ஒரு வெற்றி தரும் உற்சாகத்தில் முற்றாகத் திளைத்திருக்கிறது இத்தாலி. ஐரோப்பியக் கோப்பைக் கனவின், 50 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் தோல்வியை மாற்றி எழுதி, 'யூரோ-2020 ' வெற்றிக் கோப்பையுடன் தேசிய கதாநாயகர்களாக தாயகம் திரும்பியிருக்கின்றார்கள் நீலநிற வீரர்கள்.
ஆட்டத்தின் நிறைவில் வெற்றிப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட வீரர்களில் அலெஸாண்ட்ரோ ஃப்ளோரென்சி, தனது பதக்கத்தைக் கமெராவின் முன்னால் பிடித்துக் கொண்டு, " Guarda mamma Guarda qui! - " பாருங்கள் அம்மா , இங்கே பாருங்கள் " என தன் தாய்க்குக் காட்டியதை, தன் தாயகத்துக்குக் காட்டியதாக முழு இத்தாலியும் உணர்ந்து கொண்டது.
தலைநகர் ரோமிலுள்ள சிசிலி அரண்மனையிலிருந்த இத்தாலியின் ஜனாதிபதி மட்டரெல்லா மற்றும் பிரதமர் டிராகி முதல் இத்தாலியின் கடைக் கோடி மக்கள் வரை அந்த உணர்வுப் பிரவாகத்தில் கலந்திருந்தனர். இத்தாலியின் வீதிகளும், சதுக்கங்களும், ஒளியிலும், ஒலியிலும் நிறைந்தன. ஒரு வகையில் அந்த நாட்டிற்கு இயற்கை அளித்திருக்கும் பரிசு இது எனவும் சொல்லலாம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவில் கொரோனா பெருந் தொற்றிற்று உள்ளாகிய முதல் நாடு, மற்றும் அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடு எனும் துயரின் படிமம் சுமந்து நிற்கிறது இத்தாலி. நாகரீகத்தால் உயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த வீதிகளின் வழியே இராணுவ வண்டிகளில் பெருந்தொற்றில் உயிரிழந்த உறவுகளின் உடலங்கள், பெயரிழந்து இலக்கமிடப்பட்ட பெட்டிகளில் கொண்டு செல்லப்பட்டதைப் பார்த்துக் கதறிய சோகத்தையும், வழிந்தோடிய கண்ணீரையும், துடைத்து விட்டிருக்கிறது இத்தாலியின் இந்த வெற்றி.
சுவிற்சர்லாந்தில் டெல்டா மாறுபாடு வேகமாகப் பரவுகிறது !
தலைநகர் ரோம் முதல், வர்த்தகப் பெருநகர் மிலான் வரை, வெறிச்சோடிய வீதிகள் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் நிரம்பி வழிகின்றது. இன்னும் சொல்வதானால் இத்தாலியர்களிடம் எழுவோம் எனும் தேசியப் பெரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்த நம்பிக்கை எழுச்சிக்கு முக்கியமானது இத்தாலியின் கலாச்சாரப் பண்பு ஆகும். காற்பந்து விளையாட்டின் கனவு தேசம் இத்தாலி எனலாம்.
நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் !
இத்தாலியர்களின் வாழ்விலும் பேச்சிலும் இரண்டறக் கலந்திருக்கும் முக்கிய விடயங்கள் இரண்டு. ஒன்று உணவு, மற்றையது காற்பந்து விளையாட்டு. இந்த இரண்டிற்குமாக தங்கள் வாழ்நாளில் முழு உழைப்பினையும் அதிகம் செலவிடும் மக்கள் நிறைந்த நாடு. பீட்சா, பாஸ்தா, கப்பூச்சினோ, காற்பந்து, எனும் பெருமைகளில் மிதப்பவர்கள். இந்தப் பெருமிதத்தில்தான் இத்தாலிய அணியின் துணை கேப்டன் லியோனார்டோ போனூசி " இங்கிலாந்து அதிக பாஸ்தா சாப்பிட வேண்டும் .." என வெற்றிக் களிப்பில் சொன்னார். ஆனால் அன்றைய இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இத்தாலிக்கு ஈடு கொடுத்தே ஆடியது.
55 ஆண்டுகளின் பின் ஐரோப்பியக் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் நுழைந்திருக்கும் பெருமைக்கான பொறுப்புடனேயே இறுதிவரை ஆடியது இங்கிலாந்து அணி. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்து இறுதிவரை அதனை சிறப்பாகப் பேணியிருந்தது. அதனாலேயேதான் மேலதிக நேரம் தாண்டி பெனால்டி வரை ஆட்டம் வரவேண்டியும் இருந்தது. கோப்பையை இழந்திருந்த போதும், சிறந்த போட்டி அணியாக இங்கிலாந்து நம்பிக்கை பெற்றிருக்கிறது. இது அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகள் குறித்த இலக்கினை நோக்கி நகர்த்திச் செல்லும்.
போட்டியின் வெற்றியும் தோல்வியும், இவ்வாறாகக் கணிக்கப்படுகையில், இரு அணியின் ரசிகர்கள் மத்தியில், ஏற்படுத்தியிருக்கும் மோதல் நிலை, இங்கிலாந்து முதல், ஐரோப்பிய நகரங்கள் பலவற்றின் வீதிகளிலும் எதிரொலித்துள்ளது. இதில் பலமான சேதங்களும் பொருள் இழப்புக்களும் கூட ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் கொண்டாட்ட குதுகலங்களில் இரு உயிரிழ்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இத்தாலிய செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. உணர்ச்சிநிலையில் ஏற்படும் இவ்வாறான தவறுகள் கழிந்து செல்லக் கூடியன, கடந்து செல்லக் கூடியன.
ஒரு வெற்றியை உயர்வின் படியாகக் காண்பது மேலானது....
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்