free website hit counter

இலங்கை எப்படி முன்னிலையில் நிற்கிறது...?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் Sapien Labs எனும் ஒரு ஆய்வுக் குழுவின் ஆய்வுப் புள்ளிவிபரத்தில்,  72 நாடுகளில் செய்த ஆய்வுகளின் படி, மனதளவில் பதற்றங்கள் குறைவாக, மனச்சிதைவு குறைவான மக்கள் வாழும் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாகப் பட்டியலிட்டிருந்தது.

15 வருடங்களுக்கு முன்னர் தான் ஆசியாவின் மிக நீண்ட சிவில் யுத்தங்களில் ஒன்றான இலங்கை உள்நாட்டு போர் நடந்து முடிந்தது. அண்மையிலிருந்து தான் மிகப்பெரும் வர்த்தக ரீதியிலான பெரும் பணவீக்கத்தையும், பொருட்களின் விலை உயர்வையும், அரசின் மாபெரும் ஊழல் நடவடிக்கைகளையும், பல பொது கட்டுமாணப்பணிகளை குத்தகைக்கு வெளிநாடுகளுக்கு விற்கும் போக்கினையும் இலங்கை சந்தித்து வருகிறது. அப்படி இருக்க இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி மக்களின் மனச் சிந்தனைகள் இவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பே இல்லையே, என்பது தானே உடனடியாக தோன்றும். ஆனால் அவர்கள் தங்களது ஆய்வின் முடிவில் உறுதியாக இருக்கின்றனர். 

mental state of the world : report

இதை கொஞ்சம் நிதானமாக ஆராய்ந்தால், இவ்வளவு வணிக, பிரிவினைவாத சுமைகளையும் சந்தித்தும், மனதளவில் பதற்றம் கொள்ளாமல், அழுத்தம் கொள்ளவிடாமல், நிதானமாக செயற்படும்  மக்கள் கொண்ட நாடு என்ற ரீதியில் தான் அந்த ஆய்வு இலங்கையை முன்னுதாரணப்படுத்துகிறது. 

மன ஆரோக்கியத்தில் எப்படி  இலங்கை  முன்னிலையில் நிற்க முடிகிறது ?

இந்தக் கேள்வி மனதில் இருந்து கொண்டிருந்த நிலையில், அதற்கான புரிதலைக் கோடிட்டுத் தருகிறது பூட்டான் திரைப்படமான " The Monk and The Gun" .

சுவிற்சர்லாந்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் Fribourg திரைப்பட விழாவில் (fiff) , புகழ்பெற்ற  பூட்டான் Butan திரைப்பட இயக்குனர் Pawo Choyning Dorji இன் இரண்டாவது முழு நீளத் திரைப்படம் ' The Monk and The Gun ' அங்கு காணக்கிடைத்தது. 

fiff.ch/fr Monk and Gun

இவருடைய முதலாவது முழு நீளத் திரைப்படம்   'Lunana : A Yark in the Classroom ' 2019 இல் ஆஸ்காருக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்கு பூட்டானால் பரிந்துரைக்கப்பட்டது. 

Fribourg நகரின் மிகப்பெரும் arena அரங்கின் ஆயிரக்கணக்கான இருக்கைகள்  பார்வையாளர்களால்  நிரம்பியிருக்க, கானொலி மூலம் திரையில் தோன்றிய இயக்குனர் Pawo, நேரடியாக வருகை தர முடியாததற்காக மிகவும் வருத்தப்பட்டதுடன் , "இந்த திரைப்படத்தில் அப்பாவித்தனத்தின் சக்தியை  காண்பிக்க விரும்பி எடுத்திருக்கிறேன். அதை நிராகரிப்பாகவோ, முட்டாள்தனமாகவோ எடுத்துவிடாதீர்கள். இம்மனிதர்கள், மிக நேர்மையான, ஆனால் எதையும் மறைத்து பழக்கப்பட்டவரக்ள் அல்ல " எனச்சொன்னார். 

அவரது உரையின் பின்னதாகப் படம் தொடங்கியது. 2006 இலிருந்து பூட்டானின்  மன்னராட்சியினால் ஒரு புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. இனிமேல், இந்நாட்டின் மக்கள் தங்களுக்கான தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கலாம். அதற்கான சுதந்திரத்தை அளித்து, கடும் மன்னராட்சி முறைமையை துறக்கிறேன் என்பதே அம்மன்னரின் புதிய அறிவிப்பு. இதன் மூலம் ஜனநாயக ஆட்சியின் கீழ் மக்களினால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கும் தலைவர்களை பெறும் சுதந்திரத்தை அந்நாடு பெற்றுக் கொண்டது. அதோடு இணையம், மேற்குலக அனைத்து நுகர்வுச் சுதந்திரத்தையும் அந்நாடு பெற்றுக்கொண்டது. இவற்றை நுகரும் இறுதி நாடுகளில் பூட்டானும் ஒன்று. 

பிறகென்ன நல்ல விடயம் தானே. மன்னரே விழிப்புணர்வு அடைந்து இந்த சுதந்திரங்களை கொடுத்துவிட்டதன் பின்னர் இதிலென்ன சிக்கலிருக்கிறது. இதை வைத்து கதை செய்ய என்னவிருக்கிறது என நீங்கள் கேட்கலாம். 

ஆனால் அங்கு தான் சிக்கலே. இதுவரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மன்னராட்சியின் கீழ், தாம் உண்டு, தமது வேலை உண்டு என வேறெந்த ஆசைகளிலும் அடிபட்டு இறங்காமல், ஒரு நிம்மதியான, மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம் என எண்ணியிருந்த மக்களுக்கு, இல்லை மக்கள் ஜனநாயகம் தான் சரி, என அதையே பின்பற்றுவோம் என  திடிரென ஒரு திட்டத்தை கொண்டுவரும் போது அவர்கள் எப்படி திணறிப்போகிறார்கள் என்பது தான் இத்திரைப்படத்தின் கதை. அதனை மெல்லிய நகைச்சுவையுடனும், மேற்குலகம் இது தான் சரி என திணிக்கும் அனைத்தும் எப்போதும் சரியாக இருக்கப்போவதில்லை எனும் நையாண்டியுடனும் படம் மெல்ல மெல்ல நகர்கிறது. 

ஒரு மன்னரே இப்படி தானாக தனது ஆட்சியுரிமையை துறக்கிறார் என்றால் அந்த மன்னராட்சியின் கீழ் மக்கள் நன்றாகத்தானே வாழ்ந்திருக்க முடியும். அவர் மக்களை மக்களாக மதிக்கும் ஒருவராகவே இருந்திருக்க முடியும் என எண்ணத்தோன்றுமல்லவா ?

ஜனநாயக முறைப்படி கட்சிகளுக்கு இடையில் சண்டையைப் பார்த்த  எனக்கு, பிடித்த ஒரு கட்சி கொள்கைக்கு வாக்களிப்போம் என அவர்கள் இதுவரை  தீர்மானித்ததில்லை என்பதும், வாக்குரிமை என்றால் என்ன என்பது கூட அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியிருக்கிறது என்பதும் புதிதாக இருந்தது.

படத்தின் திரைக்கதை படி, மன்னரின் கட்டளையின் கீழ் ஒரு நவீன ஜனநாயக ஆட்சியை அறிமுகப்படுத்தும் ஒரு இளைஞர் குழு, இந்த வாக்குரியிமையின் நன்மைகளை மக்களுக்கு விளங்கப்படுத்தவதற்காக ஒரு தேர்தலை ஒழுங்கு செய்து அதில் எப்படி வாக்களிப்பது என ஊர் ஊராக சென்று விளங்கப்படுத்துகிறார்கள், சிலருக்கு தொலைக்காட்சியெல்லாம் கொடுத்து, அதில் மேற்குலக ஜேம்ஸ்போண்ட் திரைக்காட்சிகளை காண்பித்து இடையிடையில் பூட்டான் மக்கள் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தை விளம்பரப்படுத்துகிறார்கள். 

இதனிடையில் ஒரு அமெரிக்க ஆடவன், பூட்டானிய இளைஞன் ஒருவனின் உதவியுடன், மிக அரியவகையான  பிரமாண்ட துப்பாக்கி ஒன்றை, ஒரு  பூட்டான் மலைவாழ் குடிமகனிடம் விலைகொடுத்து வாங்க முயற்சிக்கிறான். அவன் அரிய வகை ஆயுதங்களை சேகரிப்பவன். அந்த குடியானவன்ன் வீட்டில் அந்தப் புதியவகைத் துப்பாக்கியை  கண்டதும், மிகுந்த சந்தோஷப்பட்டு உங்களுக்கு 75000 டாலர்கள் கொடுக்கிறேன் என்கிறான். அதை பூட்டானிய தேசிய மொழியில் மொழிபெயர்க்க வேண்டிய இளைஞன் கொஞ்ச நேரம் தயங்குவான். பார்வையாளனாக நமது புத்தி எப்படி போகும், அவன் ஒரு விலை தனக்கு வைத்து, இன்னமும் பாதி விலைக்கு சொல்லித்தான் அந்த முதியவருக்கு மொழிபெயர்க்க போகிறான் என்பது தானே. ஆனால் அப்படி எதுவுமே அதில் நடக்காது. அவனும் அலட்டிக்கொள்ளாமல் அவர் பரிந்துரைத்த அதே விலையையே அப்படியே சொல்வான். ஆனால் அந்த பூட்டான் குடிமகனான முதியவர், இவ்வளவு எனக்கு அதிகம் என சொல்லி வாங்க மறுத்துவிடுவார். இப்படி படம் முழுவதும் பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. எந்த ஒரு தருணத்திலும் எவரும் நேர்மை தவறானவர்களாக இருக்க மாட்டார்கள். தங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், எதையுமே மறைக்க மாட்டார்கள். படம் முடிவடையும் போது அது சொல்லும் செய்தியும் அது தான். பேராசைப்படாத, பணத்தால் ஏமாற்றப்படாத நிம்மதியான, அத்தியாவசிய செலவுகளுடன் மாத்திரம், தமது இயற்கைக்குள் வாழும்  இம்மனிதர்களின் அப்பாவித்தனம், மிக மிக சக்தி வாய்ந்தது. அதை மாசுபடுத்திவிடாதீர்கள். நீங்களும் நேர்மையாக இருக்கப் பாருங்கள் என சொல்லி முடிகிறது.

இந்தத் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் இந்த பூட்டானின் மக்களை போல, இலங்கையின் கிராமத் தெருக்களில் சாதாரண மக்களோடு மக்களாக  பழகத்தொடங்கினீர்கள் எனில் எல்லாவற்றிற்கும் குறைபட்டுக்கொள்ளும் பண்பு அவர்களிடம் இருப்பதில்லை என்பதை கண்டுகொள்வீர்கள். ஆனால் இருப்பதை வைத்து, வரவேற்கும், விருந்தோம்பல் பண்பு நிரம்பி வழியும். அவர்களிடம் வலியும், வேதனையும், போர் வடுவும் இல்லை என்பதல்ல அதன் அர்த்தம். அவர்களிடம் இருக்கும் ஒரு அப்பாவித்தனமான நேர்மை, என் வாழ்க்கைக்கு நான் சரியாக, தர்மமாக வாழ்கிறேனா எனும் கேள்வியும், என் குடும்பம், என்னைச் சுற்றியுள்ள சிறியதொரு சமூகத்திற்கு என்னால் என்ன செய்ய முடிகிறது எனும் சிந்தனையும் அவர்களிடம் எப்போதும் இருக்கிறது. 

இலங்கையின் இயற்கை எழிலும், தூய்மையும், மண்னையும், கிராம மனங்களையும் போற்றிப்பாடும் பண்பாடும், கலாச்சாரமும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை  ஆச்சரியப்படுத்தவற்கு அதுவும் ஒரு காரணம்.  மன ஆரோக்கியம் குறித்த ஆய்வில்,  இலங்கை  முன்னிலையில் நிற்க முடிவதற்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும்.

இலங்கையோ பூட்டானோ அல்லது இந்த உலகின் அறியப்படாத எந்வொரு கிராமமோ எங்காயினும் வாழும், அத்ததைய மனங்களில், மேற்குலக வணிகநோக்கான நுகர்வுச் சந்தையையும், பணத்தை வைத்தே அனைத்தையும் மதிக்கும் மனப்போக்கினையும், பிரிவினைவாதத்தை தூண்டிவிடும் மத, இன கடுஞ்சார்பு கொள்கைகளையும் மேலும் மேலும் புகுத்தி நஞ்சாக்கிவிட வேண்டாம்,  என்பதே நம் அனைவரது வேண்டுகோளாக இருக்க முடியும்.


- 4தமிழ்மீடியாவுக்காக:  Fribourg லிருந்து ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula