அயோத்தி என்னும் தலைப்பில், அருமையான மனிதத்துவத்தைப் பேசியிருக்க்கும் இத் திரைப்படத்தினைப் பார்த்த கணத்திலிருந்து அந்த இரு பிள்ளைகளின் முகங்களும், பரிதவிப்பும், நினைவுகளில் அகல மறுக்கிறது.
அன்பாக இருப்போம், அடுத்தவர்க்கு உதவியாக இருப்போம் எனும் மனிதநேசிப்பினை பிரச்சாரமாக இல்லாமல் உணர்வாகப் பார்வையாளனுக்குக் கடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறன திரைக்கதையும் இயக்கமும்.
அன்பான தாய், அழகான இரு குழந்தைகள், இறுக்கமான தந்தையென நால்வர் கொண்ட குடும்பம் அயோத்தியிலிருந்து இராமேஸ்வர தீர்த்த யாத்திரைக்காகக் கிளம்புகின்றது. அது அவர்களது நீண்ட நாட் கனவு. அந்தக் கனவு பாதிவழியில் பயங்கரமான விபத்தில் கலைந்து போவது மட்டுமல்லாது தாயின் உயிரைப் பறித்தும் விடுகிறது. தெரியாத இடம், புரியாத மொழி, அறிமுகமில்லா முகங்கள், எனபவற்றுக்குள் சிக்கிக் கொள்ளும் குடும்பம். அவர்களுக்கு உதவிட முனையும் உள்ளங்கள். அதற்குள் இடர்படும் சட்டச்சிக்கல்கள் என்பவற்றின் நுட்பமான கதையாடல்.
அயோத்தியைச் சேர்ந்த பல்ராம் எனும் தீவிர மதநம்பிக்கைமிக்கப் பாத்திரத்தின் குணாதிசயத்தை புனித சரயு ஆற்றின் கரையில் நிகழும் ஆரம்பக் காட்சிகளிலே அறிந்து விடுகின்றோம். ஆனால் அவனுள்ளும் அன்பான, இரக்கமான மனிதம் இருக்கின்றது என்பது இறுதிக் காட்சியில் தெரியவருகிறது.
தன் ஆழ்மனதில் வடுவாகப் பதிந்துவிட்ட வேதனையின் பாதிப்பில், திக்குத் தெரியாது தவிக்கும் அந்தக் குடும்பத்திற்கு அர்ப்பணிப்புடன் உதவிட முனையும் பாத்திரத்தில் இயக்குனர் சசிக்குமார். படத்துக்குப்படம் அரிவாளும் கையுமாக அலையும் சசிக்குமார், அறிமுகக் காட்சியில் அதேபாணியில் தோன்றினாலும், அப்பால் படம் முழுவதும், இரக்கமும், கனிவும் காட்டும் கதாபாத்திரமாக வாழ்ந்துவிடுகிறார்.
படத்தின் பலம் என்றால் மகள் ஷிவானியாக வரும் பிரீத்தி அஸ்ராணி. முகத்திலும், கண்களிலும், கதையின் கனதியை தேக்கி வைத்த வண்ணமாய் திரையில் தெரிகிறார். இந்தக் கதைக்குத் கதாநாயகியும், காதற்காட்சியும் தேவையில்லை என நிராகரித்த இயக்குனர் மந்திரமூர்த்தி, அந்தக் காவல் நிலையப் பாடற் காட்சியை ஏன் வைத்தார் என்பது புரியவேயில்லை.
நரகாசுரவதம் எனும் புராணக்கதையின் வழி தீபாவளி கொண்டாடும் நாளில், மனிதமாண்புக்காக நல்லவர்கள் பலர் சேர்ந்தியங்குவதில் அசுரத்தனம் மிக்க ஒருவன் அன்பான மனிதனாகின்றான். அதற்குப் பெயர் முக்கியமல்ல, பேரன்பு மிக்க மனங்களே காரணம் எனும் ஒப்பற்ற செய்தியோடு நிறைவுறுகிறது.
அன்புசால் அகிலம் என்பதனை உணர்த்திடும் அயோத்தி !
-4தமிழ்மீடியா விமர்சனக்குழு