அழிவு..அழிவு...பேரழிவு. யுத்தங்களின் பேராற்றலும் பெரும் பயனும் அழிவு ஒன்றே. உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஆரம்பமாகி மூன்று வாரகாலங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த யுத்தம் இதுவரை எவருக்கும் முன்னேற்றத்தைத் தரவில்லை.
சில நாட்களில் முடிந்துவிடலாம் என கணிப்பிடப்பட்ட யுத்தத்தின் நாட்கள் நீண்டு செல்கின்றன. இது ஐரோப்பா மற்றும் மேற்குலநாடுகளில் பலமான பொருளாதார அதிர்வுகளைத் தோற்றுவிக்கத் தொடங்கியுள்ளன.
யுத்தத்தை ஆரம்பித்த ரஷ்யா எதிர்பார்த்தது போல் யுத்தநகர்வு இலகுவானதாக இல்லை. உக்ரைனின் எதிர்த்தாக்குதல் பலமாகவே உள்ளது. ஆயினும் மெதுவாக தனது இலக்குளை நோக்கிய நகர்வினை நகர்த்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் துறைமுகநகரான மரியுபோல் மற்றும் தலைநகர் கியேவ் என்பற்றைத் தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் கடுமையான தாக்ககுதலை நிகழ்த்தி வருகிறது. இத் தாக்குதல்களுக்குள் பொது மக்கள் வாழ்விடங்களும் தஞ்மடைந்திருக்கும் பொதுவிடங்களும் அகப்பட்டுக்கொள்வது பெருந்துயரம். போர் மிக உக்கிரம் பெற்றிருக்கும் நிலையில், உக்ரைனியர்களைச் சரணடையக் கோருகிறது ரஷ்யா.
ஜனாதிபதி கோட்டாபய ராஜினாமா -உண்மையா ?
பலமான எதிர்தாக்குதலை மேற்கொண்டு வரும் உக்ரைன், ரஷ்யப் படைகளுக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தொடர்ந்து அறிவித்துவருகிறது. ஆயினும் அவர்களது சொந்த நிலத்தில் பலமான அழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். உக்ரைனியர்கள் ரஷ்யப்படைகளின் அழிவையும், தமது தேசத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளையும், பிரச்சாரப்படுத்தி வருகின்றார்கள். உக்ரைனில் ஏற்படும் அழிவுகள் அந்நாட்டின் பொருளாதார வாழ்வாதரங்கள் மீதான பலமான தாக்கத்தினை ஏற்படுத்தப் போகின்றது. ஆயினும் போரில் எக்காரணம் கொண்டும் சரணடைவதில்லை என்று ஆரம்பம் முதலே சொல்லி வருகிறது உக்ரைன். உக்ரைன் ஜனாதிபதி தினமும் ஒவ்வொரு நாட்டின் பாராளுமன்றங்கள் மற்றும் தலைவர்களிடத்தில் உக்ரைனுக்கான உதவிகளையும், ஆதரவினையும், கானொலி உரையாடல்கள் மூலம் கோரி வருகின்றார்.
கடந்த மூன்று வார காலத்துக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான உக்ரைனிய மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறியுள்ளார்கள். இவர்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் தாயகத்தை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளார்கள். இவர்களில் அதிகமானோர் பெண்கள் குழந்தைகள் என ஐ.நா. அகதிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் பரஸ்பரம், எதிரி தரப்பு இழப்புக்களைத் தமது போர் முன்னிலையாக அறிவித்து வருகையில், ஆயிரக்கணக்கான மக்களுடன், 150க்கும் அதிகமான குழந்தைகளும் உயிரிழந்திருப்பது இந்த யுத்தத்தின் பெரும் சோகம்.
இத்தனை துயரங்களையும் சுமந்தவாறு இந்தப் போரின் நாட்கள் நீண்டு வருகையில், மேற்குலக ஐரோப்பிய நாடுகளின் வாழ்வியலிலும், பொருளாதாரத்திலும் கூட, போரின் தாக்கங்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுதக் கூடும் எனும் அச்சம் தோன்றியுள்ளன.
போரினை பேச்சுவார்த்தை மூலம் சமரசத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் சுவிற்சர்லாந்து, துருக்கி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. பேச்சுவார்த்தைகளின் சாத்தியமான நடவடிக்கைகளுக்கு இரு நாட்டின் தலைவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இரு தரப்புக்கும் இடையிலான உடன்பாடுகளில் நெருக்கம் காணப்படவில்லை. போர் நிறுத்தம் குறித்த அவர்களது நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் இடையிலான இடைவெளி மிக நீண்டதாகவே இருக்கிறது. இதுவே இப்போரின் நாட்களை, துயர்களை இன்னும் நீண்டதாக மாற்றி விடும் என்கின்ற பயத்தையும், கவலையினையும் பரவலாக எழுப்பியுள்ளது.