேட்ஸ் அறநிறுவனம் வழியாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 பில்லியன் டாலர்கள் என்று இது வரை 55 பில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் பல தன்னார்வலர் நிறுவனங்களுக்கும் குட்டி தேசங்களுக்கும் கொடையளித்துள்ளார்கள். ஏதோ பில்லியன் கணக்கில் சில கோடி ரூபாய் என்று நினைத்துவிட வேண்டாம். இந்திய மதிப்பில் சுமார் நாலு லட்சம் கோடிகள்!
இப்படி மனதாரக் கொட்டிக்கொடுப்பது ஓர் அரிய செயல் என்றாலும் கணவனும் மனைவியும் இணைந்து இவ்வாறு மனமொத்து கொடையளிப்பது என்பது உலகின் அனைத்து சமுதாய அமைப்பிலும் அரிதினும் அரிது. இந்தத் தம்பதி, கொடைகளை ஏனோ தானோ என்று வாரி இறைப்பதில்லை. எந்த விஷயங்களுக்கு இந்த பணத்தைச் செலவிடுவது அதிகம் பயனுள்ளதாக இருக்கும், யாருக்கு இதன் தேவை அதிகமாக இருக்கும், எந்த இடத்தில் உதவி அதிகம் தேவைப்படும் என்று அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து அறிந்து, தக்க தகவல்களையும் அறிக்கைகளையும் அடிப்படையாக கொண்டே இந்த முடிவுகளை அவர்கள் இதுவரை எடுத்து வந்திருக்கிறார்கள்.
லாபம் சம்பாதிப்பதைவிட உதவி உண்மையாகவே தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுப்பதுதான் மிகவும் கடினமான செயல். அதை அத்தனை எளிதாக செய்துவிட முடியாது. அதுவுமே செலவுபிடிக்கு ஒன்றுதான். இதற்காகவே 300 ஊழியர்களை கொண்ட அறநிறுவனமாக ‘பில் கேட்ஸ் - மெலின்டா பவுண்டேஷ’னை நடத்தி வருகிறார்கள். அதே போல உலகத்தின் பல்வேறு நாடுகளின் அரசுகள், அவர்களுடனான வெளியுறவு அமைச்சுகள், உதவி தேவைப்படும் களங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தன்னார்வல நிறுவனங்கள் என துல்லியமாக தங்களுடைய கொடையளிப்பை செய்து வந்ததை உலகின் பல நிறுவனங்கள் பாராட்டியிருக்கின்றன.
அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், பெர்க்ஷையர் நிறுவனத்தின் பவுண்டரும் பில் கேட்ஸின் நெருங்கிய நண்பருமான வாரன் பப்பட் தன் மறைவுக்கு பிறகு தன் சொத்துக்கள் அனைத்தையும் பில் கேட்ஸ் - மெலிண்டா அறநிறுவனத்துக்கு அளிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய தம்பதி பிரிய முடிவெடுத்திருப்பது உலகம் முழுவதும் மனிதநேயர்கள் மத்தியில் கவலையையும் வருத்ததையும் அளித்திருக்கிறது. அந்த வருத்தத்தைப் போக்கும்விதமாக ஒரு விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ‘நாங்கள் மண வாழ்வில் பிரிவதாக ஒப்புக்கொண்டிருந்தாலும் அறக்கட்டளையில் பெரிய மாற்றங்களை கொண்டு வராமல் தொடர்ந்து எப்போதும் போல இயங்க விரும்புகிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள். எப்படியிருப்பினும் இந்தத் தம்பதியின் பிரிவு துரதிஷ்டவசமாதுதான்.
- 4தமிழ் மீடியாவுக்காக: மாதுமை