free website hit counter

தமிழ் சினிமாவும் பொன் முட்டை வாத்துகளும்

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோடம்பாக்கத்தைப் பொறுத்தவரை எந்த புதிய சந்தை கிடைத்தாலும் அது பொன்முட்டையிடும் வாத்தை அறுத்து முட்டை எடுக்கும் கதைதான்.

2000களில் சாட்டிலைட் சேனல்கள் வரிசையாக தொடங்க அந்த பிசினஸ் சூடு பிடித்தது. சாட்டிலைட்டை மட்டுமே நம்பி படங்களை எடுக்க தொடங்கினார்கள். இன்னொரு பக்கம் தியேட்டர்கள் மூடப்பட்டதை கண்டுகொள்ளவில்லை. இனி சாட்டிலைட் மட்டும்தான் என்பது போல ஆடினார்கள். பெரிய ஹீரோக்கள் ‘சம்பளம் வேண்டாம். அந்த சாட்டிலைட் ரைட்சை மட்டும் கொடுத்துடுங்க...’ என்று பேசினார்கள். படத்தின் கதையை சொல்லும்போதே, நடிகர்களை ஃபிக்ஸ் செய்யும்போதே சாட்டிலைட் பிசினஸ் இத்தனை கோடி என்று திட்டமிட்டனர். கதையை கோட்டை விட தொடங்கினார்கள்.

தியேட்டர்கள் என்றால் 3ஆம் நாளுக்கு பிறகு ரசிகர்களை ஹோல்டு செய்ய படத்தில் 'சரக்கு' இருக்கவேண்டும். ஆனால் சாட்டிலைட் அப்படி இல்லையே... பெரிய ஹீரோ, புரமோஷனை மட்டுமே காட்டி விற்றுவிடலாம். அப்படி குப்பைகளை காசாக்க தொடங்கினார்கள். 'சரக்கு' இல்லாத படங்கள் தியேட்டர்களில் காற்று வாங்க சாட்டிலைட் உரிமை வாங்கிய சேனல்கள் விழித்துக்கொண்டன. படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம், தியேட்டர் ரெஸ்பான்சை பார்த்துவிட்டு ரேட் பேசலாம் என்று நழுவ அப்போதுதான் தியேட்டர்களின் அருமை சினிமாக்காரர்களுக்கு புரிய தொடங்கியது.

அதன்பின் எஃப்.எம்.எஸ் எனப்படும் வெளிநாட்டு உரிமம், ரீமேக் உரிமம் என்று கண்ணுக்கு அகப்பட்ட பொன்முட்டை வாத்துகளை அறுத்து தள்ளினார்கள். அந்த வரிசையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் என்ற புது வாத்து கிடைத்தது. படத்தில் அனிமல் இருக்கவேண்டும் என்று ஒரு புதுவகை ட்ரெண்ட் தொடங்க அதில் இருந்து பாம்பு, நாய், குரங்கு, புலி என்று விலங்குகளை குறிவைத்து தாக்குதலை தொடுத்தனர். ஒரே ஒரு காட்சியில் ஒரு அனிமலை நடிக்க வைத்து அதை வைத்து முழுக்க முழுக்க புரமோஷன் செய்து ஹிந்தி டப்பிங் பிசினசிலேயே படத்துக்கு போட்ட காசை எடுத்தனர்.

தென்னை மரம் பற்றிய கட்டுரை படித்த மாணவன் மாடு பற்றிய கட்டுரை கேள்விக்கு பதில் அளித்த கதையை போல சில படங்கள் அமைந்ததும், அட்வான்ஸ் வாங்கிய சில தயாரிப்பாளர்கள் படத்தையே எடுக்காமல் அபேஸ் பண்ணியதும் தொடரவே ஹிந்தி டப்பிங் மார்க்கெட் விழித்துக்கொண்டது. அந்த வரிசையில் தான் இப்போது ஓடிடியையும் கையில் எடுத்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் ஓடிடி நிறுவனங்கள் விழித்துக்கொள்ளும். அதுவரை இதுபோன்ற நவரசாக்களைச் சகித்துக்கொள்ள தான் வேண்டும்.

எது எப்படியோ தமிழ் சினிமா தியேட்டரில் இருந்து முழுமையாக ஓடிடி பக்கம் சென்று விடாதவாறு பார்த்துக்கொள்ளும் தமிழ் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றிகள். ஒருவேளை உருப்படியான கண்டெண்ட்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் ஓடிடியில் படங்களை பார்க்க தொடங்கி விட்டால் கார்ப்பரேட்காரன் இலவச எண்ட்ரி என்று அறையில் அடைத்துவைத்து வெளியே செல்ல காசு வசூலித்த கதையாகி விடும். அந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

- 4தமிழ்மீடியாவிற்காக : மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula